Recommendations
Recent Activity
கொடுங்கையூர் கிறிஸ்தவ கோவிலை இடிக்க பொதுமக்கள் மீண்டும் எதிர்ப்பு
சென்னை, அக். 31-
 
கொடுங்கையூர் முத்தமிழ் நகரில் சி.எஸ்.ஐ. கிறிஸ்து நாதர் ஆலயம் உள்ளது. தற்போது ஆலயம் உள்ள இடம் தமிழ்நாடு வீட்டு வசதி வாரியத்திற்கு சொந்தமானது. காலியாக கிடந்த 9 கிரவுண்ட் இடத்தை 1988-ம் ஆண்டு சபையின் பெரியவர்கள் ஏழை எளிய மக்களுக்கு கல்வி அளிக்க வேண்டும் என்ற நோக்கில் பள்ளியை தொடங்கினர்.
 
ஒரு புறம் கிறிஸ்தவர்கள் மத வழிபாடும், மற்றொரு புறம் சமுதாயப் பணியும் செய்து வந்தனர். இந்த நிலையில் அந்த பகுதியை 5 பேர் ஆலயத்தையும் பள்ளியையும் அங்கிருந்து அகற்ற வேண்டும் என்று வழக்கு தொடர்ந்தனர்.
 
இதைத் தொடர்ந்து அந்த இடத்தை வாங்க திருச்சபை முடிவு செய்தது. மத வழி பாட்டிற்கான குறைந்த விலை நிர்ணயிக்கும் படி கோரிக்கை வைக்கப்பட்டது.   இதற்கிடையில் கடந்த ஏப்ரல் மாதம் கோர்ட்டு அளித்த உத்தரவில், ஆலயத்தை அகற்றி இடத்தை ஒப்படைக்க வேண்டும் என்று கூறியிருந்தது.
 
இதையடுத்து மாநகராட்சி அதிகாரிகள் ஆலயத்தை இடித்து நிலத்தை கையகப்படுத்த வந்தனர். அந்த திருச்சபை மக்கள் மற்றும் பல்வேறு சமுதாயத்தினர், தன்னார்வலர்கள் ஆலயத்தை இடிக்க விடாமல் தடுத்தனர். பதட்டமான சூழல் ஏற்பட்டதால் இடிப்பது தள்ளி வைக்கப்பட்டது. மேலும் அப்போது கிறிஸ்தவர்களின் புனித வாரமும், ஈஸ்டர் பண்டிகையும் வந்ததால் ஒத்தி வைக்கப்பட்டது.
 
இவ்வழக்கில் ஆலயத்தை இடிப்பதற்கு இடைக்கால தடை பெற்றனர். இதற்கிடையில் அந்த இடத்தை வாங்க திருச்சபை முயற்சி செய்து வருகிறது. நிலத்தின் விலையை குறைத்து நிர்ணயிக்கும்படி முதல்-அமைச்சர் ஜெயலலிதாவிற்கும், அமைச்சருக்கும் கோரிக்கை மனு சபை மக்கள் சார்பாக கொடுக்கப்பட்டது.
 
இந்த நிலையில் பிரச்சினைக்குரிய அந்த இடத்தில் இருந்து ஆலயத்தை அகற்றி இடத்தை கைப்பற்ற மாநகராட்சி அதிகாரிகள் இன்று வருவதாக தகவல் பரவியது. இதனால் சபை மக்கள் அங்கு திரண்டனர். மூலக்கடை, மாதவரம், கொடுங்கையூர் பகுதியைச் சேர்ந்த கிறிஸ்தவர்கள் அங்கு வந்தனர். அப்போது மழை கொட்டியது. ஆலயத்தின் சற்று தொலைவில் பொக்லின் எந்திரம் நிறுத்தப்பட்டு இருந்ததால் அங்கு பதட்டமும் பரபரப்பு ஏற்பட்டது.
 
பின்னர் ஆலய குரு பிட்டி பிரேமாவதி தலைமையில் பிரார்த்தனை நடந்தது. ஆலயத்திற்காக விசேஷ ஜெபம் ஏறெடுக்கப்பட்டது. இதில் சபை மக்கள் திரளாக கலந்து கொண்டு ஜெபித்தனர். இதுகுறித்து ஆலய நிர்வாகிகள் ஐசக், ஏ.டி.ஜெயசிங் கூறியதாவது:-
 
ஆலயம் இருக்கும் இடத்தை வாங்க முயற்சி செய்து வருகிறோம். கடந்த 20 ஆண்டுகளுக்கு மேலாக அங்கு ஜெப ஆராதனை, சமுதாய பணிகள் நடந்து வருகின்றன. அந்த நிலத்திற்கு விலை குறைத்து எங்களுக்கு வழங்க வேண்டும். அதை முதல்-அமைச்சர் ஒருவரால் மட்டுமே செய்ய முடியும். அவர் செய்து கொடுப்பார் என்ற நம்பிக்கை எங்களுக்கு உள்ளது. சிறுபான்மை மக்கள் மீது அக்கறை கொண்டுள்ள முதல்வர் சலுகை சிலையில் நிலம் வழங்க உதவிட வேண்டும்.
 
இவ்வாறு அவர்கள் கூறினர்.