சென்னை, நவ. 17-
தமிழகத்தில் நில அபகரிப்பு மற்றும் நில மோசடி தொடர்பாக போலீசார் தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறார்கள். தி.மு.க. முன்னாள் அமைச்சர்கள் மற்றும் நிர்வாகிகள் பலர் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்நிலையில் நேற்று காலை தி.மு.க. எம்.பி.யும் நடிகருமான ஜே.கே. ரித்தீஷ் நில அபகரிப்பு புகாரில் சென்னையில் கைது செய்யப்பட்டு வேலூர் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
ஸ்ரீபெரும்புதூரை அடுத்த பாப்பாங்குழி கிராமத்தைச் சேர்ந்த சாமிக்கண்ணு என்பவரின் 1.45 ஏக்கர் நிலத்தை போலி ஆவணங்கள் தயாரித்து மோசடி செய்த குற்றத்துக்காக ரித்தீஷ் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. ரித்தீஷ் நில மோசடியில் ஈடுபட்டது எப்படி என்பது குறித்து பரபரப்பான பின்னணி தகவல்கள் கிடைத்துள்ளன. அதுபற்றிய விவரம் வருமாறு:-
பாப்பாங்குழி கிராமத்தில் உள்ள சாமிக்கண்ணுவுக்கு சொந்தமான நிலத்தை வாங்குவதற்கு ரித்தீஷ் அவரிடம் சென்று பேசியுள்ளார். நில புரோக்கர் ஒருவர் மூலமாக சாமிக்கண்ணுவுக் கும், ரித்தீசுக்கும் அறிமுகம் ஏற்பட்டுள்ளது. சாமிக்கண்ணுவிடம் இருந்து 25 சென்ட், 35 சென்ட், 37 சென்ட் என பல தவணைகளில் ரித்தீஷ் நிலம் வாங்கியுள்ளார். இதற்கான பத்திரப்பதிவு முறைப்படி நடை பெற்றுள்ளது. இதன் அருகில் உள்ள 1.45 ஏக்கர் நிலத்தையும் தனக்கு கொடுத்து விடுமாறு ரித்தீஷ் கேட்டுள்ளார். ஆனால் சாமிக்கண்ணு அந்த இடத்தை நான் இப்போது விற்பனை செய்யவில்லை என்று கூறி விட்டார்.
கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர் பத்திரப்பதிவு நடைபெற்ற நாளில் இருந்து 1.45 ஏக்கர் நிலத்தை குறி வைத்து ரித்தீஷ் காய் நகர்த்தி வந்துள்ளார். இதற்காக பலமுறை சாமிக்கண்ணுவை தொடர்பு கொண்டு பேசியுள்ளார். ஆனால் நிலத்தை விற்பதற்கு சாமிக்கண்ணு சம்மதிக்க வில்லை. இதையடுத்து போலி ஆவணங்களை தயாரித்து சாமிக்கண்ணுவின் நிலத்தை அபகரிக்க ரித்தீஷ் முடிவு செய்தார். இதன்படி முதலில் பத்திரப்பதிவு செய்யப்பட்ட நில பத்திரத்தில் இருந்து சாமிக்கண்ணுவின் போட்டோவை கிழித்து எடுத்து போலி பத்திரம் தயாரிக்கப்பட்டுள்ளது.
இந்த பத்திரத்தில் சாமிக்கண்ணு பெயரில் மோசடி ஆசாமி ஒருவர் கையெழுத்து போட்டுள்ளார். போலி கைரேகையும் வைக்கப்பட்டுள்ளது. கடந்த 2009-ம் ஆண்டில் இந்த மோசடி வித்தைகள் அரங்கேற்றப்பட்டுள்ளன. ஸ்ரீபெரும்புதூர் சார்பதிவாளர் அலுவலகத்தில் வைத்து 1.45 ஏக்கர் நிலம் ரித்தீஷ் பெயருக்கு மாற்றப்பட்டுள்ளது. அப்போது இருந்த சார்பதிவாளர் இந்த மோசடிக்கு உடந்தையாக இருந்துள்ளார். புரோக்கர்கள் சிலரும் இதற்கு துணை புரிந்துள்ளனர்.
இந் நிலையில் கடந்த ஆண்டு சாமிக்கண்ணு தனது நிலத்தை அடமானமாக வைத்து கடன் வாங்குவதற்கான முயற்சிகளில் இறங்கினார். அப்போதுதான் தனக்கு தெரியாமல் ரித்தீஷ் நிலத்தை அபகரித்துக் கொண்டதை சாமிக்கண்ணு உணர்ந்தார். இதுபற்றி பத்திரப்பதிவு அலுவலகத்தில் சென்று விசாரித்தபோது, எல்லாம் முடிந்து விட்டது. நீங்கள் ஏதாவது பேசவேண்டும் என்றால் அங்கு (ரித்தீசிடம்) சென்று பேசிக்கொள்ளுங்கள் என்று கூறியுள்ளனர்.இதனால் அதிர்ச்சி அடைந்த சாமிக்கண்ணு, மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு மனோகரனிடம் புகார் செய்தார். கூடுதல் சூப்பிரண்டு பாஸ்கர் தலைமையிலான போலீசார் விசாரணை நடத்தினர்.
சாமிக்கண்ணு பெயரில் தயாரிக்கப்பட்ட போலி பத்திரத்தை போலீசார் பறிமுதல் செய்தனர். அதில் சாமிக்கண்ணுவின் கையெழுத்து போலியாக போடப்பட்டிருந்தது. அதில், பதிவு செய்யப்பட்டிருந்த கைரேகையையும், சாமிக் கண்ணுவின் கைரேகை யையும் எடுத்து ஒப்பிட்டு பார்த்த போலீசார் அதனை தடயவியல் ஆய்வுக்கு உட்படுத்தினர். அப்போது பத்திரத்தில் இருப்பது சாமிக்கண்ணுவின் கைரேகை இல்லை என்பது உறுதி செய்யப்பட்டது. இதன் பிறகே ரித்தீஷ் கைது செய்யப்பட்டார்.
இந்த மோசடிக்கு உடந்தையாக இருந்த சார்பதிவாளர், போலி கையெழுத்து போட்டவர், மற்றும் மோசடிக்கு உடந்தையாக இருந்த புரோக்கர்கள் ஆகியோர் மீதும் நடவடிக்கை எடுக்கப்பட உள்ளது. இவர்கள் அனைவரும் விரைவில் கைது செய்யப்படுவார்கள். மோசடியாக வாங்கப்பட்ட நிலத்தை டெல்லியில் உள்ள ஹதோர் ரியால்டர்ஸ் பிரைவேட் லிமிடெட் என்ற நிறுவனத்துக்கு ரித்தீஷ் விற்பனை செய்துள்ளதாக போலீசார் தெரிவித்தனர்.
இந்த நிறுவனத்தை சேர்ந்த லட்சுமணன், பாலசுப்பிரமணி ஆகியோரது பெயருக்கு மோசடி நிலம் விற்கப்பட்டுள்ளதாக தெரிகிறது. இந்த நிறுவனம் பெரிய அளவில் ரியல் எஸ்டேட் தொழிலில் ஈடுபட்டு வருகிறது. இந்த நிறுவனத்துக்கும், ரித்தீசுக்கும் நெருங்கிய தொடர்பு உள்ளது. இதுபற்றி விரிவாக விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.