ஒரத்தநாடு, ஆக-16
தஞ்சை மாவட்டம் ஒரத்தநாட்டில் அ.தி.மு.க சார்பில் தமிழக அரசின் பட்ஜெட் விளக்கப் பொதுக் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்திற்கு ஒரத்தநாடு தொகுதி கழக செயலாளர் கோ.தேவதாஸ் தலைமை தாங்கினார். ஓன்றியசெயலாளர்கள் ஆர்.சத்தியமூர்த்தி ( திருவோணம் ) துரை.வீரணன் ( தஞ்சாவூர் ) உள்ளிட்ட நிர்வாகிகள் முன்னிலை வகித்தனர்.
ஒரத்தநாடு ஒன்றிய செயலாளர் வீ.சூரியமூர்த்தி வரவேற்றுப்பேசினார் , கட்சித்தலைமை கழக பேச்சாளர்கள் நள்ளாற்று நடராஜன், பாரதிபிரியன் ஆகியோர் சிறப்புறையாற்றினார்கள். தஞ்சை தெற்கு மாவட்ட கழக செயலாளரும், தமிழக வீட்டுவசதி மற்றும் நகர்புற வளர்ச்சி துறை அமைச்சருமான வைத்திலிங்கம் இக்கூட்டத்தில் கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் கூறியதாவது.
புரட்சித் தலைவி ஜெயலலிதாவின் தலைமையிலான தமிழக அரசின் 2011-2012 ஆம் ஆண்டிற்கான பட்ஜெட் வரலாற்று சிறப்புமிக்கதாகும். 1லட்சம் கோடியிலான இந்த பட்ஜெட்டை அனைவரும் பாராட்டுகிறார்கள். விவசாயிகள் உள்ளிட்ட அனைத்து தரப்பு மக்களின் வாழ்வாதாரம் உயர வேண்டும் என்பதை அக்கறையாக கொண்டு இந்த பட்ஜெட்டை அரசு தாக்கல் செய்துள்ளது.
ஆனால் கருணாநிதி மட்டும் குறைகூறுகிறார். நில அபகரிப்பு வழக்கு அப்பாவி மக்கள் மீதும் , அனைத்து தி.மு.க. பிரமுகர்கள் மீதும் போடப்படவில்லை. யார் முறைகேட்டில் ஈடுபட் டார்களோ அவர்கள் மீது மட்டும் தான் வழக்கு பதிவு செய்யப்பட்டு நடவடிக்கை எடுக்கபடுகிறது. தப்பு செய்தவன் கடவுளாக இருந்தாலும் ஜெயலலிதா விடமாட்டார். அதே நேரத்தில் தப்பு செய்யாத யாரையும் ஜெயலலிதா தண்டிக்கவும் மாட்டார் என்பது நாட்டு மக்களுக்கு நன்கு தெரியும்.
சமச்சீர் கல்வியில் வெற்றி பெற்று விட்டதாக தி.மு.க.வினர் பட்டாசு வெடிக்கின்றனர். சமச்சீர் கல்வியை ஜெயலலிதா எதிர்க்கவில்லை. ஆனால் மக்களை ஏமாற்றும் கருணாநிதியின் பிரச்சாரம்- கவிதை போன்றவை மாணவர்களின் எதிர்காலத்திற்கு ஏற்றது அல்ல என்று அவைகளை நீக்கி மேன்மையான தரமான சமச்சீர் கல்வியை வழங்க 1 வருடம் கால அவகாசம் கோரப்பட்டது.
ஆனால் அதன் பிறகு உச்சநீதிமன்றதின் தீர்பின்படி இந்த நடப்பாண்டே அமுல்படுத்தபடும் என்று முதல்- அமைச்சர் ஜெயலலிதா அறிவித்து உடனடியாக நடைமுறை படுத்திவிட்டார்கள். இதுபோன்று தமிழகத்தின் எதிர்காலத்தை கவனத்தில் கொண்டு ஜெயலலிதா ஆட்சி நடத்துகிறார். ஆனால் கருணாநிதி தமிழர்கள் எக்கேடுகெட்டு போனாலும் பரவாயில்லை. தனது குடும்பம் மட்டும் வாழ்தால் போதுமென ஆட்சி நடத்தினார்.
இலங்கை தமிழர்கள் 1 லட்சம் பேர் போரில் கொல்லப்பட்டதை அப்போது முதல்- அமைச்சராக இருந்த கருணாநிதி தடுக்கவில்லை மாறாக மக்களை ஏமாற்றுவதற்காக நாடகம் ஆடினார். ஆனால் ஜெயலலிதா ஆட்சிக்கு வந்த உடன் சட்டசபையில் இலங்கைக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றி உலக நாடுகளின் ஆதரவை கோரி இலங்கைக்கு அமெரிக்கா பொருளாதார தடை விதிக்க செய்தார்.
ஆணவத்தில் அ.தி.மு.க வைப் பற்றி வீரவசனம் பேசிய மு.க.அழகிரி மதுரை மாவட்டத்தில் ஒரு தொகுதியை கூட பிடிக்கமுடியவில்லை. இதனால் இன்றைக்கு டில்லியை சுற்றிசுற்றி வருகிறார். விவசாய மக்களின் வாழ்வாதாரத்தை உயர்த்தும் நோக்கில் விவசாய பணிகளை இயந்திரங்களின் மூலம் மேற்கொள்ள அரசு மூலமாக விவசாய இயந்திரம் வழங்கப்பட உள்ளது.
திருத்திய நெல் சாகுபடி முறை , எழை எளிய மக்களுக்கு பசுமை வீடு , மாணவர்களின் திறமையை வளர்க்க லேப்டாப் , முதியவர்களுக்கு உதவி திட்டம் , மீனவர்களுக்கு சலுகைகள் என அனைத்து தரப்பு மக்களுக்கு பல்வேறு திட்டங்களை வழங்கி முதல்-அமைச்சர் ஜெயலலிதா சிறப்பாக ஆட்சி நடத்துகிறார். குறிப்பாக வரும் 5 ஆண்டுகளில் தமிழகம் அனைத்து துறைகளிலும் முதலிடம் பெறுவதை குறிக்கோளாக கொண்டு ஆட்சி நடத்தும் ஜெயலலிதாவுக்கு தொடர்ந்து பொதுமக்கள் ஆதரவு அளிக்கவேண்டும்.
வரும் உள்ளாட்சி தேர்தலில் அனைத்து இடங்களிலும் அ.தி.மு.க.வினர் வெற்றி பெற்று அனைத்து தரப்பு மக்களுக்கும் அரசின் திட்டங்களை கொண்டு போய் சேர்த்து மக்கள் சேவையாற்றிட தயாராக இருக்கவேண்டும். மேற்கண்டவாறு அமைச்சர் வைத்திலிங்கம் பேசினார். கழக வழக்கறிஞர் பிரிவு இணைச்செயலாளர் ஏ.ஜி.தங்கப்பன் முன் னாள் எம்.எல்.ஏ சி.ராஜேந்திரன்.மாவட்ட கழக துணைச்செயலாளர் பொன்.முத்துவேல் மாவட்ட பேரவை செயலாளர் ஒரத்தநாடு மா.சேகர் மாவட்ட இலக்கிய அணிச் செயலாளர் சாமி.தவிடன்.
மாவட்ட மாணவர் அணிச் செயலாளர் ஆர்.காந்தி மாவட்ட எம்.ஜி.ஆர். மன்ற செயலாளர் மலையய்யன், மாவட்ட இளைஞர் அணி இணைச் செயலாளர் கு.ராஜமாணிக்கம் ஒன்றிய இலக்கிய அணி செயலாளர் ரா.காளிமுத்து, ஒன்றிய குழு உறுப்பினர்கள் அரசு.பா.ராமச்சந்திரன் , எம்.ராமன் ஒன்றிய பாசறை செயலாளர்கள் எஸ்.ராஜேஷ்கண்ணன் ( ஒரத்தநாடு ) என்.எஸ்.டி. நடேஷ் ( திருவோணம் ) உள்ளிட்ட கட்சி பிரமுகர்கள் பலர் கூட்டத்தில் கலந்து கொண்டனர். முடிவில் ஒரத்தநாடு நகரசெயலாளர் தா.செல்வம் நன்றி கூறினார்.