மதுரை, ஜூன். 18-
மதுரை மதிச்சியத்தை சேர்ந்தவர் வக்கீல் ஜெயராம். இவர் மதுரை தலைமை ஜூடிசியல் மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் ஒரு வழக்கு தொடந்தார். அவர் தாக்கல் செய்த மனுவில் மதுரை மாநகராட்சி 9-வது வார்டில் மாநகராட்சிக்கு சொந்தமான சமுதாய கூடத்திற்கு பின்புறம் உள்ள காலி இடத்தை ஆக்கிரமிப்பு செய்து மதிச்சியத்தை சேர்ந்த தி.மு.க. பிரமுகர் சுந்தரராஜன், அவரது மனைவி ரங்கம்மாள் ஆகியோர் கட்டிடம் கட்டி வருகிறார்கள்.
இது குறித்து மேயர், கமிஷனர் மற்றும் அதிகாரிகளிடம் புகார் தெரிவித்தும் நடவடிக்கை எடுக்கப்பட வில்லை. மேலும் மாநகராட்சி மேயர், ஆணையாளர் ஆகியோரது தூண்டுதலின் பேரில் அதிகாரிகளும் ஆக்கிரமிப்பு தொடர்பாக நடவடிக்கை எடுக்கவில்லை.
இந்த விவகாரத்தில் லஞ்சம் கைமாறியுள்ளது. இதனால் விதிகளுக்கு எதிராக செயல்பட்டுள்ளனர். அவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.
இது குறித்து விசாரணை நடத்திய மதுரை தலைமை ஜூடிசியல் மாஜிஸ்திரேட்டு டேவிட் இந்த புகார் குறித்து விசாரணை நடத்த லஞ்ச ஒழிப்பு போலீசுக்கு உத்தர விட்டார். மேலும் வருகிற ஜூலை 15-ந்தேதிக்குள் விசாரணை அறிக்கையை கோர்ட்டில் தாக்கல் செய்யவும் மாஜிஸ்திரேட்டு உத்தர விட்டார்.
கோர்ட்டு உத்தரவின் பேரில் மதுரை லஞ்ச ஒழிப்பு போலீசார் மதுரை மேயர் தேன்மொழி, கமிஷனர் செபாஸ்டின், காண்டிராக்டர் மாணிக்கம் பிள்ளை, மாநகராட்சி உதவி கமிஷனர்கள் ராஜகாந்தி, ஆசைத்தம்பி, முத்துச்சாமி, நகரமைப்பு அதிகாரி முருகேசன், சர்வேயர் குருசாமி, உதவி என்ஜினீயர்கள் ஆறுமுகம், சுப்பிரமணியன், தி.மு.க. பிரமுகர் சுந்தரராஜன், அவரது மனைவி ரங்கம்மாள் உள்பட 13 பேர் மீது இந்திய தண்டனை சட்டம் 120 (பி) கூட்டு சதி செய்தல், ஊழல் தடுப்பு சட்டம் 13 (2), 13 (1) டி உள்ளிட்ட பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
மாநகராட்சி இடம் ஆக்கிரமிப்பு செய்ததற்கு லஞ்சம் கொடுக்கப்பட்டதா? என்பது குறித்து விசாரணை தொடங்கியுள்ளது. இந்த புகாரில் உண்மை இருக்கும் பட்சத்தில் சம்பந்தப் பட்டவர்களை கைது செய்யவும் லஞ்ச ஒழிப்பு போலீசார் நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர்.
மேலும் இது தொடர்பாக விசாரணை அறிக்கை கோர்ட்டில் தாக்கல் செய்ய இருப்பதால் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ள மேயர் தேன்மொழி, கமிஷனர் செபாஸ்டின் உள்ளிட்ட 13 பேரிடம் இன்னும் ஓரிரு நாளில் விசாரணை நடத்த லஞ்ச ஒழிப்பு போலீசார் முடிவு செய்துள்ளனர்.
இந்த நிலையில் மேயர் தேன்மொழி தனக்கு முன் ஜாமீன் வழங்கக்கோரி மதுரை ஐகோர்ட்டு கிளையில் நேற்று மனுத்தாக்கல் செய்தார். இந்த மனு வருகிற திங்கட்கிழமை (20-ந்தேதி) விசாரணைக்கு வருகிறது. ஐகோர்ட்டு பிறப்பிக்கும் உத்தரவை பொறுத்து மேயர் தேன்மொழி கைதாவாரா? என்று தெரியவரும்.
இதனிடையே மேயர் தேன்மொழி வெளியிட்டுள்ள ஒரு அறிக்கையில், ஆக்கிரமிப்பு செய்ததாக கூறப்படும் இடம் சுந்தரராஜன் மனைவி ரங்கம்மாள் என்பவருக்கு பாத்தியப்பட்டது என்று தாசில்தார் வழங்கியுள்ள ஆவணங்கள் தெரிவிப்பதாக நகரமைப்பு அதிகாரிகள் என்னிடம் தெரிவித்துள்ளனர். மேற்படி பட்டாதாரர் மத்திய அரசின் வீடு கட்டும் திட்டத்தில் வீடு கட்டி வருவதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
எனவே தனி நபருக்கு சொந்தமான இடத்தை இடிக்கும் அதிகாரம் மாநகராட்சிக்கு இல்லை. இது தொடர்பான அனைத்து ஆவணங்களையும் நீதிமன்றத்திலும், போலீசாரிடமும் சமர்ப்பிக்க மாநகராட்சி நடவடிக்கை எடுத்து வருகிறது என்று தெரிவித்துள்ளார்.