7-ஆம் அறிவு
தமிழக வரலாற்றில் புரட்டாத பக்கங்கள் எத்தனையோ உள்ளன. அதில் ஒரே ஒரு பக்கத்தை 7-ஆம் அறிவாகப் புரட்டிப் போட்டிருக்கிறார் இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ். அதன் மூலம், புதைந்து கிடந்த ஒரு வரலாற்று உண்மையை அவர், மிகச் சரியான நேரத்தில் தந்து தமிழர்களையும், தமிழ் உணர்வையும் தட்டி எழுப்பி விட்டிருக்கிறார்.
 
கதை வருமாறு:-
காஞ்சீபுரத்தில் 6-ம் நூற்றாண்டில் கந்தவர்மன் எனும் ஒரு பல்லவ மன்னன் ஆண்டு வந்தான். அவனுக்குப் பிறந்த மூன்றாவது மகன் போதிதர்மன். அவன் காஞ்சியை தலைநகராகக் கொண்ட பல்லவ நாட்டுக்கு இளவரசனாக இருந்தான். அவன் இந்து மதத்தில் இருந்து புத்த மதத்தை தழுவினான். புத்த மதக் குருவாகவும் மாறினான்.
 
தற்காப்புக் கலையில் போதி தர்மர் சிறந்து விளங்கினார். குங்பூ கலையில் ஷாலின் குங்பூ எனும் பிரிவை உருவாக்கி பரப்பினார். மூலிகை மருத்துவத்தில் நிபுணத்துவம் பெற்றிருந்த அவர் தியானப்பயிற்சிகள் மூலம் மற்றவர்கள் மனதை பார்வை மூலம் வசியப்படுத்தி, தன் கட்டுப்பாட்டுக்குள் வைத்துக் கொள்ளும் அரிய ஆற்றலும் பெற்றிருந்தார்.
 
தனது குருவின் உத்தரவை ஏற்று அவர் சீனாவுக்கு பயணமானார். 3 ஆண்டு பயணம் செய்து சீனாவை சென்றடைந்த அவர், அங்குள்ள மக்களை மர்ம கொடிய   நோயில் இருந்து காப்பாற்றினார். ஒரு தடவை கொள்ளையர்கள், சீன மக்களைத் தாக்கியபோது போதிதர்மர் தன் தற்காப்பு கலைகளைப் பயன்படுத்தி அவர்களை விரட்டியடித்தார். அதுவரை போதி தர்மரை பிணி தீர்க்கும் மருத்துவராக மட்டுமே பார்த்து வந்த சீனர்கள், அதன் பிறகு அவரை தெய்வத்துக்கு சமமாக வைத்து வணங்கினார்கள். சுமார் 150 ஆண்டுகள் சீனாவில் வாழ்ந்த போதிதர்மர் குங்பூ உள்பட வாழ்வின் எல்லா நுட்பங்களையும் கற்றுக் கொடுத்தார்.
 
வயதான காலத்தில் காஞ்சீபுரத்துக்கு திரும்பி விடலாம் என்று நினைத்த போதிதர்மரை சீனர்கள் விடவில்லை. போதிதர்மர் சென்று விட்டால், அவரோடு எல்லா மகத்துவங்களும் சென்று விடும் என்று பயந்து, அவருக்கு உணவில் விஷம் கொடுத்து கொன்று அங்கேயே புதைத்து விட்டனர்.
 
சீனாவில் வாழ்ந்த காலத்தில் மகாயான புத்த வம்சத்தை போதிதர்மர் உருவாக்கி இருந்தார். அந்த வம்சத்தின் கடவுளாக போதி தர்மர் மாற்றப்பட்டார். அதாவது ஒரு தமிழன், சீனாவில் கடவுளாக வணங்கப்படுகிறார். அதோடு தாய்லாந்து, இந்தோனேசியா, ஜப்பான் நாடுகளிலும் கூட போதி தர்மர்தான் கடவுளாக கருதப்படுகிறார். இது வரலாற்று உண்மை.
 
சீன கோவில் கல்வெட்டுக்களில் இதற்கான குறிப்புகள் உள்ளன. காஞ்சீபுரம் கோவிலில் உள்ள தற்காப்புக் கலை சிற்பங்களும் இந்த வரலாற்று உண்மையை தெளிவுபடுத்துகின்றன. இந்த வரலாறு உண்மை நம் தமிழர்களில் எத்தனைப் பேருக்குத் தெரியும் என்ற சிந்தனையை ஏ.ஆர்.முருகதாஸ் இப்படம் மூலம் கிளறி விட்டுள்ளார். அதோடு அவர் நின்று விடவில்லை. போதி தர்மர் கற்றுக் கொடுத்த அரிய கலைகளைப் பயன்படுத்தி சீனர்கள், இந்தியா மீது நவீன தாக்குதல் நடத்துவதையும், அதை போதி தர்மர் வம்சா வழியில் வந்த ஒரு தமிழ் இளைஞன் முறியடித்து, நாட்டைக் காப்பாற்றுவதையும் அற்புதமாக காட்டியுள்ளார். இதுதான் 7-ஆம் அறிவு கதையாகும்.
 
இதில் 7-ஆம் அறிவு என்றால் என்ன தெரியுமா? ஒருவரது பாரம்பரியப் பண்புகள், அவரது சந்ததியினருக்கும் இருக்கும். இந்த பண்புகள் வருவதற்கு காரணம் டி.என்.ஏ. மூலக் கூறுகள் ஆகும். தாம்பத்திய உறவின் போது ஒருவரது குணம், உடல் நலம் கொண்ட டி.என்.ஏ. மூலக் கூறுகள், இரட்டிப்பாகி சந்ததிகளுக்கு வந்து விடும். இந்த டி.என்.ஏ.யில் மரபியல் தகவல்களைக் கொண்ட பகுதி மரபணு ஆகும்.
 
இந்த மரபணு ஒவ்வொருவரது உடம்பிலும் நிச்சயம் ஆழ்ந்த நிலையில் இருக்கும். தூங்கிக் கொண்டிருக்கும் அந்த மூலக் கூறுகளை  தட்டி விட்டு விட்டால் போதும், நீங்கள் பல நூற்றாண்டுகளுக்கு முன்பு உங்கள் மூதாதையர்கள் எத்தகைய அரிய திறமைகளுடன் இருந்தார்களோ அதை பெற்று விடமுடியும். இந்த 7-ஆம் அறிவைத்தான் இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் இப்படத்தில் பயன்படுத்தி உள்ளார்.
 
அதாவது ஸ்ருதி ஹாசன் என்ற ஆராய்ச்சி மாணவி மூலம் 5-ம் நூற்றாண்டில் வாழ்ந்த போதிதர்மரின் வம்சாவழி இளைஞனை கண்டுபிடிக்கச் செய்கிறார். அந்த இளைஞன்தான் சூர்யா. சர்க்கஸ் கம்பெனியில் வேலை பார்க்கும் சூர்யாவை, ஸ்ருதி, டி.என்.ஏ. மூலக்கூறு மாற்றம் மூலம் மீண்டும் போதிதர்மராக மாற்ற நினைக்கிறார். இந்த ரகசியம் சீனர்களுக்கு தெரிந்து விடுகிறது.
 
போதி தர்மர் போல ஆற்றல் கொண்ட ஒருவர் மீண்டும் உருவாகி விட்டால், பிறகு தங்களுக்கும், தங்கள் குங்பூ கலைக்கும் மதிப்பு இல்லாமல் போய் விடுமே என்று சீனர்கள் நினைக்கிறார்கள். சூர்யாவையும், ஸ்ருதிஹாசனையும் கொல்ல டாங் லீ என்ற ஒருவனை அவர்கள் இந்தியாவுக்கு அனுப்புகிறார்கள். போதிதர்மர் கற்றுக் கொடுத்த மனதை ஆக்கிரமித்து கட்டுப்படுத்தும் கலையை கற்றடாங் லீ சென்னை வந்து சூர்யா, ஸ்ருதி இருவரையும் கொல்ல முயல்கிறான். அதாவது நம் கையை எடுத்து நம் கண்ணையே குத்த முயல்கிறான். அவனுக்கு வெற்றி கிடைத்ததா? சூர்யாவுக்கு டி.என்.ஏ. மாற்றம் மூலம் போதி தர்மர் ஆற்றல்களை ஸ்ருதியால் வர வைக்க முடிந்ததா? என்பதே கிளைமாக்ஸ்.
 
2001-ம் ஆண்டு தீனா படத்தில் இருந்து வித்தியாசமாக கதை சொல்லி வரும் ஏ.ஆர்.முருகதாஸ் 7-ஆம் அறிவு படத்தில் தமிழன் தலைநிமிர வேண்டும். அதற்கு தன் பாரம்பரிய சிறப்பை உணர வேண்டும் என்ற கருத்தை அழுத்தம் திருத்தமாக பதிவு செய்துள்ளார். படத்தில் பல இடங்களில் மசாலாதனம் இருந்தாலும் தமிழன் தோற்க கூடாது என்ற வரிகள், ஈட்டிகளாக பாய்கின்றன.
 
இலங்கையில் தமிழன் தோற்றதற்கு காரணம், துரோகமும் மற்றும் சில நாடுகளின் சதியும்தான் என்ற வரிகளை சூர்யா உணர்ச்சிப் பிழம்பாக சொல்லும்போது, தியேட்டரில் கைதட்டல் காதை நிரப்புகிறது. தமிழர்களிடம் உணர்வு மங்கி விடவில்லை என்பதை இது காட்டுகிறது. உதயநிதி ஸ்டாலின் தயாரிப்பில் தமிழ் வரலாற்றுடன் அறிவியல் புனைவும் கலந்த பிரமாண்டமாக 7-ஆம் அறிவு உள்ளது.
 
திரையில் சூர்யா, ஸ்ருதிஹாசன், வில்லன் நடிகர் ஜானி ட்ரையென் மூவரும்தான் நிறைந்துள்ளனர். சூர்யா இப்படத்தில் போதிதர்மர், சர்க்கஸ் கலைஞர், டி.என்.ஏ. மூலக்கூறு மாற்றம் செய்யப்பட்ட இளைஞன் என மூன்றுவிதமாக வருகிறார். முதல் 30 நிமிடங்கள் போதிதர்மராக அவர் வரும் காட்சிகளில் இமைகளை மூட முடியாதபடி செய்து விட்டார். ஆறுமடிப்பு உடலமைப்பை முறுக்கி காட்டும் காட்சிகளில் பிரமிப்பூட்டுகிறார்.
 
ஸ்ருதியை காதலிக்கும் காட்சிகளிலும், சண்டை காட்சிகளிலும் சூர்யா நடிப்பு அருமை. ஸ்ருதிஹாசனுக்கு இது முதல் படம் என்பதை நம்ப முடியவில்லை. அழகு, சிரிப்பு, ஆவேசம், அழுகை, ஆர்ப்பாட்டம் என்று அத்தனை அம்சங்களையும் அவர் இந்த படத்தில் கொட்டியுள்ளார்.
 
தமிழை அவமதித்தால் மூஞ்ச பேத்துடுவேன், உன் காதலைத் தூக்கி குப்பையில் போடு போன்ற காட்சிகளில் ஆவேசமான நடிப்பு, அவரது சொந்த குரல் வசனம்  உயிரோட்டமாக உள்ளது. பல காட்சிகளில் கமலஹாசனின் வாரிசு என்பதை ஸ்ருதி நிரூபித்துள்ளார். வில்லன் டாங்லீயாக வரும் ஜானி ட்ரைங்யென் வியட்நாம் நாட்டைச் சேர்ந்தவர். அவரது குடும்பமே கலைக் குடும்பமாகும். 37 வயதாகும் இவர் ஸ்பைடர்மேன் படத்தில் கிரீன்காப்லின் கதாபாத்திரத்துக்கு டூப்பாக நடித்துள்ளார்.
 
சூர்யாவுக்கு இணையாக இவர் இப்படத்தில் செம கலக்கு கலக்கியுள்ளார். பிறரது மனதை கட்டுப்படுத்த இவர் காட்டும் முகபாவனைகள் மனதை விட்டு அகலாதவை. சூர்யா, ஸ்ருதி இருவரையும் விரட்டும் காட்சிகள் படத்துக்கு சூடேற்றுகின்றன. வித்தியாசமான இந்த வியட்நாம் வில்லன் தமிழர்கள் நெஞ்சில் இடம் பிடிப்பார். இவர் வரும் காட்சிகளில் ஹாரிஸ் ஜெயராஜ் அமைத்துள்ள இசை, ரசிகர்களை இருக்கையில் உட்கார விடாமல் செய்கிறது. படத்தில் ஆறு பாடல்கள் உள்ளன. பா.விஜய், நா.முத்துக்குமார், கபிலன், மதன்கார்க்கி எழுதி உள்ளனர்.
 
ஓ ரிங்கா ரிங்கா  பாடலுக்கு ஆயிரம் நடனக் கலைஞர்கள் ஆடியுள்ளனர். `ஏ லே லமா  பாடலை விஜய்பிரகாஷ், கார்த்திக், சாலினியுடன் ஸ்ருதியும் பாடியுள்ளார். `யம்மா யம்மா' என்ற காதல் தோல்வி பாட்டு, படத்தின் வேகத்துக்கு கடிவாளம் போடுவது போல உள்ளது.
 
ரவி கே.சந்திரனின் ஒளிப்பதிவு படத்துக்கு முதுகெலும்பாக இருக்கிறது. சீன அழகை நம் கண்களுக்கு விருந்தாக்கி உள்ளார். பீட்டர் ஹெய்னின் சண்டை காட்சிகள் புதுவிதமாக மிரட்டியுள்ளன. சூர்யா, ஸ்ருதி இருவரையும் கொல்ல, வில்லன் டாங்லீ மற்றவர்களின் மனதைத் தூண்டி விட்டு நடத்தும் பத்து நிமிட சண்டை பரரப்பாக படமாக்கப்பட்டுள்ளது.
 
சாதாரண பெண், துப்புரவு தொழிலாளி எல்லாம் குங்பூ சண்டை போடுவது வித்தியாசம். சுமார் ஐம்பது வாகனங்களை தூள், தூளாக நொறுக்கி எடுக்கப்பட்ட இந்த சண்டை காட்சிக்கு மட்டும் பத்து கோடி ரூபாயை செலவு செய்துள்ளார்களாம். இறுதியில் சீனாக்காரனை அழித்து விட்டு சூர்யா, தமிழர்கள் தங்கள் பாரம்பரிய சிறப்பை மறக்கக் கூடாது'' என்று பேசும் வசனம் "நச்'' என உள்ளது.
 
வீரமாக வாழ்ந்த தமிழ் இனம் இதை புரிந்து கொண்டால் நல்லது. இலங்கையிலும், மாலத்தீவிலும் சீனா கால்பதித்து, நம்மை முற்றுகையிட்டுள்ள நிலையில், எதிர்கால தமிழன் எப்படி வாழ வேண்டும் என்ற பாடத்தை 7-ஆம் அறிவு படம் சொல்லியுள்ளது.
மதிப்பீடு செய்க