எஸ்.எம்.கிருஷ்ணா மீது ஊழல் வழக்கு:
பாராளுமன்றத்தில்
அமளி-ஒத்திவைப்பு;
மேல்-சபையும் முடங்கியது
New Delhi
வெள்ளிக்கிழமை,
டிசம்பர் 09,
2:28 PM IST
0
கருத்துக்கள்
புதுடெல்லி, டிச. 9-
பாராளுமன்றத்தில் எதிர்க்கட்சிகள் இன்றும் அமளியில் ஈடுபட்டதால் பிற்பகல் வரை ஒத்திவைக்கப்பட்டது. பாராளுமன்றத்தின் குளிர்கால கூட்டத் தொடர் அன்னிய முதலீடு அனுமதி பிரச்சினை காரணமாக 9 நாட்களாக முடங்கியது.
இதையடுத்து அன்னிய முதலீடு அனுமதியை மத்திய அரசு நிறுத்தி வைப்பதாக அறிவித்தது. இதனால் நேற்று முன்தினம் பாராளுமன்றம் அமைதியாக நடந்தது. அந்த அமைதி நீடிக்க வில்லை. நேற்று ப.சிதம்பரம் ராஜினாமா செய்யக் கோரி பாரதீய ஜனதா, அ.தி.மு.க. எம்.பி.க்கள் பாராளுமன்றத்தில் பிரச்சினையை கிளப்பியதால் இரு அவைகளும் ஒத்திவைக்கப்பட்டன.
இன்று காலை 11 மணிக்கு பாராளுமன்றம் மீண்டும் கூடியது. எதிர்க்கட்சி எம்.பி.க்கள் சுரங்க ஊழல் புகாரில் மத்திய மந்திரி எஸ்.எம்.கிருஷ்ணா மீது கர்நாடக லோக் ஆயுக்தா போலீசார் எப்.ஐ.ஆர். பதிவு செய்து இருப்பது பற்றி பிரச்சினை எழுப்பினார்கள். அவர் ராஜினாமா செய்ய வேண்டும் என்று கோஷம் எழுப்பினார்கள். அப்போது ஆந்திர காங்கிரஸ் எம்.பி.க்கள் தெலுங்கானா பிரச்சினை பற்றிய பேனர்களை காட்டியும், கோஷம் எழுப்பியபடியும் இருந்தனர்.
ஒருங்கிணைந்த ஆந்திராவுக்கு உத்தரவாதம் அளிக்க வேண்டும் என்றனர். ஒரே சமயத்தில் பல பிரச்சினைகள் எழுப்பப்பட்டதால் சபையில் அமளி ஏற்பட்டது. இதனால் சபை பிற்பகல் வரை ஒத்தி வைக்கப்பட்டது.
இதே போல் டெல்லி மேல்-சபையிலும் எஸ்.எம்.கிருஷ்ணா ராஜினாமா செய்ய வேண்டும் என்று பாரதீய ஜனதா எம்.பி.க்கள் கோரிக்கை விடுத்தனர். எஸ்.எம்.கிருஷ்ணா மத்திய மந்திரி பதவியில் நீடிக்க அனுமதிக்க கூடாது. இதுபற்றி விவாதிக்க கேள்வி நேரத்தை ஒத்தி வைக்க வேண்டும் என்று வெங்கையாநாயுடு கூறினார்.
அவருக்கு ஆதரவாக மற்ற பாரதீய ஜனதா எம்.பி.க்கள் கோஷம் எழுப்பினர். இதனால் சபையில் குழப்பம் நிலவியது. இதைத் தொடர்ந்து பிற்பகல் 2.30 மணி வரை சபை தலைவர் ஹமீத் அன்சாரி ஒத்திவைத்தார்.
0
கருத்துக்கள்