Recommendations
Recent Activity
அஞ்சுகிராமம் தீ விபத்தில் ரூ.4 லட்சத்து 13 ஆயிரம் சேதம்: போலீசார் விசாரணை
அஞ்சுகிராமம், ஜன.11-
 
அஞ்சுகிராமம் அருகே உள்ள புதுக்குளத்தை சேர்ந்தவர் செல்லத்துரை. தொழிலாளி. இவரது மனைவி செல்வராணி. கணவன், மனைவி இருவரும் நேற்று கூலி வேலைக்கு சென்றனர். மதியம் திடீரென செல்லத்துரையின் ஓலை குடிசை வீடு தீப்பிடித்து எரிந்தது. சிறிது நேரத்தில் காற்று வேகமாக வீசியதால் அருகில் உள்ள வீடுகளுக்கும் தீ மளமளவென பரவியது.  
 
அந்த பகுதியை சேர்ந்த மகேஸ்வரி என்பவர் புகை வருவதை பார்த்து வெளியே வந்த போது வீடுகள் தீப்பி டித்து எரிவதை கண்டு கூச்சலிட்டார். சத்தம்கேட்டு அக்கம்பக்கத்தினர் அங்கு விரைந்து வந்தனர். உடனே இதுகுறித்து தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
 
கன்னியாகுமரி, அஞ்சு கிராமம் பகுதிகளில் இருந்து தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்தனர். அவர்கள் 2 மணி நேரத்திற்கும் மேலாக போராடி தீயை அணைத்தனர். அதற்குள் செல்லத்துரை, மகேஸ்வரி, சுபா, சாந்தி, மேரி உள்பட 13 பேரின் குடிசை வீடுகள் முற்றிலும் எரிந்து சாம்பல் ஆனது.
 
வீடுகளை இழந்தவர்கள் கதறித்துடித்தனர். 13 வீடுகளிலும் சேர்த்து மொத்தம் 4 லட்சத்து 13 ஆயிரம் ரூபாய் மதிப்பிலான பொருட்கள் எரிந்து சாம்பலானதாக போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
 
செல்லத்துரையின் வீட்டில் இருந்து விளக்கு சரிந்து விழுந்து தீப்பிடித்திருக்கலாம் என அந்த பகுதி மக்கள் தெரிவித்தனர். எனினும் விபத்திற்கான உண்மையான காரணம் குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.