மணப்பாறை டிச. 25-
மணப்பாறை ஒன்றியத்தில் கடந்த அ.தி.மு.க ஆட்சி காலத்தில் கட்டப்பட்டு பயன்பாட்டில் இல்லாமல் இருந்த மகளிர் சுகாதார வளாகங்கள் தற்போது சுத்தம் செய்யப்பட்டுள்ளது. இதை மணப்பாறை ஒன்றியக்குழு தலைவர் தனலெட்சுமி வடிவேல் பார்வையிட்டார். இந்த சுகாதார வளாகங்கள் விரைவில் மக்கள் பயன்பாட்டிற்காக திறந்து விடப்பட உள்ளது.
கடந்த அ.தி.மு.க ஆட்சி காலத்தில் ஊராட்சி பகுதியில் கிராமப்புறங்களில் மகளிருக்காக மகளிர் சுகாதார வளாகங்கள் கட்டப்பட்டன. இதில் ஒரு சில இடங்களில் செயல்பட்டது. ஆனால் பல இடங்களில் கட்டி முடிக்கப்பட்டு அப்படியே கிடப்பில் போடப்பட்டது.
கடந்த தி.மு.க ஆட்சியில் இதை பயன்படுத்துவதற்கான எந்த நடவடிக்கையும் இல்லை. இந்நிலையில் தமிழக முதல்வர் ஜெயலலிதா கிராமப் புறங்களில் உள்ள மகளிர் சுகாதார வளாகங்கள் சுத்தம் செய்யப்பட்டு அதை வர்ணம் பூசியும், ஊனமுற்றோர்களுக்காக தனி கழிப்பறையும் அமைத்து விரைவில் மக்கள் பயன்பாட்டிற்கு திறந்து விட வேண்டும் மாவட்ட ஆட்சித்தலைவர்களுக்கு உத்தரவிட்டிருந்தார்.
இதையடுத்து மாவட்ட ஆட்சித்தலைவரின் அறிவுத்தலின் பேரில் மணப்பாறை ஒன்றியத்தில் உள்ள 21 ஊராட்சிகளிலும் பாலடைந்து முட்புதர்கள் மண்டிக்கிடந்த மகளிர் சுகாதார வளாகங்கள் மணப்பாறை வட்டார வளர்ச்சி அலுவலர்கள் சையது சுல்தான் மக்தூம், தமிழ்செல்வன் ஒன்றியக்குழுத்தலைவர் தனலெட்சுமி வடிவேல் தலைமையில், ஒன்றியக்குழு உறுப்பினர்கள், ஊராட்சித்தலைவர்கள், ஊராட்சி உறுப்பினர்கள் முன்னிலையில் தூய்மைப்படுத்தும் பணி துவங்கி தற்போது வெள்ளை அடிக்கப்பட்டு புதுகட்டிடம் போல் உள்ளது.
மணப்பாறை ஒன்றியத்தில் எப்.கீழையூர், பொடங்குப்பட்டி, சூளியாபட்டி, சீகம்பட்டி ஊராட்சி ஆர்.டி.ஓ ஆபீஸ், உசிலம்பட்டி ஊராட்சி பழைய காலணி ஆகிய ஊராட்சிகளில் உள்ள மகளிர் சுகாதார வளாகங்களை ஒன்றியக்குழு தலைவர் தனலெட்சுமி வடிவேல், ஒன்றிய பொறியாளர் ராஜேஸ்வரி, ஓவர்சியர் சியாமளா, தர்மராஜ், மற்றும் அதிகாரிகள் பார்வையிட்டனர்.
மணப்பாறை ஒன்றியத்தில் உள்ள அனைத்து ஊராட்சிகளிலும் பணிகள் முடிவடைந்து விட்டாதால் இந்த மகளிர் சுகாதார வளாகங்கள் விரைவில் திறப்பட்டு மக்களின் பயன்பாட்டிற்காக விடப்படும்.