வாழப்பாடி, நவ. 21-
சேலம் மாவட்டம் மேச்சேரி பகுதியை சேர்ந்தவர் குட்டி(எ) பரசுராமன்(35). அதே பகுதியை சேர்ந்த உறவினரான சுமதி என்ற பெண்ணை திருமணம் செய்து கொண்டார். அந்த பெண்ணிற்கு ஒரு ஆண் குழந்தை பிறந்த நிலையில் அவரை விரட்டியடித்த பரசுராமன், கற்பகம் என்பவரை 2-ம் திருமணம் செய்து கொண்டார்.
கற்பகத்திற்கு இரு மகன்களும் இரு மகள்களும் உள்ளனர். இதற்கிடையே ஆத்தூர் அடுத்த தென்னங்குடி பாளையம் பகுதிக்கு கட்டிட வேலைக்கு சென்ற பரசுராமன், பிரியா என்ற பெண்ணிற்கு காதல் வலைவீசி 3-ம் திருமணம் செய்தார். ஒரு பெண் குழந்தைக்கு தாயான பிரியாவையும் பரசுராமன் விரட்டி விட்டதாக கூறப்படுகிறது.
சில மாதங்களுக்கு முன், 2-வது மனைவி கற்பகம் மற்றும் நான்கு குழந்தைகளுடன் வாழப்பாடி இந்திராநகர் பகுதியில் குடியேறிய பரசுராமன், பக்கத்து வீட்டில் வசித்த சேலம் அரசு கல்லுரியில் பி.பி.ஏ., முதலாமாண்டு மாணவியான சங்கீதா(18) என்பவரிடம் பழகினார். அவருக்கு திருமண ஆசைகாட்டிய பரசுராமன் கடந்த ஆகஸ்ட் 23ம் தேதி அவரை கடத்தி சென்று விட்டார்.
செப்டம்பர் 9ம் தேதி தனது மகள் கடத்தப்பட்டது குறித்து அவரது தாயார் காந்தி புகாரின் பேரில், வாழப்பாடி போலீசார் வழக்கு பதிவு செய்தனர். முதற்கட்ட விசாரணையில் கல்லூரி மாணவியை கடத்தி சென்ற பரசுராமன் சுமதி, கற்பகம், பிரியா, சங்கீதா மட்டுமின்றி வேறு பெண்களையும் ஏமாற்றி திருமணம் செய்து கொண்டு கல்யாண மன்னனாக வலம் வந்துது தெரியவந்தது.
இளம் பெண்களை ஆசை வார்த்தை கூறி மயக்கி கடத்தி சென்று திருமணம் செய்து வரும் கல்யாண மன்னன் பரசுராமனை பிடிக்கவும், அவரால் கடத்தி செல்லப்பட்ட கல்லூரி மாணவியை மீட்கவும் வாழப்பாடி போலீசார் தனிப்படை அமைத்து தீவிர தேடுதல் வேட்டை நடத்தி வருகின்றனர்.