Recommendations
Recent Activity
மீஞ்சூர் அருகே கோஷ்டி மோதல்; 8 பேருக்கு வெட்டு- போலீசார் சென்ற வாகனம் நொறுக்கப்பட்டது
மீஞ்சூர், ஜன. 16-

மீஞ்சூர் அருகே உள்ள ஊரணம்பேடு கிராமத்தைச் சேர்ந்தவர் மாசிலாமணி. இவர் ஊரணம்பேடு காலனியில் கேபிள் டி.வி. தொழில் செய்து வரும் கார்த்திக்கிடம் கேபிள் டி.வி. இணைப்பு பெற்றிருந்தார். கடந்த சில நாட்களுக்கு முன்பு மாசிலாமணி தனியார் டிடிஎச் வாங்கியதை அடுத்து கேபிள் இணைப்பை துண்டிக்குமாறு கூறினார்.

கேபிள் இணைப்பை ஊழியர்கள் துண்டித்தபோது அவரது வீட்டில் இருந்த அலமாரி உடைந்தது. இது குறித்து அவர் கார்த்திக்கிடம் கேட்டபோது, அவர்களுக்குள் வாய்த்தகராறு ஏற்பட்டது. ஆத்திரம் அடைந்த கார்த்திக் மாசிலாமணியை தாக்கியதாக கூறப்படுகிறது. இதுபற்றி தெரிந்ததும் மாசிலாமணியின் ஆதரவாளர்கள் 20-க்கும் மேற்பட்டோர் கார்த்திக் வீட்டிற்கு சென்று ரகளையில் ஈடுபட்டனர்.

இதனை கண்ட அப்பகுதி மக்கள் 30-க்கும் மேற்பட்டோர் அவர்களிடம் தகராறு செய்தனர். இதனால் இரு தரப்பினரும் இடையே மோதல் ஏற்பட்டது. அவர்கள் ஒருவரை ஒருவர் கத்தி, அரிவாள் போன்ற பயங்கர ஆயுதங்களால் தாக்கிக் கொண்டனர். இதனால் அப்பகுதியே போர்க்களம் போல் காட்சி அளித்தது.

தகவல் அறிந்ததும் பொன்னேரி டி.எஸ்.பி. ஜெகதீஸ்வரன், இன்ஸ்பெக்டர்கள் ராதாகிருஷ்ணன், வெங்கடேசன், ராஜேந்திரன், சப்- இன்ஸ்பெக்டர்கள் குமார், கோவிந்தன் உள்பட 50-க்கும் மேற்பட்ட போலீசார் அங்கு விரைந்து வந்தனர். போலீசாரை பார்த்ததும் மோதலில் ஈடுபட்டவர்கள் சிதறி ஓடினார்கள். ஒரு கும்பல் காட்டூர் போலீசார் வந்த வாகனத்தை அடித்து நொறுக்கி விட்டு ஓடிவிட்டனர்.

மோதலில் ஊரணம்பேடு கிராமத்தைச் சேர்ந்த மாசிலாமணி, சதீஷ், செந்தில், யுவராஜ், காலனியைச் சேர்ந்த ஆறுமுகம், மனோகரன், சம்பத், ஏழுமலை ஆகிய 8 பேருக்கு அரிவாள் வெட்டு விழுந்தது. அவர்கள் சென்னை அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இது குறித்து இரு தரப்பினரும் கொடுத்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து சதீஷ்குமார், செந்தில்குமார், லோகநாதன், தாமோதரன், ராஜி, கோவிந்தசாமி ஆகிய 6 பேரை கைது செய்தனர்.

மேலும் பலரை தேடிவருகின்றனர். தொடர்ந்து அங்கு பதட்டமான நிலை நீடிப்பதால் ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். அவர்கள் ரோந்து சுற்றி வருகின்றனர். பொங்கல் நாளில் இரு தரப்பினரிடையே மோதல் ஏற்பட்டது அப்பகுதி மக்களிடையே பரபரப்பையும் அச்சத்தையும் ஏற்படுத்தி உள்ளது.