பாவூர்சத்திரம், ஜன. 13-
நெல்லை- தென்காசி மெயின்ரோட்டில் அடைக்கலப்பட்டினம் அருகே ரோட்டோரம் முட்புதருக்குள் ஒரு ஆண் குழந்தை அழுதபடி கிடந்தது. பிறந்து 3 நாட்களே ஆன அந்த குழந்தை துணியில் சுற்றி வீசப்பட்டிருந்தது.
அப்போது அந்த வழியே பாவூர்சத்திரம் அருகே உள்ள நாட்டார்பட்டியை சேர்ந்த சத்யா (வயது28) என்பவர் குழந்தையை மீட்டு பாவூர்சத்திரம் போலீசில் ஒப்படைத்தார்.
இன்ஸ்பெக்டர் ஜமால், சப்- இன்ஸ்பெக்டர் ராஜேந்திரன் மற்றும் போலீசார் அந்த குழந்தையை பாவூர்சத்திரம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் பரிசோதனை செய்து பின்னர் நெல்லை சரணாலயத்தில் ஒப்படைத்தனர். இதையடுத்து தொட்டில் குழந்தை திட்டத்தில் அந்த குழந்தை சேர்க்கப்பட்டு பராமரிக்கப்பட்டு வருகிறது.
குழந்தையை புதரில் வீசியவர் யார்? தவறான உறவில் பிறந்ததால் அந்த குழந்தை வீசப்பட்டதா என்பது பற்றி பாவூர்சத்திரம் போலீசார் விசாரித்து வருகிறார்கள்.