சென்னை, ஆக. 23-
நித்யானந்தா சாமியாரும், நடிகை ரஞ்சிதாவும் ஒன்றாக இருப்பது போன்ற ஆபாச வீடியோ காட்சிகள் கடந்த ஆண்டு மார்ச் மாதம் சன் டி.வி.யில் ஒளிபரப்பானது.
இது தொடர்பாக பெங்களூர் போலீசார் நித்யானந்தாவை கைது செய்து சிறையில் அடைத்தனர். பின்னர் ஜாமீனில் வெளிவந்த நித்யானந்தா ஆசிரம பணிகளை தொடர்ந்து செய்து வருகிறார்.
நித்யானந்தா-ரஞ்சிதா ஆபாச படத்தை காட்டி ரூ.100 கோடி வரை பேரம் பேசப்பட்டதாக கடந்த சில நாட்களுக்கு முன்பு நித்யானந்தாவின் சீடர்கள் பரபரப்பான குற்றச்சாட்டுக்களை கூறினர்.
இது தொடர்பாக நித்யானந்தா ஆசிரமத்தின் தமிழக தலைவர் நித்யசர்வானந்தா போலீஸ் கமிஷனர் திரிபாதியிடம் கடந்த மாதம் 7-ந்தேதி புகார் செய்தார். நடிகை ரஞ்சிதாவும் ஆபாச படம் வெளியானது குறித்து புகார் தெரிவித்தார்.
நித்யானந்தா தரப்பில் கொடுக்கப்பட்ட புகார் மனுவில் சன் டி.வி.யில் ரஞ்சிதாவின் ஆபாச படங்களை வெளியிடாமல் இருக்க கோடிக்கணக்கில் பேரம் பேசப்பட்டதாக குற்றம் சாட்டப்பட்டிருந்தது. சன் பிக்சர்ஸ் தலைமை நிர்வாகி ஹன்ஸ்ராஜ் சக்சேனா, அவரது உதவியாளர் அய்யப்பன், ஆபாச படத்தை எடுத்ததாக கூறப்படும் சீடர் லெனின் உள்ளிட்டோர் மீது புகார் தெரிவிக்கப்பட்டிருந்தது.
இந்த வழக்கை முதலில் மத்திய குற்றப்பிரிவு போலீசார் விசாரித்தனர். பின்னர் சி.பி.சி.ஐ.டி. விசாரணைக்கு வழக்கு மாற்றப்பட்டது. கூடுதல் டி.ஜி.பி. சேகர், டி.ஐ.ஜி. ஸ்ரீதர் ஆகியோரது மேற்பார்வையில் துணை போலீஸ் சூப்பிரண்டு பரணி குமார் வழக்கை விசாரித்து வருகிறார்.
2 நாட்களுக்கு முன்பு நித்யானந்தா சாமியார் சி.பி.சி.ஐ.டி. போலீசில் நேரில் ஆஜரானார். அவரிடம் 3 மணி நேரம் விசாரணை நடத்தப்பட்டது. நடிகை ரஞ்சிதாவிடம் போலீசார் ரகசிய விசாரணை நடத்தினர்.
இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்டுள்ள சக்சேனா, அய்யப்பன், சீடர் லெனின் ஆகியோரிடம் விசாரணை நடத்த போலீசார் திட்டமிட்டுள்ளனர். இதற்காக சம்பந்தப்பட்ட அனைவருக்கும் விரைவில் சம்மன் அனுப்பப்படும் என்று போலீஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
இந்த வழக்கு விசாரணை சூடு பிடித்துள்ளதை தொடர்ந்து ரஞ்சிதா ஆபாச பட விவகாரத்தில் திடுக்கிடும் தகவல்கள் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.