ஐதராபாத், அக். 17-
தன்னைப்பற்றி சினிமா படம் எடுத்த கன்னட டைரக்டர் மீது நித்யானந்தா சார்பில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. இந்தியாவில் பல்வேறு மாநிலங்களில் ஆசிரமம் அமைத்து நடத்தி வருபவர் நித்யானந்தா. இவர் நடிகை ரஞ்சிதாவுடன் ஆபாசமாக இருப்பது போன்று வெளியான சி.டி.யால் சர்ச்சையில் சிக்கினார். இது தொடர்பாக வழக்கு பெங்களூர் கோர்ட்டில் நடந்து வருகிறது.
இந்நிலையில், நித்யானந்தா வாழ்க்கையை மையமாக வைத்து கன்னட டைரக்டர் மதன் படேல் சினிமா எடுத்தார். இந்த படத்தின் ஸ்டில்கள் வெளியிடப்பட்டன. இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. நித்யானந்தாவின், தியான பீடத்தின் பெங்களூர் கிளை சார்பில் அங்குள்ள சிட்டி கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது.
நித்யானந்தாவை மையமாக வைத்து எடுக்கப்பட்டுள்ள படம் ரிலீசானால், அது கோர்ட்டில் நிலுவையில் உள்ள வழக்கை பாதிக்கும் என்று, நித்யானந்தா தரப்பில் தெரிவிக்கப்பட்டது. குற்றப்பத்திரிகைதாக்கல் செய்யப்பட்டு விட்டதால், நித்யானந்தா பற்றிய சினிமா, இந்த வழக்கை எந்த விதத்திலும் பாதிக்கப் போவதில்லை என்று டைரக்டர் சார்பில் வாதிடப்பட்டது.
இறுதியில் அந்த சினிமாவை வெளியிடக் கூடாது என்று தடை விதித்து கடந்த செப்டம்பர் மாதம் நீதிபதி தீர்ப்பு அளித்தார். இந்நிலையில் நித்யானந்தா பற்றிய இந்த சினிமாவை தெலுங்கு மொழியில் மாற்றம் (டப்) செய்து வெளியிட டைரக்டர் மதன் படேல், முயற்சி செய்து வருகிறார்.
இதற்கான வேலைகள் ஜரூராக நடந்து வருகின்றன. இது பற்றி பத்திரிகைகளில் விளம்பரங்கள் செய்யப்பட்டன.
நித்யானந்தா, நடிகை ஒருவருடன் நெருக்கமாக இருப்பது போன்று சினிமா ஸ்டில்கள் விளம்பரங்களில் இடம் பெற்றன. கன்னடத்தில் வெளியிட தடை விதிக்கப்பட்ட அதே கதையம்சம் கொண்ட சினிமா, தெலுங்கில் மொழி மாற்றம் செய்து வெளியிட்ட முயற்சி நடந்து வருவதை அறிந்த நித்யானந்தா ஆதரவாளர்கள் அதிர்ச்சி அடைந்தனர். இதற்கு தடை விதிக்க வேண்டும் என்று கோரி ஆந்திர ஐகோர்ட்டில் நித்யானந்தா ஆதரவாளர்கள் வழக்கு தொடர்ந்துள்ளனர்.
நித்யானந்தாவின் தியான பீடத்தின் ஐதராபாத் கிளையின் நிர்வாகிகள் பத்திரிகையாளர்களிடம் கூறியதாவது:-
டைரக்டர் மதன் படேல், சுவாமி சத்யானந்தா என்ற பெயரில் கன்னட மொழியில் எடுத்த படத்துக்கு தடை உள்ளது. இந்நிலையில் அதை தெலுங்கில் எடுத்து வருகிறார்கள். எனவே இந்த முயற்சிக்கு தடை விதிக்க வேண்டும் என்று கோரியும், ரூ.3.5 கோடி நஷ்ட ஈடுகேட்டும், டைரக்டர் மீது ஆந்திர கோர்ட்டில் வழக்கு தொடர்ந்துள்ளோம்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.