Recommendations
Recent Activity
கோவாவில் தற்கொலைக்கு முயன்றேன் சொகுசு வாழ்க்கைக்கு ஆசைப்பட்டு கோடிக்கணக்கில் மோசடி செய்தோம்; மோசடி மன்னனின் மனைவி பரபரப்பு வாக்குமூலம்
மதுரை, மே 7-
 
 
மதுரை திருநகர் பகுதியை சேர்ந்தவர் வெங்கடேஷ் என்ற விவேகானந்தன். (வயது38). இவரது மனைவி பிருந்தா. சகோதரர் கெவின், 3 பேரும் மதுரை திருநகர், திருமங்கலம், விருதுநகர் பகுதிகளில் ஏராளமானவர்களிடம் வெளிநாட்டில் வேலை வாங்கி தருவதாகவும், சத்துணவு அமைப்பாளர், ஆசிரியர் பணி பெற்று தருவதாகவும், குறைந்த விலையில் தங்க நகைகள் வாங்கி தருவதாகவும் கூறி கோடிக்கணக்கில் பணம் மோசடி செய்ததாக திருநகர் போலீசில் புகார் செய்யப்பட்டது.
 
தலைமறைவான வெங்க டேஷ், மனைவி பிருந்தா உள்பட 3 பேரையும் பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டது. கோவாவில் பதுங்கி இருந்த வெங்கடேசை போலீசார் கைது செய்து கோர்ட்டில் ஆஜர்படுத்தி விட்டு மதுரைக்கு அழைத்து வரும் போது அவர் தப்பி விட்டார். மதுரையில் பதுங்கி இருந்த பிருந்தாவை போலீசார் கைது செய்தனர். வெங்டேசிடம் இருந்து ரூ.1 1/2 கோடி பணம், 1 1/2 கிலோ தங்க நகைகள் மற்றும் பிருந்தாவிடம் 94 பவுன் நகை, ரூ.2 லட்சம் ரொக்கம், 5 சொகுசு கார்கள் ஆகியவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர்.
 
கைதான மோசடி மன்னன் வெங்கடேசின் மனைவி பிருந்தா போலீசா ரிடம் அளித்துள்ள வாக்கு மூலத்தில் கூறி இருப்பதாவது:-  
 
கேரள மாநிலம் பத்தினம்திட்டா எனது சொந்த ஊர். பிளஸ்-2 வரை படித்துள்ளேன். எரிமேலியில் “லிப்ட்” ஆபரேட்டராக வேலை பார்த்த வெங்கடேஷ் என்னை விரும்பினார். 2 பேரும் காதலித்து திருமணம் செய்து கொண்டோம். வெளிநாடுகளுக்கு சென்ற எலக்ட்ரானிக் பொருட்களை வாங்கி வந்து வெங்கடேஷ் வியாபாரம் செய்து வந்தார். அதில் வரு மானம் வந்தது. ஆனாலும் சொகுசு வாழ்க்கை வாழ வேண்டும். மற்றவர்கள் நம்மை பெரிய ஆளாக நினைக்க வேண்டும் என்று விரும்பினோம்.
 
எனவே எனது கணவர் வெங்கேடஷ், நான், எனது தம்பி கெவின் 3 பேரும் பல்வேறு இடங்களில் சொகுசு பங்களாக்களை வாடகைக்கு பிடித்து குடியிருந்து வந்தோம். அங்குள்ளவர்களை நம்ப வைத்து வேலை வாங்கி தருவதாக பணம் வசூல் செய்தோம். கோடிக்கணக்கில் பணம் சேர்ந்ததும் அந்த பகுதியை விட்டு வெளியேறி விடுவோம். இது தான் எங்கள் வேலையாக இருந்தது.
 
கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு மதுரை திருநகர் மருதுபாண்டியர் தெருவில் பங்களா வாடகைக்கு பிடித்து குடியிருந்தோம். குறைந்த விலைக்கு தங்க நகைகள் தருவதாகவும், வேலை வாங்கி தருவதாகவும் கூறினோம். இதனால் தினமும் எங்களை தேடி பலர் வந்தனர். ஒவ்வொரு வரிடமும் லட்சக்கணக்கில் பணம் பெற்றோம். கோடிக்கணக்கில் பணம் குவிந்தது.  
 
இந்த பணத்தை வைத்து திருமங்கலம் அருகே ஆலம்பட்டியில் நீச்சல் குளத்துடன் கூடிய சொகுசு பங்களா கட்டினோம். இந்த பகுதியில் உள்ளவர்களிடமும் சத்துணவு அமைப்பாளர், ஆசிரியர் பணி பெற்று தருவதாக பணம் பெற்றோம். பணம் கொடுத்தவர் களுக்கு எங்களால் சொன்ன படி வேலை வாங்கி கொடுக்க முடியவில்லை.எங்களிடம் பணம் கொடுத்து ஏமாந்தவர்கள் போலீசில் புகார் செய்ய தொடங்கினார்கள்.
 
இதனால் தலைமறைவாகி விட்டோம். போலீசார் எங்களை தீவிரமாக தேடி வந்ததை அறிந்து வெளி மாநிலத்துக்கு சென்றோம்.   கோவாவில் பங்களா எடுத்து தங்கி இருந்தபோது மோசடி பணம் பங்கு பிரிப்பதில் எனது கணவர் வெங்கடேசுக்கும், எனது தம்பி கெவினுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. நானும் எனது தம்பிக்கு வேண்டிய பணத்தை கொடுக்கும்படி கூறினேன். ஆனால் வெங்கடேஷ் மறுத்துவிட்டார்.
 
இதனால் எங்களுக்குள் பிரச்சினை ஏற்பட்டது. அப்போது நான் கொசு மருந்தை குடித்து தற்கொலைக்கு முயன்றேன். உடனே என்னை ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். இந்த நேரத்தில் மதுரையில் இருந்து வந்த தனிப்படையினர் கணவர் வெங்கடேசை கைது செய்து விட்டதாக அறிந்து கொண்டேன். அங்கிருந்து தப்பி மதுரை வந்தேன். எனது கணவர் போலீஸ் பிடியில் இருந்து தப்பி விட்டதாக தகவல் கிடைத்தது.
 
இதையடுத்து நானும் மதுரையில் இருந்து 94 பவுன் நகை மற்றும் பணத்துடன் காரில் தப்பி செல்ல முயன்றேன். அப்போது போலீசார் என்னை கைது செய்து விட்டனர். ஆடம்பரமாக வாழ வேண்டும் என்ற ஆசையால் தான் மோச டியில் ஈடு பட்டோம். பண ஆசைதான் எங்களை இந்த நிலைக்கு ஆளாக்கி விட்டது.
 
இவ்வாறு பிருந்தா தனது வாக்குமூலத்தில் தெரிவித்துள்ளார்.  
 
கைதான பிருந்தா மதுரை 6-வது ஜூடிசியல் மாஜிஸ் திரேட்டு கோர்ட்டில் ஆஜர் படுத்தப்பட்டார். அவரை வருகிற 19-ந் தேதி வரை காவலில் வைக்க மாஜிஸ்திரேட்டு சுஜாதா உத்தரவிட்டார். இதையடுத்து பிருந்தா திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டார். தப்பி ஓடிய மோசடி மன்னன் வெங்கடேஷ், கெவின் ஆகியோரை தனிப்படை போலீசார் தொடர்ந்து தேடி வருகிறார்கள்.
 
பறிமுதல் செய்யப்பட்ட ரூ.3 கோடி நகை, பணம் மற்றும் சொகுசு கார்கள் கோர்ட்டில் ஒப்படைக்கப்பட்டன.