சென்னை, பிப். 27-
அகில இந்திய கிறிஸ்தவர்கள் விடுதலை முன்னணி அமைப்பின் சார்பில் 3-வது மாநில எழுச்சி மாநாடு சென்னை தேனாம்பேட்டையில் உள்ள காமராஜர் அரங்கில் நடந்தது. அமைப்பின் நிறுவனத் தலைவர் ராயல் டி. தேவக்குமார் தலைமை தாங்கினார்.
பேராயர் எஸ்.எம். ஜெயக்குமார், எஸ். ஜெயசீலன் முன்னிலை வகித்தனர். பேராசிரியர் வி.ஜி. அசோகன் உள்பட 10 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டனர்.
மாநாட்டில் ராயல் டி. தேவக்குமார் பேசியதாவது:-
சட்டசபை தேர்தலில் கிறிஸ்தவர்கள் ஆதரவு இல்லாமல் எந்த கட்சியும் ஆட்சியை பிடிக்க முடியாது. இந்த தேர்தலில் கிறிஸ்தவ மக்களுக்கு உரிய அங்கீகா ரம் வழங்க வேண்டும். நமது உரிமைகளை கேட்டுப்பெற இந்த மாநாடு நடத்தப்படுகிறது.
நமது கோரிக்கைகளை நிறைவேற்றும் கட்சிக்கு சட்டசபை தேர்தலில் ஆதரவு கொடுப்போம். இது தொடர் பாக அடுத்த வாரம் பொதுக்குழுவில் முடிவு செய்யப்படும்.
இவ்வாறு அவர் பேசினார்.
நிர்வாகிகள் க. ஜான் மோசஸ், திருச்சி வேலுச்சாமி, ச.தே. இனியன், ம.அ. ஜான்சன், வக்கீல் சுப்பிரமணி, டெல்லி ஆண்டனி, போதகர் ராஜா ஆகியோர் கலந்து கொண்டனர்.
மாநாட்டில் நிறைவேற்றப் பட்ட தீர்மானங்கள் வருமாறு:-
ஜெருசலேம் புனிதப்பயணம் மேற்கொள்ள கிறிஸ்தவ மக்களுக்கு அரசு மானியம் வழங்க வேண்டும். நீதித்துறை உள்பட அனைத்து அரசுத்துறைகளிலும் கிறிஸ்தவ மக்களுக்கு உரிய அங்கீகாரமும், பிரதி நிதித்துவமும் மத்திய அரசு வழங்கவேண்டும்.
இலங்கை அரசினால் இன்னலுக்கு உள்ளாகும் மீனவர்களின் உயிருக்கும் உடமைகளுக்கும் உரிய பாதுகாப்பு வழங்க வேண்டும்.
மேற்கண்ட தீர்மானங்கள் உள்பட 8 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.