மேலும் தலைப்புச்செய்திகள்
Recommendations
Recent Activity
எய்ட்ஸ் பாதித்த குழந்தைகளுக்கு உதவ விளம்பர படங்களில் நடிப்பேன்: கமல்ஹாசன் அறிவிப்பு
 சென்னை, நவ.28-

எய்ட்ஸ் பாதித்த குழந்தைகளுக்கு தகுந்த சிகிச்சை, ஊட்டச்சத்துள்ள உணவு, கல்வி போன்ற மேம்பாட்டுக்காக, மாநில எய்ட்ஸ் கட்டுப்பாடு சங்கம், `ஹலோ எப்.எம்' ரேடியோ, பி.எஸ்.ஐ. தொண்டு நிறுவனம், சென்டர் பார் அட்வகேசி அண்ட் ஆய்வு அமைப்பு ஆகியவை இணைந்து `பெற்றால்தான் பிள்ளையா' விழிப்புணர்வு பிரசாரத்தை மேற்கொண்டுள்ளது.

எய்ட்ஸ் பாதித்த குழந்தைகளின் மேம்பாட்டுப்பணிகள் குறித்து, தமிழ்நாடு எய்ட்ஸ் கட்டுப்பாடு சங்கத்தின் திட்ட இயக்குநர் பி.அமுதா ஐ.ஏ.எஸ்., நடிகர் கமல்ஹாசன், ஹலோ எப்.எம்.ரேடியோ தலைமை செயல் அதிகாரி ராஜீவ் நம்பியார் ஆகியோர் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தனர்.

அப்போது நடிகர் கமல்ஹாசன் கூறியதாவது:-
 
நான் என்னை பிரபலப்படுத்திக் கொள்வதற்காக இந்தக் குழந்தைகளுக்கு உதவும் செயலை செய்யவில்லை. எய்ட்ஸ் பாதித்த குழந்தைகளுக்கு ஆதரவும், பராமரிப்பும் அளிப்பது எனது பொறுப்பு.

எனது கடமை என்ற வகையில் என்னால் முடிந்தவற்றை செய்து வருகிறேன். மற்றவர்களிடமிருந்து பாராட்டைப்பெறுவதற்காகவோ, விளம்பரத்துக்காகவோ இதைச் செய்யவில்லை. குழந்தைகளுக்குச் செய்யும் காரியங்களில் பாராட்டை எதிர்பார்க்கக்கூடாது. மேலும் நமக்குள் எந்த பாராட்டும் வேண்டாம். இந்தக்குழந்தைகளுக்குச் செய்யவேண்டியது இன்னும் நிறைய இருக்கிறது.

ஒவ்வொரு குழந்தைக்கும் உதவும்போது, இது போன்ற நிலையில் உள்ள மற்றகுழந்தைகளுக்கும் உதவ வேண்டும் என்ற எண்ணம் எழுகிறது. அந்த வகையில் தான் என்னுடைய உதவிகள் அமைந்துள்ளன. இன்னும் செய்யவேண்டும். இதுவரையில் என்னை பொருட்களை விற்பதற்கான விளம்பர படங்களில் பார்த்திருக்க முடியாது. பொருட்களை விற்பது என் வேலை அல்ல. எனவே, விளம்பர படங்களில் நடித்து அதில் வரும் சம்பாத்தியத்தை நிராகரித்துவந்தேன்.

இப்போது விளம்பரப்படங்களில் நடிப்பது என்று முடிவு செய்துள்ளேன். இந்தக்குழந்தைகளின் மேம்பாட்டுக்காக, வளர்ச்சித்திட்டங்களை நிறைவேற்ற வேண்டும் என்பதற்காக, விளம்பரப்படங்களில் நடிப்பது என்று இந்த முடிவை எடுத்துள்ளேன். இந்தப்படத்தின் மூலம் கிடைக்கும் தொகையை முழுமையாக எய்ட்ஸ் பாதித்த குழந்தைகளின் கல்வி, சிகிச்சை, உணவு உள்ளிட்ட அனைத்து மேம்பாட்டுப்பணிக்களுக்காகவும் வழங்குவேன்.நான் வழங்கும் தொகைக்கு இரண்டு மடங்கு தொகையை, தமிழ்நாடு அறக்கட்டளை வழங்க வேண்டும் என்ற கோரிக்கையையும் வைக்கிறேன்.

இந்தக்குழந்தைகளுக்காக செய்ய வேண்டியது இன்னும் நிறைய இருக்கிறது. குழந்தைகளின் எதிர்காலம் நல்லபடியாக அமைய வேண்டும். இதுபோன்ற காரியங்களுக்கு இன்னும் உதவும் வகையில் விளம்பரப்படங்களில் நடிப்பேன். பொருட்களை உற்பத்திசெய்வோர் என்னுடைய இந்த முடிவை சரியாக பயன்படுத்திக்கொள்வார்கள் என்று எதிர்பார்க்கிறேன்.

இந்தக்குழந்தைகளின் மேம்பாட்டுக்காக நிறைய பணம் தேவை இருக்கிறது. பெற்றால்தான் பிள்ளையா விழிப்புணர்வு பிரசாரம் மூலம் கடந்த ஒரு ஆண்டில் 25 லட்சம் ரூபாய் நிதி சேர்ந்ததாக தெரிவித்தனர். தினக்கூலி தொழிலாளரில் இருந்து தனவந்தர்கள் வரையில் உதவி இருக்கிறார்கள். இந்த குழந்தைகளைப் பராமரிப்பதற்காக உணர்வுப்பூர்வமாக இன்னும் உதவ வேண்டும்.

இவ்வாறு கமல்ஹாசன் கூறினார்.

எய்ட்ஸ் பாதிப்புக்குள்ளான குழந்தைகள் பற்றியும், அவர்களுக்கு அளிக்கப்பட்டுவரும் மேம்பாட்டுப்பணிகள் பற்றியும், இதுவரையில் பத்திரிகைகளில் வெளியான செய்திகள், கட்டுரைகள் அடங்கிய கண்காட்சியை, மாநில எய்ட்ஸ் கட்டுப்பாடு சங்கத்தின் திட்ட இயக்குநர் பி.அமுதா தொடங்கிவைத்து பேசியதாவது:-

எய்ட்ஸ் பாதித்த குழந்தைகள் மேம்பாட்டுக்காக தமிழ்நாடு அரசு சார்பில் தமிழ்நாடு அறக்கட்டளையைத் தொடங்கி இதற்கு 5 கோடி ரூபாய் நிதியையும் வழங்கி உள்ளது. ஹலோ எப்.எம்.ரேடியோ `பெற்றால்தான் பிள்ளையா' விழிப்புணர்வு பிரசாரம் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் 1-ந் தேதி தொடங்கப்பட்டது. ஹலோ எப்.எம். இதற்காக எந்த கட்டணமும் இன்றி இலவசமாக மிகச்சிறப்பாக ஒலிபரப்பி வருவது பாராட்டத்தக்கது.

ஹலோ எப்.எம்., நிறுவனம், பி.எஸ்.ஐ. தொண்டு நிறுவனம் போன்ற நிறுவனங்களும், அமைப்புகளும் இந்தக்குழந்தைகள் மேம்பாட்டுக்காக உதவ வேண்டும். இதற்காக நிதி திரட்டிவருகிறோம். தமிழகத்தில் ஏறக்குறைய 7000 குழந்தைகள் எய்ட்ஸ் பாதிப்புக்கு ஆளாகி உள்ளனர். 1595 குழந்தைகள் இந்த அறக்கட்டளை மூலம் தங்களின் அத்தியாவசிய தேவைகளை பூர்த்தி செய்து வருகின்றன. எல்லா குழந்தைகளுக்கும் இந்த சேவை கிடைக்கச் செய்யவேண்டும். நடிகர் கமல்ஹாசன் இதற்காக நிறைய உதவி வருகிறார். அவருடைய சேவையை மறக்க முடியாது.

தமிழகம் முழுவதும் 897 நம்பிக்கை மையங்கள் மூலம் எச்.ஐ.வி.க்கான ஆலோசனை மற்றும் பரிசோதனை மையங்கள் அனைத்து அரசு மருத்துவமனைகளிலும், ஆரம்ப சுகாதார நிலையங்களிலும், சில தனியார் மருத்துவ மனைகளிலும் செயல்பட்டு வருகின்றன.

இளைஞர்களிடையே தடுப்புப் பணிகள் சென்றடைய கல்லூரிகளில் செஞ்சுருள் சங்கங்கள் அமைக்கப்பட்டுள்ளன. மாநிலம் தழுவிய எச்.ஐ.வி. குறித்த விழிப்புணர்வு சைக்கிள் பேரணி கடந்த 19-ந் தேதி கன்னியாகுமரி, கோவை மற்றும் ராமநாதபுரம் மாவட்டங்களில் இருந்து தொடங்கி உள்ளது. டிசம்பர் 1-ந் தேதி சென்னையை வந்தடைகிறது. எங்களின் இதுபோன்ற விழிப்புணர்வு பிரசாரம் மூலம் 2012-ம் ஆண்டில் புதிய தொற்றுகள் முற்றிலுமாக கட்டுப்படுத்தப்படும்.

இவ்வாறு திட்ட அதிகாரி பி.அமுதா ஐ.ஏ.எஸ். கூறினார். 

`ஹலோ எப்.எம்.' தலைமை செயல் அதிகாரி ராஜீவ் நம்பியார் கூறியதாவது:-
 
"பொழுதுபோக்கு அம்சங்கள் மட்டுமின்றி இதுபோன்ற சமுதாய சேவையிலும் ஹலோ எப்.எம். முன்னிலையில் உள்ளது. பொழுதுபோக்கு நிகழ்ச்சிகளுக்கு மட்டும் முக்கியத்துவம் தராமல் சமுதாய பார்வையுடனும் நம் சேவை அமைய வேண்டும் என்பது ஹலோ எப்.எம். நிறுவனத்தின் நோக்கம் ஆகும்.

ரேடியோ நிலையத்தில் பணியாற்றினாலும், எங்களுக்கும் பொழுதுபோக்கு மற்றும் தகவல்களை தவிர பிரச்சினைகள் குறித்த தெளிவும் தேவைப்படுகிறது. இந்த பெற்றால்தான் பிள்ளையா பிரசாரத்தில் எங்களின் பங்கு இருப்பதை எண்ணும்போது மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது. எங்களுடைய நோக்கம் எல்லாம் எய்ட்ஸ் பாதித்த குழந்தைகளின் எதிர்காலம் சிறப்பானதாக அமைய வேண்டும், அவர்களின் வாழ்வு மலர வேண்டும் என்பதுதான்.''

இவ்வாறு ராஜீவ் நம்பியார் கூறினார்.