Recommendations
Recent Activity
ஆதி திராவிடர் மாணவர் விடுதிகளுக்கு ரூ. 46 1/2 கோடி செலவில் புதிய கட்டிடங்கள் ஜெயலலிதா உத்தரவு
சென்னை, டிச. 8-
 
தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-
 
ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினரின் சமூக, பொருளாதார மற்றும் கல்வி வளர்ச்சியை பெருக்கு வதற்காக முதல்-அமைச்சர் ஜெயலலிதா தலைமையிலான அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.   ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறையின் கீழ் 1,254 ஆதி திராவிடர் நல விடுதிகளும், 40 பழங்குடியினர் நல விடுதிகளும், 296 பழங்குடியினர் அரசு உண்டி உறைவிடப் பள்ளிகளும் இயங்கி வருகின்றன.
 
இவற்றிற்கு சொந்த கட்டடங்கள் கட்டப்படவேண்டும் என்று முதல்- அமைச்சர் ஜெயலலிதா ஆணையிட்டுள்ளார். இதன் அடிப்படையில், தற்பொழுது வாடகை கட்டடங்களில் இயங்கி வரும் 93 ஆதி திராவிட விடுதிகளுக்கு 46 கோடியே 50 லட்சம் ரூபாய் செலவில் சொந்தக் கட்டடம் கட்டிக் கொடுக்க முதல்-அமைச்சர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார்.
 
தற்பொழுது சொந்தக்கட்டடம் கட்டுவதற்கு இடம் தயாராக உள்ள, வாடகை கட்டடங்களில் இயங்கி வரும் 42 விடுதிகளுக்கு சொந்தக் கட்டடம் கட்ட 21 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்தும் உத்தரவிட்டுள்ளார்.   இதன்படி ஈரோடு மாவட்டம், பவானி, தர்மபுரி மாவட்டம், தீர்த்தமலை, காளிப்பேட்டை, மொரப்பூர், தர்மபுரி, கரூர் மாவட்டம், புன்னம், கன்னியாகுமரி மாவட்டம், திங்கள் சந்தை, பெரம்பலூர் மாவட்டம், குரும்பலூர், நெய்குப்பை, ஆதனூர், பெரம்பலூர், புதுக்கோட்டை மாவட்டம், ரெகுநாதபுரம், தஞ்சாவூர் மாவட்டம், பேராவூரணி, திருவாரூர் மாவட்டம், திருவாருர், சவளக்காரன், புத்தாகரம், திருப்பூர் மாவட்டம், சேவூர், திருவள்ளுர் மாவட்டம், கோலப்பன்சேரி, கண்டிகை, நாகப்பட்டினம் மாவட்டம், வெட்டியக்காடு, வேலூர் மாவட்டம், குடியாத்தம், விருதுநகர் மாவட்டம், மல்லாங்கிணறு, காரியாப்பட்டி. விழுப்புரம் மாவட்டம், பனையபுரம், சேலம் மாவட்டம், ஆரகளுர், திருவண்ணாமலை மாவட்டம்,
 
மேலராணி, திருச்சிராப்பள்ளி மாவட்டம், எரக்குடி, திருத் தலையூர், தேனி மாவட்டம், பொம்மிநாயக்கன்பட்டி, கடமலைக்குண்டு, மயிலாடும் பாறை, ஆண்டிப்பட்டி, காமாட்சிபுரம், தூத்துக்குடி மாவட்டம், எம்.கே.நகர், கரிசல்குளம்பட்டி, மதுரை மாவட்டம், அச்சம்பட்டி, பரவை, ஊமச்சிக்குளம், மதுரை, ராமநாதபுரம் மாவட்டம், ஆர்.எஸ்.மங்கலம், பரமக்குடி ஆகிய 42 இடங்களிலுள்ள ஆதிதிராவிடர் நல விடுதிகளுக்கு சொந்த கட்டடம் கட்டப்படும்.
 
தமிழக அரசின் இந்த நடவடிக்கையால், ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியின மாணவ, மாணவியர் மிகவும் பயன்பெறுவர். இதனால் பள்ளி, கல்லூரி செல்பவர்களின் எண்ணிக்கை கூடுதலாகும். இடையில் படிப்பினை விட்டுச் செல்பவர்களின் எண்ணிக்கையும் கணிசமாக குறைவதற்கு வாய்ப்பு ஏற்படும்.
 
 இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.