Recommendations
Recent Activity
பெட்ரோல் விலை உயர்வு: மன்மோகன்சிங் கருத்துக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கடும் எதிர்ப்பு
 புதுடெல்லி, நவ.6-
 
பெட்ரோல் விலையை எண்ணெய் நிறுவனங்கள் லிட்டருக்கு ரூ.1.80 உயர்த்தியுள்ளன.
 
இதற்கு எதிர்க்கட்சிகள் தலைவர்கள் மட்டுமின்றி, ஆளும் ஐக்கிய முற்போக்கு கூட்டணியில் உள்ள திரிணாமுல் காங்கிரஸ் தலைவர் மம்தா பானர்ஜியும் கடும் எதிர்ப்பு தெரிவித்து உள்ளார்.
 
பெட்ரோல் விலை உயர்வு பற்றி பிரதமர் மன்மோகன்சிங்கிடம் நேற்று முன்தினம் நிருபர்கள் கருத்து கேட்ட போது; பெட்ரோல் விலை உயர்வு தவிர்க்க முடியாதது என்றும், சர்வதேச சந்தை நிலவரத்துக்கு ஏற்ப பெட்ரோல் விலையை எண்ணெய் நிறுவனங்கள் மாற்றி அமைக்கும் நடவடிக்கை தொடரும் என்றும் கூறி இருந்தார்.
 
அவரது இந்த கருத்துக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி கடும் எதிர்ப்பு தெரிவித்து உள்ளது. இதுகுறித்து அக்கட்சியின் உயர்மட்ட குழு வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-
 
பெட்ரோல் விலையை மாற்றி அமைக்கும் அதிகாரம் கடந்த 2010-ம் ஆண்டு ஜுன் மாதம் எண்ணை நிறுவனங்களுக்கு வழங்கப்பட்டதை தொடர்ந்து பெட்ரோல் விலை அடிக்கடி உயர்த்தப்பட்டு வருகிறது. இதன் காரணமாக உணவுப் பொருட்களின் விலை அதிகரிப்பதால் மக்களுக்கு கூடுதல் சுமை ஏற்படுகிறது. 
 
சர்வதேச சந்தை நிலவரத்துக்கு பெட்ரோல் விலையை மாற்றி அமைக்கும் நடவடிக்கை தொடரும் என்று பிரதமர் மன்மோகன்சிங் கூறி இருப்பதன் மூலம் அவரது தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு மக்கள் விரோத அரசு, வசதி படைத்தவர்களுக்கு ஆதரவான அரசு என்பது உறுதிப்படுத்தப்பட்டு உள்ளது.
 
இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டு உள்ளது.