Recommendations
Recent Activity
நீடாமங்கலம் தாசில்தார் அலுவலகத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் திடீர் ஆய்வு
நீடாமங்கலம், டிச.23-
 
நீடாமங்கலம் தாசில்தார் அலுவலகத்திற்கு மாவட்ட வருவாய் அலுவலர் ந.ஜீவகனி வருகை தந்தார். பின்னர் ரிஷியூர், கானூர் அன்னவாசல் கிராமங்களுக்குச் சென்ற அவர் ஆதிதிராவிடர்களுக்கு இலவச வீட்டுமனைப்பட்டா வழங்கிட தேர்வு செய்யப்பட்ட இடங்களையும், மயானப் பாதை அமைத்திட தேர்வு செய்யப்பட்ட இடத்தையம் பார்த்தார். கிராம நிர்வாக அலுவலர்கள் அலுவலகங்களை பார்வையிட்ட அவர், சிறு பழுதுகளை உடனே சரிசெய்ய கேட்டுக்கொண்டார்.
 
பின்னர் ரிஷியூர், பெரம்பூர், கானூர் அன்னவாசல் கிராம நிர்வாக அலுவலகங்களின் பதிவேடுகளை பர்வையிட்ட மாவட்ட வருவாய் அலுவலர் பயிர் விவரங்கள் பதிவு செய்யப்பட்ட ஆவணங்களை பார்த்து கிராம நிர்வாக அலுவலர்களுக்கு தக்க அறிவுரைகளையும் வழங்கினார்.
 
தொடர்ந்து நீடாமங்கலம் தாசில்தார் அலுவலகத்தில் நடந்துவரும் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், நீக்கல் பணிகளை ஆய்வு செய்ததுடன், இலவச வீட்டு மனைப்பட்டா வழங்கு வதற்கான பணிகளையும் ஆய்வு செய்தார். வட்ட வழங்கல் அலுவலர் வசந்தியிடம் ரேஷன்கார்டு விண்ணப்பங்கள் பற்றி கேட்டறிந்த அவர் உடன் விசாரித்து முடிவு செய்ய உத்தரவிட்டார். வட்ட சார்ஆய்வாளர்கள் பெரியசாமி, ராமையன் ஆகியோரிடம் பட்டா மாறுதல், இலவச வீட்டுமனைப்பட்டா குறித்து கேட்டறிந்த மாவட்ட வருவாய் அலுவலர் ஜீவகனி, பணிகள் முன்னேற்றம் பற்றி ஆய்வு செய்து குறியீட்டை அடைய கேட்டுக்கொண்டார்.
 
ஆய்வின்போது தாசில்தார் சு.வைத்திய நாதன், தலைமையிடத்து தாசில்தார் சின்னதுரை, சிறப்பு செயலாக்கத்திட்ட துணை தாசில்தார் மு.நாகராஜன், மாவட்ட ஆதிதிராவிடர் நல அலுவலர் சசிகலா, ஆதிதிராவிடர் நல தனி தாசில்தார் காளேஸ்வரன், மண்டல துணை தாசில்தார் செல்வி மற்றும் வருவாய் அலுவலர்களும், கிராம நிர்வாக அலுவலர்களும் வருவாய்த்துறை ஊழியர்களும் உடனிருந்தனர்.