கோவை, நவ. 12-
தமிழ்நாடு வனத்துறை சார்பில் 19- வது மாநில வனத்துறை விளையாட்டு போட்டிகள் தொடக்க விழா கோவையில் உள்ள வனக் கல்லூரி விளையாட்டு திடலில் இன்று நடைபெற்றது. வனத்துறை அமைச்சர் பச்சைமால் விளையாட்டு போட்டிகளை தொடங்கி வைத்தார்.
வேளாண்மை துறை அமைச்சர் தாமோதரன் கிராம வனக் குழுவினருக்கு நிதி வழங்கினார். தொழில் துறை அமைச்சர் எஸ்.பி. வேலுமணி நலத்திட்ட உதவிகள் வழங்கினார். விழாவுக்கு முதன்மை தலைமை வன பாதுகாவலர் கவுதம் டே தலைமை தாங்கினார். விழாவில் வனத்துறை அமைச்சர் பச்சைமால் பேசியதாவது:-
தமிழகத்தில் அம்மா ஆட்சியில் தான் அதிகளவு வனப் பகுதி இருந்தது. கடந்த ஆட்சியில் குறைந்து விட்டது. தற்போது 21 சதவீத வனப் பகுதி உள்ளது. அதனை 33 சதவீதமாக மாற்ற அம்மா உத்தரவின் பேரில் பல்வேறு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
அதன் படி ஓரே வாரத்தில் 64 லட்சம் மரக்கன்றுகள் நடும் பணி தொடங்கி உள்ளது. கோவை மாவட்டத்தில் அதிக மரக் கன்றுகள் நட்டு பசுமையான கோவையாக மாற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. கோவை மாவட்டத்தில் யானைகள், காட்டு பன்றிகள் அட்டகாசம் உள்ளது. அதனை தடுக்க 3 மாதத்தில் திட்டம் தயாரிக்கப்பட்டது.
130 கிலோ மீட்டர் தூரம் அகழி வெட்டும் பணி தொடங்கி நடைபெற்று வருகிறது. அமைச்சர்கள், எம்.எல்.ஏ.க்கள் நிதி அளித்தால் கூடுதல் இடங்களில் அகழி வெட்டப்படும். இவ்வாறு அமைச்சர் பச்சை மால் பேசினார். விழாவில் மேயர் செ.ம.வேலுசாமி, துணை மேயர் சின்னத்துரை, எம்.எல்.ஏ.க்கள் சேலஞ்சர்துரை, ஒகே.சின்னராஜ், முத்துகருப்பண்ணசாமி மற்றும் கவுன்சிலர்கள் கலந்து கொண்டனர்.
விளையாட்டு போட்டிகளில் கோவை, திருச்சி, ஈரோடு, மதுரை, சேலம், விழுப்புரம் உள்ளிட்ட 11 மாவட்டங்களில் இருந்து 268 வீரர்கள் கலந்து கொள்கிறார்கள். கபடி, நீச்சல், சதுரங்கம், உள்ளிட்ட பல்வேறு போட்டிகள் நடைபெறுகிறது. வெற்றி பெறுகிறவர்களுக்கு முதல் பரிசாக ரூ. 20 ஆயிரமும் 2 - வது பரிசு ரூ. 10 ஆயிரமும், 3 - வது பரிசு ரூ. 5 ஆயிரமும் வழங்கப்படுகிறது. இதில் தேர்ச்சி பெறுபவர்கள் தேசிய போட்டியில் கலந்து கொள்ளலாம்.