முடி உதிரும் பிரச்சனை, பொடுகுத் தொல்லை, வழுக்கை என்று பலருக்கும் தலைமுடி சம்பந்தப்பட்ட பிரச்சனைகள் இருக்கின்றது காலம் காலமாக நமது வீடுகளில் பல இயற்கை முறைகளை பின்பற்றி வந்தாலும், தலைமுடி பிரச்சனை இன்னமும் இருந்து கொண்டேதான் இருக்கிறது.
முக்கியமாக வெளிநாடு செல்பவர்கள், எனக்கு இந்த தண்ணீர் ஒத்துக்கொள்ள மாட்டேன் என்கிறது என்று சொல்லக் கேட்டிருக்கின்றோம். ஓரளவிற்கு தண்ணீரால் முடி கொட்டும் என்பது உண்மையென்றாலும், நாம் சாப்பிடும் உணவு, கடைபிடிக்கும் சில வழிமுறைகள் மூலமாக இந்தப் பிரச்சனையை தவிர்க்கலாம்.
பெண்களைப் பொறுத்தவரை வழுக்கை என்ற விஷயம் இல்லாவிட்டாலும் முடி கொட்டுவது என்பது பொதுவான பிரச்சனையாக இருக்கிறது. முடி கொட்டுவதற்கு நாம் உட்கொள்ளும் உணவும் நல்ல சமச்சீரான, சத்தான உணவாக இருப்பது அவசியம்.
பொதுவாக தைராய்டு பிரச்சனை இருப்பவர்களுக்கும், இரத்த சோகை இருப்பவர்களுக்கும் முடி கொட்டுதல் அதிகமாக இருக்கும். நாம் கூந்தலை சரியான முறையில் பராமரிக்கும் போது முடி கொட்டுவதை தவிர்க்கலாம். பொடுகு தலையில் இருந்தாலும் முடி கொட்டும். தலையை வாரம் இரு முறை அலசினால் போதுமானது.
கண்டிஷனரை வேர்க்கால்களில் படாமல் அப்ளை செய்வது மிகவும் நல்லது. தலையில் மேலோட்டமாக மண்டையில் படாமல் ( 1 செ.மீ அளவேனும் இடைவெளி விட்டு) முடிக்கு மட்டும் படுமாறு கண்டிஷனர் அப்ளை செய்தால் முடி கொட்டாமல் இருக்கும்.
அடிக்கடி அல்லது தினமும் தலை குளிப்பவர்கள் மிகவும் மைல்டான ஷாம்பூ உபயோகிப்பது மிகவும் நல்லது. வீட்டிலேயே சீயக்காய் தயாரித்துக் கொள்ள கீழ்க்கண்ட பொருட்களை சேர்த்து அரைத்தால் நல்ல பலன் கிடைக்கும்.
சீயக்காய்- 1 கிலோ
செம்பருத்திப்பூ- 50
பூலாங்கிழங்கு - 100 கிராம்
எலுமிச்சை தோல் (காய வைத்தது, பொடுகை நீக்கும்)- 25
பாசிப்பருப்பு (முடி ஷைனிங்குக்கு) - கால் கிலோ
மரிக்கொழுந்து (வாசனைக்கு) - 20 குச்சிகள்
கரிசலாங்கண்ணி இலை(முடி கருப்பாக) - 3 கப் அளவு
மேற்கண்ட அனைத்தையும் வெயிலில் காய வைத்து மிஷினில் கொடுத்து அரைத்து வைத்துக் கொண்டு வெறும் தண்ணீர் மட்டும் கலந்து தலைக்கு தடவி குளிக்கலாம்.
நல்லெண்ணெய் உடல் சூட்டை குறைப்பதுடன் முடியை கருப்பாக்க மிகவும் உதவும். ஆனால நல்லெண்ணெய் முகத்திற்கு போடுவது சரும நிறத்தை கருமையாக்கும்.
விளக்கெண்ணெய் கண் புருவம், இமை முடிகள் வளர உதவும். முட்டை முடிக்கு நல்ல ஷைனிங் தரும். அடிக்கடி உபயோகித்தால் முடி வறண்டு விடும். பேரிச்சை, கீரை போன்ற இரும்பு சத்து நிறைந்த உணவுகள் முடி வளர்ச்சிக்கு மிகவும் நல்லது. தினமும் உணவில் இவற்றில் ஒன்றை சேர்த்து கொள்ள வேண்டும்.
மருதாணி முடிக்கு மிகவும் நல்லது. இயற்கையான சாயத்திற்கும், குளிர்ச்சிக்கும் மிகவும் நல்லது. உப்புத் தண்ணீர், சூடான தண்ணீர் போன்றவை முடிக்கு நல்லதல்ல.
கரிசலாங்கண்ணி இலை, நெல்லிக்காய், கருவேப்பிலை மூன்றையும் அரைத்து வடைகளாகத் தட்டி நிழலில் காயவைத்து தேங்காய் எண்ணெயில் ஊறவைத்து அந்த எண்ணெயை தலையில் தடவி வந்தால் முடி கருமையாக நன்றாக இருக்கும்.
சூடத்தை (கற்பூரம்) தேங்காய் எண்ணெயில் போட்டு தடவி வந்தால் பொடுகு நீங்கும். வெந்தயத்தை தேங்காய் எண்ணெயில் போட்டு ஊறவைத்து அதனை தலைக்கு தடவினால் உடல் குளிர்ச்சிக்கு நல்லது.