சிறுவாபுரி முருகன் ஆலயம் || siruvapuri murugan temple
Logo
சென்னை 08-02-2016 (திங்கட்கிழமை)
சிறுவாபுரி முருகன் ஆலயம்
சிறுவாபுரி முருகன் ஆலயம்
 
தலவரலாறு:
சென்னைக்கு வட மேற்கே சென்னை- கல்கத்தா நெடுஞ்சாலையில் சென்னையில் இருந்து 33-வது கிலோமீட்டரில் இடதுபக்கம் (மேற்கே) பிரியும் சாலையில் சிறுவாபுரி பாலசுப்பிரமணிய சுவாமியின் தோரண வாயில் (நுழைவாயில்) நம்மை வரவேற்கிறது. இந்தத் தோரண வாயிலில் இருந்து மேற்கே 3 கிலோ மீட்டர் தொலைவில் சின்னம்பேடும் எனத் தற்போது அழைக்கப்படும் சிறுவாபுரி பாலசுப்பிரமணியப் பெருமான் ஆலயம் அமைந்துள்ளது.
 
நுழைவாயிலைக் கடந்து ஆலயம் நோக்கி செல்கையில், சாலையின் இரு பக்கமும் பசுமையான நிலங்கள், வீசியாடும் நெற்கதிர்கள், குலுங்கிக்குலை தள்ளி ஆடும் வாழைத் தோப்புகள், கிராமத்தின் நுழைவாயிலில் சப்தமாதர் கோவில் நடுநாயகமாக அகத்தீஸ்வரர் கோவில், மேற்கே பெருமாள் கோவில், பெருமாள் கோவிலுக்குப் பின்னால் விஷ்ணு, துர்க்கை கோவில்கள், வடக்கே வாயு மூலையில் சிறுவாபுரி பாலசுப்பிரமணிய சுவாமி ஆலயம் கம்பீரமாக நம் கண்ணுக்கு காட்சி தருகிறது.
 
இவ்வூரில் ராமர் கோவில், விநாயகர் கோவில், ஜைனர் 22-வது தீர்த்தங்கரர் பள்ளி என கோவில் பல இருப்பதை, அருணகிரிநாதர், "ஆடகம்பயில் கோபுரம் மாமதில் ஆலயம் பலவீதியுமே நிறைவான தென்சிறுவாபுரி'' எனத் திருப்புகழில் பாடியுள்ளார். சிறுவாபுரி அருள்மிகு பாலசுப்பிரமணிய சுவாமி கோவில் ராஜகோபுரம் 5 நிலைகளுடன் கம்பீரமாக `வருக! வருக!' எனக் கட்டியம் கூறி நம்மை வரவேற்கிறது.
 
`ஐம்பொறிகளையும், ஐம்பூதங்களையும் அடக்கு, அடக்கு! என ராஜகோபுரம் நம்மிடம் கூறுவது போல் உள்ளது. உயரமான கொடிமரம், கொடிமரத்துக்கு முன்னால் அழகே திருஉருவம் கொண்டதுபோல் மரகதப் பச்சைமயில் கொலுவாக வீற்று இருக்கிறது. இதுபோல் சிறந்த வடிவமையுள்ள மரகத மயில் உலகிலும் வேறு எங்கும் இல்லை என உறுதியாக கூறலாம்.
 
கோவிலின் தென்மேற்கு மூலையில் மரகத கல்லில் சூரியனார் ஒளி வீசிக்கொண்டு இருக்க, நேர் எதிரில் கிழக்கே திருமுகம் கொண்ட கம்பீரமான ராஜகணபதி மரகத கல்லில் பச்சைப் பசேல் என மன்னிட `மரகத விநாயகர்' என்ற நாம கரணத்துடன் வேண்டுவதை, அளிக்க அழகுக் கோலத்துடன் வீற்று இருக்கிறார்.
 
பின் பிரகாரத்தில் சண்டிகேஸ்வரரர், ஆதிமூலவர் (முன் இருந்த பாலசுப்பிரமணிய சுவாமியின் விக்ரகம்), நாகர், பைரவர், நவக்கிரகம் என பரிவார தேவதைகள் புடைசூழ சிறுவாபுரி பாலசுப்பிரமணியர் காட்சி தருகிறார். இங்கு நவக்கிரகம் ஒன்பதும் வாகனத்துடன் இருப்பது சிறப்பாகும். சந்ததமும், அடியார் சிந்தையில் குடியிருக்கும் முருகப்பெருமான், நம் சிந்தையைக் கவர்கிறார்.
 
கலியுகத்தின் பேசும் கடவுளான பாலசுப்பிரமணியப் பெருமானின் அருட்பார்வை நம்மை  நோக்கிப் பாய்ந்துவர, சிறுவை மேவி வரம் மிகுந்த பெருமாள் நாம் வேண்டும் வரங்களை அள்ளி அளித்தர, உடலும் உள்ளமும் லேசாகி மிதந்து வர, நம்மை நாம் இழந்து அவன் திருவடிகளில் சரணாகிறோம்.
 
ஆகம சார சொரூபன், சேவல மாமயில் பிரீதன், தேவசேனாதிபதி, தன்தரள மணிமார்பன், தண்தமிழ்மிகு நேயன், சந்தமும் அடியார் சிந்தையில் குடிகொண்டவன், செம்பொன் எழில் சொரூபன், புண்டரிக விழியாளன், தேவேந்திரன் மகள் மணவாளனின் முன் வலது கரம் அடியவருக்கு அபயம் அளிக்க பின்வலக்கரம் ஜபமாலை ஏந்தி இருக்க, முன் இடக்கரம் இடுப்பிலும், பின் இடக்கரம் கமண்டலமும் தாங்கி, பிரம்மசாஸ்தா கோலத்தில் காட்சி அளிக்கிறார்.
 
பிரம்மனைத் தண்டித்து பிரம்மனின் படைத்தல் தொழிலை ஏற்றுக்கொண்ட கோலம் கொண்ட முருகப்பெருமானை வணங்கினால் வித்தைகள் பல கற்ற பேரறிஞர் ஆகலாம் என "பந்திநிறை அறிவாள்'' எனும் திருப்புகழில் அருணகிரிநாதர் பாடியுள்ளார். முக மண்டபத்தில் அருணகிரிநாதர் சிறுவை பாலசுப்பிரமணிய பெருமானை கண்ட பெருமிதத்துடன் திருப்புகழ் பாடி நிற்கும் கோல வடிவைக் காணலாம்.
 
முருகப்பெருமானுக்கு தெற்கே அண்ணாமலையார் மரகதப்பச்சையில் கரும்பச்சை வைரம் போல் பிரகார ஜோதியாகக் காட்சி அளிக்கிறார். இத்துணை பெரிய மரகதலிங்கம் வேறு எங்கும் இல்லை. அருணகிரிநாதர் திருவண்ணாமலைக்கு "மயிலுமாடி நீயுமாடி வரவேணும்'' என்று பாடியதற்கு இணையாக, இங்கு ''மைந்துமயில் உடன் ஆடிவர வேணும்'' என பாடி உள்ளதால் அண்ணாமலையாரும், உண்ணமுலை அம்மையும் இங்கு எழுந்தருளி இருக்கிறார்கள்.
 
அருணாசலேசுவரர், அபீதகுஜாம்பிகை (உண்ணாமுலை) இருவருக்கும் நடுவே அற்புதத் தோற்றமாய், அச்சம், மடம், நாணம், பயிர்ப்புடன் கூடிய வள்ளிநங்கை தம் மணவாளப் பெருமான் முருகனை தைத்தலம் பற்றும் திருமண காட்சியாய் எழுந்தருளி இருக்கிறார். கைத்தலம் பற்றுகின்ற பொழுது இயற்கையாய் பெண்ணுக்கு ஏற்படும் கூச்சம், நாணம், பயிர்ப்பு காரணமாக வள்ளி ஒய்யாரமாக லேசாக முன் சாய்ந்து, ஒரு கண்மூடிய நிலையில் நிற்கின்ற கோலத்தைக் காணக்கண் கோடி வேண்டும்.
 
பின்புறத்திலிருந்து நோக்கும் பொழுது வள்ளி கள்ளத்தனமாக அரைக்கண் பார்வையாக முருகனை நோக்குவது போல் சிற்பி சிலையை வடித்திருக்கிறார். மிக நேர்த்தியான வேலைப்பாடு. இதுபோன்ற சிலை வடிவம் வேறு எங்கும் இல்லை. ஓவியமாக வள்ளி மலையில் இருக்கும் கோலத்தை, சிலை வடிவமாக இங்கு அமைத்து இருப்பது மிகச்சிறப்பாக வள்ளி மணவாளப்பெருமானின் அழகைக்காண கண்கோடி வேண்டும்.
 
இங்குள்ள விக்கிரகங்களில் பாலசுப்பிரமணிய சுவாமி, ஆதிமூலர், நவக்கிரகம் தவிர மற்ற விக்கிரகங்கள் பச்சைக்கல்லில் செய்யப்பட்டவை. முருகன் சிலை கூட முன்பு மரகதபச்சை கல்லில் இருந்து காலப்போக்கில் பின் நிறுவப்பட்டபோது கருங்கல்லில் செய்யப்பட்டிருக்கலாம். இதுபோல் எல்லா விக்கிரகங்களும் மரதகப்பச்சை கல்லில் உள்ளது போல் வேறு எந்தக்கோவிலிலும் இல்லை.
 
அருணகிரிநாதர் நான்கு திருப்புகழ்களினால் இந்த ஸ்தலத்தைப் பாடியுள்ளார். அருணகிரிநாதர் பாடிய 10000 திருப்புகழ்களில் நம் கைக்கு கிடைத்து இருப்பவை 1330 திருப்புகழ்தாம். அவற்றுள் 224 ஸ்தலங்களை பாடியுள்ளார். திருப்புகழ் பாடல் பெற்ற ஸ்தலங்களில் 9 இடங்கள் இதுவரை கண்டறியப்படாமல் இருக்கின்றன. கண்டறியப்பட்ட 215 ஸ்தலங்களில் 35 ஸ்தலங்களில்ச் சிறப்பாக பாடியுள்ளார்.
 
8 ஸ்தலங்களில் 4 திருப்புகழ் பாடி இருக்கிறார். 6 ஸ்தலங்களுக்கு அர்ச்சனை திருப்புகழ் பாடியுள்ளார். திருப்புகழில் பாடப்படும் நாயகனாக முருகன் இல்லாமல் 6 பாடல்களில் பாடும் நாயகனாக விநாயகப் பெருமானை பாடியுள்ளார். மேற்கண்ட திருப்புகழ் ஆய்வின்படி 6 அர்ச்சனைத் திருப்புகழில் ஒன்றாக சிறுவைக்கு "சீதளவாரிஜ பாதா நமோ நம:'' என ஒரு பாடலுடன் நான்கு திருப்புகழ் பாடிய 8 ஸ்தலங்களில் ஒன்றாக சிறுவாபுரியும், அமைந்து இருப்பது சிறப்பு.
 
`அண்டர்பதி குடியேற' என்ற முதல் திருப்புகழில் "மகிமீற, மகிழ்கூர, மகிழ்வாக, மகிகூற, இன்பமுற' என ஐந்து இடங்களில் மகிழ்ச்சிப் பெருக்கு கூறப்பட்டது போல் வேறு எந்த திருப்புகழிலும் சிறப்பாக ஐந்து முறை சொல்லப்படவில்லை என்பது இன்னும் ஒரு சிறப்பு. இந்த திருப்புகழின் ஈற்றடியில் கடைசியில் சொற்கள் ஒரு வாக்கியமாக பொருள்பட அமைந்து இருப்பதும் ஓர் அரிய சிறப்பாகும்.
 
"அருளாலே, மகிழ்வாக, எதிர்காண, வரவேணும், உயர்தோளா, வடிவேலா, முருகேசா, பெருமாளே!'' என ஒரு வாக்கியமாக அமைவதுபோல் வேறு எந்த ஒரு திருப்புகழிலும் அமையவில்லை. இவை எல்லாவற்றிற்கும் மேலாக இந்த ஸ்தலத்துக்கு வருபவர் கடுமையான விரதமாக பசி பட்டினி இருந்து நோன்பு நோற்று இறைவனை அடைய வேண்டியதில்லை.
 
"சந்ததமும் அடியார்கள் சிந்தையது குடியான தண் சிறுவைதனில் மேவு பெருமாளே!'' என்று இவரை "எப்போதும் நினைத்தாலே போதும் அடியவர்க்கு எளிமையாக முருகன் எழுந்தருளி வருவார்'' எனக்கூறுகிறார் அருணகிரிநாதர். இரண்டாவது திருப்புகழ் அர்ச்சனை திருப்புகழாக இருப்பது சிறப்பு. பழனிக்கு "நாதவிந்து கலாதி நமோ நம'' என்றும் திருப்புகழைப்போல் சிறுவைக்கு "சீ தள வாரிஜ பாதா! நமோ நம'' எனும் திருப்புகழை அருணகிரிநாதர் பாடியுள்ளார்.
 
அர்ச்சனை திருப்புகழ் 6-ல் சரணாகதியின் மேன்மையான முருகனின் பாத சரணத்தைக் குறித்து சிறுவைக்கு எழுதி இருப்பது சிறப்பு. "வானவர் ஊரினும் வீறாகிலீறளகாபுரி வாழ்வினும் மேலாக திருவாழ் சிறுவாபுரி வாழ்வே சுதாரிபர் பெருமாளே எனப்பாடி இங்கு வருபவர்கள் தேவேந்திர பட்டணத்தை காட்டிலும் வளமாக வாழ்வர் என அழுத்தம் திருத்தமாக எடுத்துச்சொல்கிறார். மூன்றாவது திருப்புகழில் மானிடப்பிறப்பின் துன்பம் எல்லாம் நீங்குவதற்கு வழிகூறுகிறார் அருணகிரி நாதர்.
 
நான்காவது திருப்புகழில் "ஜெயமதான நகர்'' என்று சிறுவையே வெற்றி கொண்டநரம் என்கிறார். ஜெயமதான நகர் அளகை போல வளமிகுந்த சிறுவைமேலி வரமிருந்த பெருமாளே என வெற்றியை தன்னிடம் அமைத்துக் கொண்ட சிறுவை நகரம்.
 
குபேரப்பட்டணம் என அழைக்கப்பட்ட அளகாபுரி போல் எல்லா வளங்களும் அதிகமாகக் குடிகொண்டுள்ள சிறுவாபுரியில் குடிகொண்டு உள்ள சிறுவை முருகன் வரம் அதிகம் தன்னிடம் இருப்பு உள்ளவன் என அருணகிரிநாதர் சொல்வது. வரமிகுந்தவனை அடிக்கடி நாடி வந்து அவனிடம் இருப்புள்ள வரங்களைப் பெற்று செல்ல வாருங்கள், வாருங்கள்! என அழைப்பதுபோல உள்ளது.
 
கோவில் நடை திறக்கும் நேரம்:
 
சிறுவாபுரி கோவில் ஞாயிறு தோறும் காலை 6 மணி முதல் மதியம் 1 மணி வரை திறந்து இருக்கும். பிறகு பிற்பகல் 4 மணி முதல் 8 மணி வரை நடைதிறந்து இருக்கும். செவ்வாய்கிழமைகளில் அதிகாலை 5 மணி முதல் இரவு 9 மணி வரை வழிபாடு செய்யலாம். மற்ற நாட்களில் காலை 7.30 மணி முதல் 12 மணி வரையிலும், மாலை 5 மணி முதல் இரவு 8 மணி வரையிலும் தான் வழிபாடு செய்ய முடியும்.
 
நெல்லி   முள்ளி   பொடி   வழிபாடு:
 
ஆலயத்தில் தினமும் நடைபெறும் அபிஷேகத்தில் 48 நாட்கள் கொண்ட ஒரு மண்டலம் வரை நெல்லி முள்ளி பொடி சேர்ப்பித்தால் நலம் பெறலாம். இதற்காக தினமும் ஒவ்வொருவரும் ஆலயத்திற்கு வரவேண்டியதில்லை. 48 நாட்களுக்கான பொடியை ஆலய சிவாச்சாரியாரிடம் கொடுத்து தினமும் அபிஷேகத்தில் சேர்க்க வழி செய்யலாம்.
 
பூமி சம்பந்தமான அனைத்து கோரிக்கைகள் நிறைவேறவும், வீடு இல்லாதவர்களுக்கு புதிய வீடு அமையவும், பிள்ளைப்பேறு இல்லாதவர்கள் பிள்ளைப்பேறு பெறவும், கடன் தொல்லைகள் தீரவும், சிறுவாபுரி சிறந்த பரிகார தலமாக விளங்குகிறது. நம்பிக்கையுடன் பிரார்த்தனை செய்தவர்களின் பிரார்த்தனைகள் நிறைவேறி வருவது நிதர்சன உண்மையாகும்.
 
சிறுவாபுரி  கிராமத்தில்  ஓர்  நிகழ்வு:
 
முன்னொரு காலத்தில் முருகம்மையார் என்ற முருக பக்தர் சிறுவாபுரியில் வாழ்ந்து வந்ததாக வரலாறு ஒன்று உண்டு. அவர் எப்போதும் ஓயாது "முருகா'', "முருகா'' என்று இறைவன் பெயரை தன் நினைவாகவே உச்சரித்து வந்தார். இச்செயல் முருகம்மையார் கணவருக்கு தொல்லையாக இருந்தது.
 
அதனால், கணவர் வெகுண்டெழுந்து தன் மனைவியின் கையை வெட்டி துண்டித்தார். முருகம்மையோ இச்சூழ்நிலையிலும், முருகனை மறவாத நிலையில் வேண்டிட, முருகன் அவன் முன் தோன்றி காட்சி தந்து துண்டித்த கையை முன்னிருந்தபடி சேர்த்து அருளினார்.
 
ஊரின் சிறப்பு:
 
நாற்புறமும் தோப்புகள் சூழ்ந்த பசுமையான கிராமம் சிறுவாபுரி. வாழைத் தோப்புகள் நிறைந்த நீர் வளம் மிக்க பூமி. முருகனின் கோவிலின் மேற்கில் வற்றாத தாமரைத்  தடாகம். தொண்ட வளநாடு சான்றோர் உடைத்து என்பதற்கேற்ப சேக்கிழார், பேயாழ்வார், திருமழிசை ஆழ்வார், திருவள்ளுவர் போன்ற அறிஞர்கள் தோன்றிய பகுதியைச் சேர்ந்த ஊர்.
 
திரெனபதி அம்மன் கோவில் அகத்தீஸ்வரர் கோவில், திருஊராகப் பெருமாள் கோவில், விஷ்ணுதுர்க்கை கோவில் என கோவில்கள் சூழ்ந்த கிராமம். இதையே அருணகிரிநாதர் "ஆடகம்பயில் கோபுரம் மாமதில் ஆலயம்  பல வீதியுமே நிறைவான தென் சிறுவாபுரி'' என திருப்புகழில் பாடி  உள்ளார்.
 
நடைபெற உள்ள திருப்பணிகள்:
 
சிறுவாபுரி கோவிலில் ஏராளமான திருப்பணிகள் செய்ய வேண்டியதுள்ளது. கோவில் பிரகாரங்கள் மற்றும் சன்னதிகள் பழமை காரணமாக சிதிலடைந்துள்ளன. இவற்றை சீரமைத்து மேம்படுத்த பக்தர்கள் உதவியை கோவில் நிர்வாகம் எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறது. எத்தனையோ பக்தர்களுக்கு அள்ள அள்ள குறையாத அருளை வாரி வழங்கிக்கொண்டிருக்கும் ஸ்ரீபாலசுப்பிரமணியருக்கு திருப்பணிகள் செய்து மிகுந்த புண்ணியத்தை தரும்.
 
இந்த கோவில் திருக்குளம் சீரமைப்பு பணிகள் பாதியில் நின்றுள்ளது. ரூ.40 லட்சம் செலவில் இந்த தாமரைக்குளத்தை அழகுபடுத்த திட்டமிடப்பட்டுள்ளது. 20 லட்சம் ரூபாய் செலவில் பக்தர்கள் மண்டபம் கட்ட முடிவு செய்யப்பட்டுள்ளது. நெய்தீபம் ஏற்றுவதற்கு த
 
னி மண்டபம் கட்ட பரிந்துரைக்கப்பட்டுள்ளது. காலனி பாதுகாப்பு இடம், பொருட்கள் வைக்கும் அறை மற்றும் அலுவலகம் கட்ட வேண்டியதுள்ளது. பக்தர்கள் தற்போது வரிசையில் நிற்கும் இடம் மேற்கூரையின்றி இருக்கிறது. அந்த கூரை அமைக்கும் பணி செய்ய வேண்டியதுள்ளது.
 
அன்னதான கூடம், கழிவறைகள், வாகனம் நிறுத்தும் இடம் போன்றவைகளும் செய்து முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது. உபயதாரர்கள் முன்வந்தால்தான் இந்த திருப்பணிகளை விரைந்து முடிக்க முடியும்.
Banner.gif

AadidravidarMatrimony_300x100px_22-12-15(Maalaimlar).gif