தியாகதுருகம், ஜன.16-
தியாகதுருகம் அருகே பெரிய மாம்பட்டை அடுத்த சடையன்குளம் பகுதியில் 200-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இதற்கிடையே புயல் காற்று காரணமாக கடந்த 29-ந்தேதி முதல் மின்சாரம் தடைபட்டு இப்பகுதியில் குடிநீர் சப்ளை செய்யப்படவில்லை.
இதனால் அப்பகுதி மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டு வந்தனர்.
இதுகுறித்து சம்பந்தப்பட்ட துறையிடம் பலமுறை முறையிட்டும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை என கூறப்படுகிறது.
இந்த நிலையில் குடிநீர் விநியோகம் செய்யப் படாததால் ஆத்திரம் அடைந்த அப்பகுதி பெண்கள் மற்றும் பொதுமக்கள் காலி குடங்களுடன் இன்று காலை சேலம்- சென்னை மெயின்ரோட்டில் சாலை மறியலில ஈடுபட்டனர்.
இதுகுறித்து தகவல் அறிந்ததும் ஊராட்சி மன்ற துணைத்தலைவர் கன்னியம்மாள் கணேசன் மற்றும் வார்டு உறுப்பினர் சுப்பிரமணியன் ஆகியோர் விரைந்து வந்து சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். டேங்கர் லாரி மூலம் குடிநீரை வரவழைத்து சப்ளை செய்வதாக உறுதி அளித்தனர். மேலும் அதன்படி டேங்கர் லாரி மூலம் உடனடியாக குடிநீரும் சப்ளை செய்யப்பட்டது.
இதைத்தொடர்ந்து பெண்கள் மற்றும் பொதுமக்கள் மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர். சுமார் 30 நிமிடம் நடந்த சாலை மறியலால் அவ்வழியே போக்குவரத்து பாதிக்கப்பட்டது.