Recommendations
Recent Activity
லஞ்சம் வாங்கியபோது இன்ஸ்பெக்டர் தப்பி ஓட்டம்; தனிப்படை தேடுகிறது
ஆலந்தூர், நவ. 22-
 
ஆதம்பாக்கம் - மேடவாக்கம் சாலையில் கியாஸ் ஏஜென்சி நடத்தி வருபவர் ஜோசப் பென்சிகர்.   இவரிடம் ஆதம்பாக்கம் குற்றப்பிரிவு இன்ஸ்பெக்டர் சவுந்திரராஜன் சென்று நீங்கள் வெளி மார்க்கெட்டில் கியாஸ் சிலிண்டர் விற்பனை செய்கிறார்கள். இதுபற்றி வழக்குப்பதிவு செய்யாமல் இருக்க வேண்டும் என்றால் தனக்கு மாதம் ரூ.5 ஆயிரம் லஞ்சம் தரவேண்டும் என்று மிரட்டினார்.
 
இது குறித்து ஜோசப் பென்சிகர் மறுத்தபோதும் அவரது நிறுவனத்துக்கு சென்று ஊழியர்களை மிரட்டியதாகவும், கியாஸ் சப்ளை செய்யும் ஊழியர் களை போலீஸ் நிலையத்தில் பிடித்து வைத்து விசாரித்து வந்ததாகவும் கூறப்படுகிறது. இன்ஸ்பெக்டரின் தொல்லை தாங்காமல் ஜோசப் பென்சிகர், சென்னை லஞ்ச ஊழல் கண்காணிப்பு மற்றும் தடுப்புப்பிரிவு டி.ஐ.ஜி. வெங் கட்ராமனிடம் புகார் செய்தார்.  
 
இதையடுத்து லஞ்ச ஒழிப்பு அதிகாரிகள் பென்சிகரிடம் ரூ.5 ஆயிரத்தை கொடுத்து சவுந்தரராஜனிடம் லஞ்சமாக வழங்குமாறு அறிவுறுத்தினர். நேற்று இரவு 9.30 மணி அளவில் பென்சிகர் போலீஸ் நிலையத்தில் இன்ஸ்பெக்டர் சவுந்திரராஜனை சந்தித்து லஞ்சப்பணத்தை கொடுத்தார். அப்போது மறைந்து நின்ற லஞ்ச ஒழிப்பு டி.எஸ்.பி. பொன்னுசாமி, இன்ஸ்பெக்டர்கள் அசோகன், செல்லமுத்து, உச்சப்பட்டி பரமசாமி ஆகியோர் அவரை பிடிக்க முயன்றனர்.  
 
சுதாகரித்துக் கொண்ட சவுந்திரராஜன் அவர்களை தள்ளி விட்டு தப்பி ஓடினார். கையில் இருந்த லஞ்சப்பணத்தை தூக்கி வீசி விட்டு ஓடினார். அவரை லஞ்ச ஒழிப்பு போலீசாரும் விரட்டினர். சுமார் 1 மணி நேரம் விரட்டியும் சுடுகாட்டில் புகுந்து இன்ஸ்பெக்டர் சவுந்திரராஜன் தப்பினார். சீருடையில் இருந்த இன்ஸ்பெக்டரை மப்டியில் இருந்த போலீசார் விரட்டிச்சென்றதை சாலையில் நின்ற பொதுமக்கள் அதிர்ச்சியுடன் வேடிக்கை பார்த்தனர்.
 
தப்பிய இன்ஸ்பெக்டர் சவுந்திரராஜன் கொடுங்கையூரில் உள்ள அவரது வீட்டுக்குச்சென்று இருக்கலாம் எனக்கருதி போலீசார் அங்கு சென்று பார்த்தனர். ஆனால் கண்டுபிடிக்க முடியவில்லை. இன்ஸ்பெக்டர் சவுந்திரராஜன் சொந்த ஊர் சேலம். எனவே அவர் அங்கு சென்றிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது. அவரை பிடிக்க தனிப்படை போலீசார் சேலம் சென்று உள்ளனர்.