திருவண்ணாமலை,அக்.9-
திருவண்ணாமலை நகராட்சி தலைவர் பதவிக்கு போட்டியிடும் தே.மு.தி.க. வேட்பாளர் மற்றும் வார்டு உறுப்பினர் பதவிக்கு போட்டியிடும் வேட்பாளர் களை ஆதரித்து தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் நேற்று திருவண்ணாமலை காந்திசிலை அருகில் திறந்த வேனில் நின்று பிரசாரம் செய்தார்.
அப்போது அவர் பேசிய தாவது:-
செங்கத்தில் இருந்து நான் கிரிவலப்பாதை வழியாக திருவண்ணாமலைக்கு வந்தேன். இது புண்ணியஸ்தல மாகும், இங்கு லட்சக்கணக்கான பக்தர்கள் வருகிறார்கள். கிரிவலப்பாதை சரியில்லை, கிரிவல பாதையில் பக்தர்களுக்கு தேவையான கழிவறைகள் இல்லை, வசதிகள் இல்லை. கிரிவலப்பாதையில் 200 விளக்குகள் போடலாம். பாதாள சாக்கடை திட்டம் சரியில்லை. அதற்காக தோண்டப்பட்ட பள்ளத்தில் விழுந்து விபத்துதான் ஏற்படுகிறது.
மக்கள் தங்களுக்கான ஜீவா தார உரிமையை நிறைவேற்றிக் கொள்வது தான் உள்ளாட்சி. எங்களுக்கு ஒரு வாய்ப்பு கொடுங்கள், மக்களை தங்க தட்டில் வைத்து தாலாட்டுவோம். திருவண்ணாமலையில் சிவன் ருத்திரதாண்டவம் ஆடப்போகிறார். மக்களுக்கு உண்ண உணவு, உடுத்த உடை, இருக்க இடம்ஆகியவைதான் தேவை. அதைக்கூட கொடுக்கவில்லை. எங்களுக்கு ஒரு சந்தர்ப்பம் கொடுங்கள், என் மக்கள் லஞ்சம் வாங்கமாட்டார்கள், வாங்கவும் விடமாட்டேன்.
உங்கள் ஊர் தேவையை நிறைவேற்றினாலே போதும். கடந்த 30 வருடங்களாக மின் விளக்குகள் இல்லை, சாலை வசதி இல்லை, மயான பாதை இல்லை என்று சொல்லிக் கொண்டிருக்கிறோம். இந்த தேர்தலில் 1 லட்சம்பேர் நிற்கிறார்கள். நீங்கள்குத்தும் வாக்குகள் அவர்களுக்கு வைக்கும் வேட்டுகள். 21-ந் தேதி வரை நீங்கள் போராட வேண்டும். உங்கள் சக்தியை காட்டும் நேரம் இது. உங்கள் உணர்வுகளுக்கு மதிப்பளித்து இங்கு வந்துள் ளேன். அரசியல்வாதிகள், அதிகாரிகளை நம்பாதீர்கள். எங்களை தேர்ந்தெடுத்தால் ரேஷன் பொருட்கள் உங்கள் வீடுதேடி வரும்.
இவ்வாறு விஜயகாந்த் பேசினார்.