Recommendations
Recent Activity
தொகுதி மேம்பாட்டு நிதியை அரசு வழங்காததால் 5 மாதங்களாக தொகுதி பக்கமே செல்ல முடியவில்லை: விஜயகாந்த் பேச்சு
சென்னை, நவ.8-
 
தே.மு.தி.க. சார்பில், பக்ரீத் பண்டிகையையொட்டி இஸ்லாமியர்களுக்கு குர்பானி வழங்கும் நிகழ்ச்சி சென்னை கோயம்பேடு தே.மு.தி.க. தலைமை அலுவலகத்தில் நேற்று மாலை நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் கட்சியின் நிறுவன தலைவர் விஜயகாந்த் கலந்து கொண்டு குர்பானி வழங்கி பேசியதாவது:-
 
சென்னை நகர் முழுவதும் தற்போது பெய்த மழையின் காரணமாக வெள்ளநீர் தேங்கியுள்ளது. சாலைகள் குண்டும், குழியுமாக காணப்படுகிறது. எங்கு பார்த்தாலும் குப்பைகள் தேங்கியுள்ளதால் கொசுத்தொல்லை அதிகரித்து விட்டது. ஆனால் இதுவரையில் மாநகராட்சி எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.  
 
மழை திடீரென்று தான் வரும். அது சொல்லிக்கொண்டு வராது. எனவே மாநகராட்சி முன் எச்சரிக்கை நடவடிக்கை எடுத்திருக்க வேண்டும். இன்றைக்கு பால் விலை உயர்ந்து உள்ளது. பெட்ரோல் விலை உயர்ந்து இருக்கிறது. காய்கறி விலை உயர்ந்திருக்கிறது இது பற்றியெல்லாம் கவலைப்படாமல் கடந்த ஆட்சியில் கொண்டு வந்த திட்டங்களை மாற்றிக்கொண்டு இருக்கிறீர்கள்.
 
மாநிலத்தில் எத்தனையோ பிரச்சினைகள் இருக்கும் போது நூலகத்தை மாற்ற வேண்டிய அவசியம் என்ன?. அ.தி.மு.க.வுடன் கூட்டணி வைத்தது ஏன்? கடந்த ஆட்சியாளர்கள் போல் தான் இந்த ஆட்சியாளர்களும் இருக்கிறார்கள். கருணாநிதியை விரட்ட வேண்டும் என்பதற்காக தான் அ.தி.மு.க.வுடன் கூட்டணி சேர்ந்தோம். நாங்கள் எதிர் கட்சியாக தான் இருக்க விரும்புகிறோம்.
 
`எதிரி' கட்சியாக இருக்க விரும்பவில்லை. இன்றைக்கு நான் சட்டமன்றத்திற்கு ஏன் வரவில்லை என்று கேட்கிறார்கள். ஏன் அவர்கள் மட்டும் (ஜெயலலிதா) அன்றைக்கு சட்டசபைக்கு போனார்களா? எல்லோருக்கும் ஏதாவது பிரச்சினை இருக்கும். தமிழக மீனவர்கள் பிரச்சினையில் அன்றைய முதல்- அமைச்சர் பிரதமருக்கு கடிதம் எழுதினார். இப்போது இருப்பவரும் அதை தானே செய்கிறார்.
 
 அ.தி.மு.க.வும், தி.மு.க.வும் மக்களுக்காக பாடுபடவில்லை.   இன்றைக்கு பெட்ரோல், டீசல் விலை மீண்டும் கூடியிருக்கிறது. ஆனால் அதைப்பற்றி மத்திய அரசும், தமிழக அரசும் கண்டுகொள்ளவில்லை. தமிழக அரசு விற்பனைவரியாவது குறைக்கலாம். ஆனால் அவர்கள் செய்யவில்லை. கேட்டால் கடந்த முறை குறைத்தேன் என்பார்கள்.
 
தமிழகத்தில் இருந்து கிடைக்கும் அந்நிய செலவாணி தொகையை தமிழகத்திற்கே மத்திய அரசு கொடுத்தால் பெட்ரோல் விலையை குறைக்க முடியும். உரம் விலை தாறுமாறாக உயர்ந்திருக்கிறது. அந்த துறையின் மந்திரி எங்கே இருக்கிறார் என்றே தெரியவில்லை. உரத்தின் விலையை குறைக்க அவர் என்ன செய்ய போகிறார்.
 
சட்டமன்ற உறுப்பினர்களுக்கு இன்னும் தொகுதி மேம்பாட்டு நிதியை அரசு ஒதுக்கவில்லை. இதனால் 5 மாதங்களாக தொகுதி பக்கமே சட்டமன்ற உறுப்பினர்கள் செல்ல முடியவில்லை. தொகுதியில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண உதவிகளையும் மேற்கொள்ள முடியவில்லை.
 
இவ்வாறு விஜயகாந்த் பேசினார்.