ஈரோடு, ஜன.1-
ஈரோடு மாவட்ட கலெக்டர் சண்முகம் விடுத்துள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:-
தற்போது புழக்கத்தில் உள்ள ரேஷன் கார்டுகளின் செல்லதக்க காலத்தை 1-1-2012 முதல் 31-12-2012 வரை மேலும் ஓராண்டிற்கு நீட்டித்து அரசு ஆணைகள் பிறப்பித்துள்ளது. அவ்வாறு புதுப்பிக்கும்போது புழக்கத்தில் உள்ள ரேசன் கார்டுகளில் வருடம் குறிப்பிடாமல் உள்ள உள்தாளின் மேல்பகுதியில் 2012 என முத்திரையிடவும் அரசு ஆணையிட்டுள்ளது.
குடும்பங்களின் ஏற்பட்டுள்ள மாற்றங்களின் அடிப்படையில் விவரங்களை குடும்ப அட்டைகளில் மேம்படுத்த வேண்டிய தேவை சிலருக்கு ஏற்பட்டு இருக்கலாம்.
எனவே குடும்ப அட்டைகளை முத்திரயிட்டு புதுப்பிக்கும்போது அட்டைகளில் குறிப்பிட்டுள்ள பெயர், முகவரி ஆகியவற்றில் பிழை திருத்தம் அல்லது மாற்றம், பெயர் சேர்த்தல், நபர் நீக்கல், கியாஸ் இணைப்பு விபரம் ஆகிய விவரங்களை வாய் மொழியாக சேகரித்து அதன் அடிப்படையில் ரேசன் கார்டு தகவல் தொகுப்பை மேம்படுத்தவும், அதனை தொடர்ந்து இந்த விபரங்களை பின்னர் தல விசாரணை செய்து குடும்ப அட்டைகளில் பதிவு செய்யவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.
ரேசன் கார்டுகளை புதுப்பிக்கும் பணி ஜனவரி 2012 மற்றும் பிப்ரவரி 2012 ஆகிய மாதங்களில் நடைபெற உள்ளது. எனவே குடும்ப தலைவர் அல்லது வயது வந்த குடும்ப உறுப்பினர்களில் ஒருவர் ரேசன் கடைக்கு பொருட்கள் வாங்கவோ அல்லது புதுப்பிக்க செல்லும்போதோ அங்காடி பணியாளர்களிடம் தேவையான மேற்கண்ட விவரங்களை வாய்மொழியாக தெரிவித்தால் போதுமானது. அந்த விவரங்கள் ரேஷன் கார்டு மற்றும் அங்காடி வழங்கல் பதிவேடு ஆகியவற்றில் குறியீடு எண்ணாக பதிவு செய்யப்பட்டவுடன் அங்காடியின் 2012-ம் ஆண்டைய வழங்கல் பதிவேட்டில் கையொப்பம் இட, இடது கை பெருவிரல் ரேகை பதிக்க கேட்டுக்கொள்ளப்படுகிறது.
இவ்வாறு கையொப்பம் இட்டு, கைரேகை பதித்தால்தான் ரேஷன் கார்டு புதுப்பித்தல் பணி முடிவுற்றதாக கருதப்படும். எனவே குடும்ப அட்டைதாரர்கள் நலன் கருதி சேகரிக்கப்படும் இந்த விவரங்களை ரேசன் கடை அங்காடியில் பொருள்கள் பெற செல்லும்போது ரேசன் கார்டு தாரர்கள், தாங்களே முன்வந்து, கேட்கும் தகவலை தெரிவித்து, குடும்ப அட்டையை புதுப்பித்து கொள்வதுடன் குடும்ப அட்டை புதுப்பித்தல் பணி செம்மையாக நடைபெற உங்களின் ஒத்துழைப்பினை நல்குமாறு பொதுமக்கள் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
இவ்வாறு கலெக்டர் கூறியுள்ளார்.