Recommendations
Recent Activity
நடுரோட்டில் சமையல் செய்து ம.தி.மு.க. போராட்டம்
கோவை, ஜூன். 28-
 
நடுரோட்டில் விறகு அடுப்பில் சமையல் செய்து ம.தி.மு.க. வினர் போராட்டம் நடத்தினார்கள். பெட்ரோல், கியாஸ், டீசல், மண்எண்ணை விலை உயர்வை கண்டித்து ம.தி.மு.க. சார்பில் கோவை செஞ்சிலுவை சங்க அலுவலகம் முன் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு மாநகர் மாவட்ட செயலாளர் ஆர்.ஆர். மோகன் குமார், புறநகர் மாவட்ட செயலாளர் ஈஸ்வரன் ஆகியோர் தலைமை தாங்கினார்கள்.
 
அப்போது நடுரோட்டில் விறகு அடுப்பில் சமையல் செய்தனர். கியாஸ் விலை உயர்வை கண்டித்து இந்த நூதன போராட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்தில் பெட்ரோல், கியாஸ் மண் எண்ணை விலை உயர்வை கண்டித்து கோஷங்கள் எழுப்ப பட்டது.
 
ஆர்ப்பாட்டத்தில் மாநகர் மாவட்ட ம.தி.மு.க. செயலாளர் ஆர். ஆர். மோகன் குமார் பேசியதாவது:-
 
பெட்ரோல், கியாஸ், டீசல் விலை உயர்வு பூதம் போல் கிளம்பி உள்ளது. விலை ஏற்றம் தவிர்க்க முடியாதது என்று மத்திய அரசு கூறுவது மக்களை ஏமாற்றும் திட்டம்.அப்பாவி மக்கள் மீது விலையேற்றத்தை திணிக்கிறது. சர்வதேச அளவில் கச்சா எண்ணை விலை உயர்ந்துள்ளதாக கூறுவது மக்களை முட்டாளாக்கும் செயல். ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் 10 - க்கும் மேற்பட்ட முறை பெட்ரோல் விலை உயர்ந்துள்ளது. மத்திய அரசின் மக்கள் விரோத போக்கை கண்டிக்கிறோம். கியாஸ் விலை உயர்வை திரும்ப பெற வேண்டும்.
 
இவ்வாறு அவர் பேசினார்.