சென்னை, ஆக 3-
பிரபல நடிகை ரஞ்சிதா, நித்யானந்தாவுடன் ஒன்றாக இருப்பது போன்ற ஆபாச வீடியோ கடந்த ஆண்டு மார்ச் மாதம் 2-ந்தேதி சன் டி.வி.யில் வெளியானது. இது தொடர்பாக பெங்களூர் போலீசார் வழக்கு பதிவு செய்து நித்யானந்தாவை கைது செய்தனர். பின்னர் ஜாமீனில் வெளியான நித்யானந்தா வழக்கம் போல ஆசிரம பணிகளை செய்து வருகிறார்.
இது தொடர்பான வழக்கு பெங்களூர் கோர்ட்டில் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் நித்யானந்தாவின் தமிழக ஆசிரம தலைவர் நித்ய சர்வானந்தா, நடிகை ரஞ்சிதா ஆகியோர் சென்னை மாநகர போலீஸ் கமிஷனர் திரிபாதியை தனித்தனியே சந்தித்து கடந்த மாதம் புகார் அளித்தனர்.
அதில் போலியாக மார்பிஸ் முறையில் தயாரிக்கப்பட்ட ஆபாச வீடியோக்களை திட்டமிட்டு சன் டி.வி.யில் ஒளிபரப்பினார்கள். இதனை நிறுத்த வேண்டும் என்றால் ரூ.60 கோடி தர வேண்டும் என்று மிரட்டினார்கள் என்று புகாரில் குறிப்பிடப்பட்டிருந்தது.
சன் டி.வி.யின் நிர்வாக இயக்குனர் கலாநிதி மாறன், முதன்மை செயல் அதிகாரி சக்சேனா, அவரது உதவியாளர் அய்யப்பன் ஆகியோரின் பெயர்கள் புகார் மனுவில் குறிப்பிடப்பட்டிருந்தது.
இது தொடர்பாக மத்திய குற்றப்பிரிவு போலீஸ் விசாரணைக்கு கமிஷனர் திரிபாதி உத்தரவிட்டார். துணை கமிஷனர் ராதிகா தலைமையிலான போலீசார் விசாரணை நடத்தி வந்தனர்.
இந்த நிலையில் சக்சேனா தொடர்பான அனைத்து வழக்குகளும் சி.பி.சி.ஐ.டி.க்கு மாற்றப்பட்டன. நித்யானந்தா, ரஞ்சிதா ஆகியோர் கொடுத்த புகார் மனுக்களும் சி.பி.சி.ஐ.டி. போலீசாரிடம் ஒப்படைக்கப்பட உள்ளது.
இது தொடர்பாக சி.பி. சி.ஐ.டி. போலீஸ் அதிகாரி ஒருவர் கூறும் போது சக்சேனா மீதான நிலுவையில் உள்ள வழக்குகளை நாங்கள் தொடர்ந்து விசாரிப்போம். இதற்காக விரைவில் தனி அதிகாரி நியமிக்கப்பட உள்ளார் என்றார்.