லண்டன், நவ.17-
ஐரோப்பிய கண்ட அணிகளுக்கான `யூரோ கோப்பை' கால்பந்து போட்டி 4 ஆண்டுகளுக்கு ஒரு முறை நடத்தப்பட்டு வருகிறது. அடுத்த யூரோ கோப்பை கால்பந்து போட்டியை உக்ரைன், போலந்து ஆகிய நாடுகள் இணைந்து நடத்துகின்றன.
இந்த போட்டி அடுத்த ஆண்டு (2012) ஜுன் 8-ந் தேதி முதல் ஜுலை 1-ந் தேதி வரை நடக்கிறது. போட்டியை நடத்தும் போலந்து, உக்ரைன் அணிகள் நேரடியாக தகுதி பெற்றுள்ளன. மற்ற 14 அணிகள் தகுதி சுற்று போட்டி மூலம் தகுதி பெற்றுள்ளன.
நேற்று லிஸ்போனில் நடந்த கடைசி தகுதி சுற்று ஆட்டம் ஒன்றில் போர்ச்சுகல் அணி 6-2 என்ற கோல் கணக்கில் போஸ்னியாவை தோற்கடித்தது. இந்த வெற்றியின் மூலம் போர்ச்சுகல் அணி யூரோ கோப்பை இறுதி சுற்றுக்கு முன்னேறியது.
மற்ற ஆட்டங்களில் அயர்லாந்து அணி 5-1 என்ற கோல் கணக்கில் எஸ்தோனியாவை வென்றது. செக் குடியரசு, குரோஷியா அணிகள் தங்கள் தகுதி சுற்று ஆட்டத்தில் வெற்றி கண்டன.
யூரோ கோப்பை போட்டியின் இறுதி சுற்றுக்கு போட்டியை நடத்தும் உக்ரைன், போலந்து நாட்டுடன், ஸ்பெயின், நெதர்லாந்து, ஜெர்மனி, சுவீடன், இங்கிலாந்து, கிரீஸ், பிரான்ஸ், டென்மார்க், ரஷியா, இத்தாலி, செக் குடியரசு, குரோஷியா, அயர்லாந்து, போர்ச்சுகல் ஆகிய அணிகளும் தகுதி பெற்றுள்ளன.