சென்னை, மே. 4-
மே 5-ந்தேதி வணிகர் தின மாநாட்டை தமிழ்நாட்டில் உள்ள வியாபாரிகள் ஒரே சங்கத்தில் இருந்து கொண்டாடி வந்தனர். ஆனால் இந்த ஆண்டு வணிகர் சங்கம் 2 ஆக உடைந்து செயல்படுகிறது. வெள்ளையன் தலைமையில் தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரவையும், ஏ.எம். விக்கிரமராஜா தலைமையில் தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பும் செயல்படுகிறது.
இதில் எந்த சங்கம் பெரிய சங்கம் என்ற போட்டி எழுந்துள்ளது. தமிழ்நாடு முழுவதும் உள்ள வியாபாரிகள் பிரிந்து 2 சங்கத்திலும் உள்ளனர். நாளை வணிகர் தினம் என்பதால் சென்னையில் விக்கிரமராஜா தலைமையிலான தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு சார்பில் நந்தனம் ஒய்.எம்.சி.ஏ. மைதானத்தில் மாநாடு நடத்தப்படுகிறது.
இதேபோல் மறைமலை நகரில் வெள்ளையன் தலைமையிலான தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரவை சார்பில் மாநாடு நடத்தப்படுகிறது. 2 மாநாட்டுக்கும் பிரம்மாண்ட பந்தல் போடப்பட்டுள்ளது.
மாநாட்டுக்கு வியாபாரிகளை அழைத்து வருவதிலும் போட்டி ஏற்பட்டுள்ளது. எந்த மாநாட்டுக்கு கூட்டம் அதிகம் வருகிறது என்பதை வைத்து எது பெரிய சங்கம் என்ற முடிவுக்கு வர உள்ளனர். அதற்கேற்ப நடுநிலை வியாபாரிகளும் எந்த சங்கத்தில் சேரலாம் என்ற முடிவுக்கு வர உள்ளனர்.
இதற்கிடையே 2 சங்கத்தினரும் நாளை கடை அடைப்புக்கு அழைப்பு விடுத்துள்ளனர். இதனால் சென்னையில் கோயம்பேடு காய்கறி மார்க்கெட், பழ மார்க்கெட், முழுமையாக மூடப்பட்டிருக்கும்.
இதேபோல் கொத்தவால்சாவடி மார்க்கெட், புரசைவாக்கம், பெரம்பூர், வண்ணாரப்பேட்டை, மயிலாப்பூர், தியாகராயநகர், திருவொற்றியூர் உள்பட நகரின் அனைத்து பகுதிகளிலும் வியாபாரிகள் கடை அடைப்பு செய்து மாநாட்டில் பங்கேற்கிறார்கள்.
இதையொட்டி சென்னை முழுவதும் கடை அடைப்புக்கு அழைப்பு விடுத்து நோட்டீஸ் ஒட்டப்பட்டுள்ளது.