Recommendations
Recent Activity
ஊட்டி எச்.பி.எப். தொழிலாளர்களுக்கு ஆதரவாக அ.தி.மு.க., கம்யூனிஸ்டு, ம.தி.மு.க.வினர் ஆர்ப்பாட்டம்
ஊட்டி, மார்ச். 2-
 
ஊட்டி எச்.பி.எப். பிலிம் தொழிற்சாலை தொழிலாளர்கள் சம்பள உயர்வு வழங்க கோரியும், பிலிம் தொழிற்சாலையை புணரமைக்க வலியுறுத்தியும் பல்வேறு போராட்டங்களை நடத்தி வருகிறார்கள். நேற்று ஊட்டி இந்துஸ்தான் போட்டோ பிலிம் தொழிற்சாலை தொழிலாளர்கள், ஊழியர்கள் டெல்லியில் பாராளுமன்றம் முன்பு ஆர்ப்பாட்டம் நடத்தினார்கள். அதே நேரம் இவர்களின் போராட்டத்துக்கு ஆதரவாக ஊட்டி ஏ.டி.சி. சுதந்திர தின நினைவு திடலில் அ.தி.மு.க., ம.தி.மு.க., இந்திய கம்யூனிஸ்டு, மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு, மதசார்பற்ற ஜனதாதளம் ஆகியவை சார்பில் நேற்று மாலை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
 
ஆர்ப்பாட்டத்துக்கு சி.ஐ.டி.யு. மாவட்ட செயலாளர் எல்.தியாகராஜன் தலைமை தாங்கினார். அ.தி.மு.க. மாவட்ட அவை தலைவர் தேனாடு லட்சுமணன், நகர செயலாளர் வக்கீல் தேவராஜ், மாணவர் அணி செயலாளர் நந்தகுமார், அண்ணா தொழிலாளர் சங்க மாவட்ட செயலாளர் ராஜகோபால், மதசார்பற்ற ஜனதா தள மாவட்ட தலைவர் விஸ்வநாதன், ம.தி.மு.க. மாநில செயற்குழு உறுப்பினர் ஆரிப்சேட், கடநாடு ஊராட்சி தலைவர் குமார், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி மாவட்ட துணை தலைவர் வி.வி.கிரி உள்பட பலர் கலந்து கொண்டனர்.  
 
இதே போல் குன்னூர் வி.பி. தெருவில் அ.தி.மு.க., ம.தி.மு.க., மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி, இந்திய கம்யூனிஸ்டு கட்சி உள்பட சில அரசியல் கட்சிகள் சார்பில் ஊட்டி இந்துஸ்தான் போட்டோ பிலிம் தொழிற்சாலை தொழிலாளர்களுக்கு ஆதரவாக தர்ணா போராட்டம் நடைபெற்றது. இதற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி மாவட்ட செயலாளர் பத்ரி தலைமை தாங்கினார்.
 
இதில் பல்வேறு அரசியல் கட்சியினர்கள் கலந்து கொண்டனர்.