Recommendations
Recent Activity
Stories Tag Cloud
Search Tag Cloud
No Data Available..
கலைகளில் ஜொலிக்கும் கல்லூரி மாணவி

 
எழுத்தாளர், குறும்படங்கள் இயக்கம், மாடலிங், நடனம், இசை, தொலைக்காட்சியில் நிகழ்ச்சி தொகுப்பாளர், பென்சில் ஸ்கெட்சிங், பெயின்டிங், கல்லூரி படிப்பு மற்றும் பிரபல தனியார் நிறுவனத்தில் வேலை என பல அவதாரங்களில் ஜொலிக்கும் கவிப்ரியாவின் ஷெட்ïல் தினமும் பரபரப்பும், விறுவிறுப்பும் நிறைந்தவை.
 
ஆங்கில இலக்கிய அமைப்பின் தலைவராக ஐந்து வருடங்கள் பதவி வகித்தவர். பாரத் ஸ்கவுட்ஸ் மற்றும் கைட்ஸ் சார்பில் ஜனாதிபதி விருது வாங்கியவர். தேசிய அளவில் `இளம் சாதனையாளர் விருது' பெற்றவர். கல்லூரியில் சிறந்த மாணவியாக விருது பெற்றவர்.
 
இப்படி சொல்லிக் கொண்டே போகலாம்... கவிப்ரியாவின் சாதனையை... கலைக்காக 24 மணி நேரமும் பயிற்சி, போட்டி என ஓடிக் கொண்டே இருக்கும் கவிப்ரியா, காது கேட்காத, வாய் பேசாத குழந்தைகளுக்கு மொழி அசைவு மற்றும் நடனம் கற்றுத் தருகிறார்.
 
லயோலா கல்லூரியில் விஸ்காம் கம்ïனிகேஷன்ஸ் துறையில் இரண்டாமாண்டு படிக்கும் கவிப்ரியாவிடம் பேசினோம்,
 
* எப்படி இத்தனை துறைகளில் ஆர்வம் ஏற்பட்டது?
 
எனக்கு சொந்த ஊர் ஊட்டி. அங்குள்ள பள்ளியில் படிக்கும்போதே கதக், பரதம் மற்றும் ஓவியத்தில் அதிக ஆர்வம். பேன்ஸி உடை போட்டிகளிலும் கலந்து கொண்டு பரிசுகள் வாங்கியுள்ளேன். அப்போது முதலே ஒவ்வொரு துறையிலும் ஆர்வம் ஏற்பட்டு கற்றுக் கொண்டேன். குதிரை சவாரியும் எனக்கு அத்துப்படி. ஆனாலும் எனக்கு நடனம் மற்றும் எழுத்து என்றால் உயிர்.
 
* உங்கள் குடும்பத்தைப் பற்றி..?
 
அப்பா ஆனந்தன் பிஸினஸ்மேன். அம்மா பூங்கொடி இல்லத்தரசி. அக்கா பாரதிக்கு திருமணமாகிவிட்டது. அண்ணன் கதிரவன் பிஸினஸ் செய்து வருகிறார்.    
 
* நிறைய விளம்பரங்களில் நடித்துள்ளீர்களே... சினிமாவில் அழைப்பு வந்ததா..?
 
மிஸ் சென்னை போட்டியில் இரண்டாமிடத்தை பிடித்ததும் சினிமாவிலிருந்து நிறைய அழைப்புகள் வந்தது. ஆனாலும் எனக்கு சினிமா மீது விருப்பம் இல்லை.
 
* நீங்கள் சந்தித்த சோதனைகள்..?
 
சோதனை என்று சொல்ல முடியாது. சவால்கள் என்று சொல்லலாம். அதை விளக்கி சொல்லுமளவுக்கு மிகப் பெரிய சவால்களை இன்னும் சந்திக்கவில்லை.
 
* எதிர்காலத் திட்டம்..?
 
உலகப் பிரபலங்களை பேட்டி எடுத்து புத்தகங்கள் எழுதி வருகிறேன். நான் எழுதிய புத்தகங்களை எல்லாம் வெளியிட திட்டம் இருக்கு. என்னுடைய வாழ்நாள் முழுவதும் நடனம் ஆடிக் கொண்டே இருக்க வேண்டும். நிறைய குறும்படங்களை இயக்கவும் ஆசை.
 
* உங்களை நீங்களே விமர்சனம் செய்யுங்களேன்?
 
எனக்கு தன்னம்பிக்கை ஜாஸ்தி. ஆனாலும் கொஞ்சம் சோம்பேறித்தனம் இருக்கு. அதை சரிசெய்தால் இன்னும் மேலே வருவேன். அப்புறம் ஒரு விஷயத்தை தொடங்குவதற்கு நிறைய யோசிப்பேன். அந்த வேலையை நாளைக்கு... நாளைக்கு என்று தள்ளிக் கொண்டே இருப்பேன். வேறு வழியின்றி ஆரம்பித்துவிட்டால் போதும்... முடிக்கும்வரை உணவு, தூக்கம் எதையும் பார்க்க மாட்டேன்.
 
* யாரை சந்திக்க ஆசை?
 
உலகப் பிரபலங்களை பேட்டி காண்பதால் அனைவரையும் பார்த்துவிட்டேன். குறிப்பாக முன்னாள் ஜனாதிபதி அப்துல்கலாமை சந்தித்து பேச ஆசை. அதுவும் நிறைவேறியாச்சு. அப்புறம் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவை ஒருமுறையாவது தொட்டு பார்க்கணும்!
 
* உங்கள் வாழ்க்கையில் மறக்க முடியாத சம்பவம்..?
 
நான் பதினோராம் வகுப்பு படிக்கும்போது அப்பாவும், நானும் இணைந்து ஒரு நாள் ராத்திரி முழுவதும் குதிரை சவாரி செய்தோம். மாலை ஆறு மணிக்கு ஆரம்பித்து மறுநாள் அதிகாலை ஆறு மணி வரை குதிரையிலேயே ஊட்டியை சுற்றி வந்த அனுபவம், வாழ்க்கையில் மறக்க முடியாதது.
 
* நீங்கள் கடைபிடிக்கும் சென்டிமென்ட்?
 
நம்முடைய எண்ணங்களும், வார்த்தைகளும் நம்மை வழிநடத்துவதாக நம்புகிறேன். அதேபோல் பெரியவர்கள் ஆசீர்வாதம் மற்றும் நாம் செய்யும் பிரார்த்தனைகள் மீது எனக்கு அதீதமான நம்பிக்கை உள்ளது.    
 
* உங்கள் வாழ்க்கையில் ஏற்பட்ட மிகப் பெரிய திருப்பம்?
 
ஒரு கல்லூரி மாணவியான நான், உலக பிரபலங்களை பேட்டி காண்பதற்காக நேரில் சந்தித்து உரையாடுவது என்னுடைய வாழ்க்கையில் ஏற்பட்ட மிகப் பெரிய திருப்பம்.
 
* எத்தனையோ மேடைகளை பார்த்த உங்களுக்கு மறக்க முடியாத மேடை எது?
 
எங்கள் கல்லூரி மேடைதான். கடந்த வருடம் வாய்பேசாத, காதுகேளாத குழந்தைகள் 25 பேரை வைத்து, ஒரு நடன நிகழ்ச்சி நடத்தினேன். நடனம் ஆரம்பிக்கும்போது சரியாக இசை ஒலிக்காமல் கொஞ்சம் தள்ளிப் போய்விட்டது. இதனால் காது கேளாத குழந்தைகள் இசையின் தாளத்துக்கு தக்க ஆடாமல் கொஞ்சம் சிரமப்பட்டனர். ஆனாலும் என்னுடைய அசைவை பார்த்து அவர்கள் ஆடினர். அப்போது அவர்கள் அணிந்திருந்த ஷூக்கள் மேடைப் பலகையில் பட்டு சரியான தாளம் கிடைத்தது. பார்வையாளர்களின் கைத்தட்டல் பறந்தது. மறக்க முடியாத மேடை அது.
 
* உங்களுடைய பொழுது போக்கு என்ன?
 
எப்போதும் நடனம், மிïசிக். பீச்சில் உட்காரப் பிடிக்கும். என்னுடைய படிப்பே மீடியா தொடர்பானது என்பதால் நிறைய சினிமாக்கள் பார்ப்பேன்.
 
பெர்சனல்...
 
பிடித்த நிறம்:  வெள்ளை
 
பிடித்த உணவு: கம்மங்கூழ்!
 
பிடித்த உடை: காட்டன் சேலைகள் மற்றும் சல்வார்.
 
பிடித்த இடங்கள்: இந்தியாவில் பனிப் பிரதேசங்கள்.
 
பலம்: என்னுடைய புத்திக் கூர்மை மற்றும் வார்த்தைகள்
 
பலவீனம்: சென்சிட்டிவ் குணம்...
 
அடிக்கடி வரும் கனவு: பனிமலைகளில் பரதம் ஆடுவது போல் கனவு.
 
பிடித்த விளையாட்டு: குதிரை சவாரி.
 
பிடித்த வீரர்: சச்சின். அவரது தன்னடக் கம் ரொம்ப பிடிக்கும்.
 
பிடித்தது: சிரித்த முகத்துடன் இருப்பவர்களைப் பார்க்க பிடிக்கும்.
 
பிடிக்காதது: புறம் பேசுபவர்களை பிடிக்காது.