Recommendations
Recent Activity
மகளிர் சுய உதவிக் குழுவிடம் கடன் வாங்கிய பெண் மாயம்
பொள்ளாச்சி, டிச. 29-
 
பொள்ளாச்சி அருகே உள்ள சின்னாம் பாளையம் விநாயகர் கோவில் வீதியை சேர்ந்தவர் சின்னச்சாமி. இவரது மனைவி பானு (52). கணவன் - மனைவிக்கிடையே பணத் தகராறு ஏற்படும். இதனால் அடிக்கடி சண்டை உருவானது. அப்படி சண்டை ஏற்படும் சமயத்தில் பானு கோபித்து கொண்டு வீட்டை விட்டு வெளியேறி விடுவார்.
 
அதே பகுதியில் உள்ள பானுவில் அண்ணன் வீடு, மகள் சித்ரா வீடு அல்லது உறவினர்கள் வீட்டிற்கு சென்று விடுவார். 10 நாட்கள் முதல் ஒரு வாரம் வரை உறவினர்கள் வீட்டில் தங்கி விட்டு பின்னர் வந்து விடுவார். கடந்த 25 நாட்களுக்கு முன் சின்னச்சாமிக்கும், பானுவிற்கும் தகராறு ஏற்பட்டது.
 
வழக்கம் போல் பானு கோபித்து கொண்டு வீட்டை விட்டு வெளியேறி விட்டார். அவர் செல்லும் போது மகளிர் சுய உதவிக்குழுவிடம் ரூ. 10 ஆயிரம் கடன் வாங்கி சென்றுள்ளார். மேலும் செல்போனையும் எடுத்து சென்று விட்டார். வழக்கமாக 10 நாட்களில் வீடு திரும்பும் பானு இந்த முறை 25 நாட்கள் ஆகியும் வீடு திரும்பவில்லை. அவர் எங்கு சென்றார்? என்பது தெரிய வில்லை.
 
இது குறித்து சின்னச்சாமி பொள்ளாச்சி மகாலிங்கபுரம் போலீசில் புகார் செய்தார். அதில் எனக்கும் மனைவிக்கும் அடிக்கடி பணத் தகராறு ஏற்படுவது வழக்கம். உடனே பானு கோபித்து கொண்டு வெளியேறி விடுவார். வழக்கமாக 10 நாட்களில் வீடு திரும்பும் அவர் இந்த முறை 25 நாட்கள் ஆகியும் திரும்பவில்லை.
 
மேலும் மகளிர் சுய உதவிக் குழுவிடம் வாங்கிய ரூ. 10 ஆயிரம் கடனையும் கட்டவில்லை. நான் மிகவும் கஷ்டத்தில் இருப்பதால் என்னால் பணத்தை கட்ட முடியவில்லை. எனவே எனது மனைவி பானுவை கண்டு பிடித்து தாருங்கள் என கூறி உள்ளார்.
 
இது குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டனர். அப்போது பல திடுக்கிடும் தகவல்கள் தெரிய வந்தது. பானு பொள்ளாச்சியை சேர்ந்த சி.டி.சி., ஈஷா, ஆசிர்வாதம், முத்தூட் ஆகிய மகளிர் சுய உதவிக் குழுக்களிடம் தலா ரூ. 10 ஆயிரம் வீதம் கடன் வாங்கி இருக்கிறார். மேலும் தீபம் என்ற குழுவிடமும் கடன் பெற்றுள்ளார். ஆனால் அந்த பணத்தை திருப்பி செலுத்த வில்லை. 4 தவணை மட்டும் செலுத்தி இருப்பதாக தெரிகிறது.
 
மேலும் பானு ஏலச்சீட்டு நடத்தி வந்துள்ளார். அதில் ரூ. 1 1/2 லட்சம் வரை பணம் வசூலித்துள்ளார். அதனையும் திருப்பி கொடுக்க வில்லை. மோசடி செய்த பணத்தை தனது மருமகனுக்கு ஸ்டுடியோ வைத்து கொடுத்துள்ளார். பானு கடன் வாங்கி விட்டு ஏமாற்றியதால் அவர் உறுப்பினராக உள்ள மகளிர் சுய உதவிக் குழுக்களை சேர்ந்தவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.
 
அவர்கள் தங்களது சொந்த பணத்தில் இருந்து ரூ. 500, 300 என கட்டி வருகிறார்கள். இது குறித்து பானுவின் கணவர் சின்னச்சாமியிடம் கேட்டால் அவர் தகாத வார்த்தைகளால் திட்டுவதாக மகளிர் சுய உதவிக் குழு உறுப்பினர்கள் தெரிவித்துள்ளனர். எனவே இந்த மோசடியில் சின்னச்சாமிக்கும் தொடர்பு இருக்கும் என அவர்கள் தெரிவித்துள்ளனர். இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.