சென்னை, நவ 23-
தமிழக தீவிரவாதி தவுபீக் இறைவன் ஒருவனே என்ற பெயரில் மறைமுகமாக தீவிரவாத இயக்கம் நடத்திய திடுக்கிடும் தகவல் வெளியாகி உள்ளது. தஞ்சை மாவட்டம் அதிராம்பட்டினத்தைச் சேர்ந்த தீவிரவாதி தவுபீக். இவன் தமிழ்நாட்டில் நடந்த பல்வேறு தீவிரவாத செயல்களில் தொடர்புடையவன்.
கடந்த 2008-ம் ஆண்டு முதல் தலைமறைவாக இருந்து வந்தான். டெல்லி அருகே உத்தர பிரதேச மாநில எல்லையில் தவுபீக் பதுங்கி இருப்பதாக தமிழக சிறப்பு புலனாய்வு குழுவுக்கு தகவல் கிடைத்தது.
இதையடுத்து போலீஸ் படை உத்தரபிரதேசம் விரைந்தது. அவர்கள் அம்மாநில தீவிரவாத தடுப்பு படையுடன் இணைந்து நொய்டாவில் உள்ள பஸ் நிலையத்தில் அவனை கைது செய்தனர். தமிழ்நாட்டில் உள்ள வழக்குகள் பற்றி விசாரணை நடத்துவதற்காக அவனை சென்னைக்கு கொண்டு வருகிறார்கள்.
கடந்த 1997-ல் சென்னை கொடுங்கையூரில் ஏராளமான வெடி பொருள்கள் பதுக்கி வைத்திருந்தது, 2008-ல் இந்து முன்னணி தலைவர் ராமகோபாலனை தீர்த்துகட்ட முயன்றது உள்பட பல முக்கிய வழக்குகளில் இவனுக்கு தொடர்பு உள்ளது. தமிழ்நாடு மட்டுமல்லாது 2002-ல் மும்பையில் நடந்த குண்டு வெடிப்பிலும் ஐதராபாத், காட்கோபர் நகரங்களில் நடந்த குண்டு வெடிப்புகளிலும் சம்பந்தப்பட்டவன் மும்பை போலீசாரிடம் சிக்கிய இவன் பொடா சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்க்பட்டான். இவனுடன் மேலும் 7 பேர் பொடா சட்டத்தில் கைதாகி இருந்தனர்.
இதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில் 3 ஆண்டு சிறைவாசத்துக்குப்பின் விடுதலையானான். அதன் பிறகு அவன் தலைமறைவாகி விட்டான். இவனுக்கு பாகிஸ்தானைச் சேர்ந்த லஸ்கர்-இ-தொய்பா இயக்கத்துடன் நெருங்கிய தொடர்பு இருப்பது தெரிய வந்துள்ளது. அவர்களிடம் இருந்து பணம் மற்றும் பல்வேறு உதவிகளைப் பெற்று தமிழ்நாட்டில் ரகசியமாக தனி இயக்கம் நடத்தி வந்தான்.
வெளியில் புதிய பார்வை, இறைவன் ஒருவனே என்ற பெயரில் இயக்கங்களுக்கு பெயர் வைத்துக் கொண்டு உள்ளுக்குள் அதற்கு “முஸ்லிம் ராணுவ படை” என்று பெயரிட்டு நடத்தி வந்தான். வன்முறைச் சம்பவங்கள் அடங்கிய சி.டி.க்கள் மற்றும் பிரசார போஸ்டர்கள் மூலம் இளைஞர்கள் மத்தியில் தவறான கண்ணோட்டத்தை உருவாக்கி அவர்களை வன்முறையில் ஈடுபட திட்டமிட்டு இருந்ததும் குண்டு வெடிப்பு சதி திட்டம் தீட்டியதும் போலீஸ் விசாரணையில் தெரிய வந்தது.
அதிராம்பட்டினத்தில் பெற்றோருடன் வசித்து வந்த தவுபீக் வேலை தேடி சவுதி அரேபியா சென்றான். அப்போது அவனுக்கு அங்குள்ள தீவிரவாத இயக்கங்களுடன் தொடர்பு ஏற்பட்டது. அவர்கள் தவுபீக்கை மூளைச் சலவை செய்து தீவிரவாதியாக மாற்றினார்கள். தமிழகம் திரும்பியதும் தனது தீவிரவாத பிரசாரத்தை தொடங்கினான். சென்னையில் மண்ணடி உள்பட பல இடங்களில் தங்கி இருந்து ரகசியமாக செயல்பட்டு வந்தான். அதன் பிறகு லஸ்கர்-இ-தொய்பா இயக்கத்துடன் தொடர்பு ஏற்பட்டது.
தமிழ்நாடு தவிர மும்பை, ஐதராபாத், கட்கோபர் நகரில் உள்ள உள்ளூர் தீவிரவாதிகளுடன் இணைந்து செயல்பட்டான். தமிழ்நாட்டில் குண்டு வெடிப்பு சதிக்கு திட்டமிட்டு இருந்ததால் அவனது நட மாட்டத்தை தமிழக சிறப்பு புலனாய்வு பிரிவு போலீசாரும், கியூ பிராஞ்ச் போலீசாரும் தீவிரமாக கண்காணித்து தேடி வந்தனர். இதனால் தமிழ்நாட்டுக்குள் அவனால் நுழைய முடியிவல்லை.
மும்பை, ஐதராபாத் போலீசாரும் தேடியதால் அவன் நேபாளத்துக்கு விமானத்தில் தப்பிச் செல்ல திட்டமிட்டான். இதற்காக பாஸ் போர்ட் மற்றும் டிக்கெட் எடுக்க முயற்சி செய்தான். அப்போது அவன் மீது அதிகாரிகளுக்கு சந்தேகம் ஏற்பட்டதால் போலீசில் சிக்கிக் கொண்டான். உ.பி. மேற்கு மண்டல தீவிரவாத தடுப்பு போலீஸ் அதிகாரி நாராயன்மிஸ்ரா அவனிடம் விசாரித்த போது தமிழ்நாட்டில் தேடப்படும் தீவிரவாதி என தெரிய வந்தது.
இதையடுத்து அவன் தமிழக போலீசாரிடம் ஒப்படைக்கப்பட்டான். போலீசார் தவுபீக்கை சென்னை அழைத்து வந்து விசாரணை நடத்த திட்ட மிட்டுள்ளனர். இதில் அவனது சதித்திட்டம் பற்றிய மேலும் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகும்.