Recommendations
Recent Activity
மிஸ்டு காலால் வந்த வினை:2-வது திருமணம் செய்த பெண் தற்கொலை
பொள்ளாச்சி, அக். 10-
 
மிஸ்டு கால் மூலம் 2-வது திருமணம் செய்த பெண் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். பொள்ளாச்சியை அடுத்த சூலேஸ்வரன்பட்டியை சேர்ந்தவர் திருமூர்த்தி. இவரது மனைவி சகுந்தலா (வயது 23). இந்த தம்பதிக்கு 3 வயதில் ஒரு குழந்தை உள்ளது.
 
இந்த நிலையில் கடந்த ஆண்டு சகுந்தலாவின் செல்போனுக்கு மிஸ்டு கால் வந்தது. அந்த எண்ணுக்கு சகுந்தலா தொடர்பு கொண்டார். எதிர்முனையில் பேசிய வாலிபர் இனிக்க இனிக்க பேசினார். அவரது தேனொழுகும் பேச்சில் மயங்கிய சகுந்தலா உங்களுடன் நான் வாழ விரும்புகிறேன் என்றார். அதற்கு வாலிபரும் சம்மதம் தெரிவித்தார். அந்த வாலிபர் நாகப்பட்டினத்தை சேர்ந்த பெயிண்டர் விஜயராமன் ஆவார்.
 
 காதலனின் பேச்சை நம்பிய சகுந்தலா கடந்த 11 மாதங்களுக்கு முன் தொட்டு தாலி கட்டிய கணவனையும், பெற்றெடுத்த குழந்தையையும் தவிக்க விட்டு விட்டு காதலனுடன் சென்று விட்டாள்.   நாகப்பட்டினத்தில் இருவரும் திருமணம் செய்து கொண்டனர். பின்னர் பொள்ளாச்சிக்கு வந்து பெற்றோரின் வீட்டின் அருகிலேயே சகுந்தலா தனது 2-வது கணவருடன் குடியேறினாள். தற்போது சகுந்தலா 5 மாத கர்ப்பிணியாக இருந்தாள்.
 
 கணவன், குழந்தையை தவிக்க விட்டு சென்ற சகுந்தலாவை பெற்றோரும், உறவினர்களும் திட்டி தீர்த்தனர். இதனால் மனவேதனையடைந்த சகுந்தலா வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டாள். பொள்ளாச்சி கிழக்கு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.