திருப்பூர், நவ. 8-
திருப்பூர் மாவட்டத்தில் மொத்தம் 250 டாஸ்மாக் கடைகள் உள்ளன. தமிழகத்தில் சென்னை, கோவைக்கு அடுத்தபடியாக தொழில் நகரான திருப்பூர் மாவட்டத்தில் டாஸ்மாக் விற்பனை அதிகமாக உள் ளது. நாளொன்றுக்கு சராசரியாக ரூ.1 1/2 கோடிக்கு மதுவிற்பனை நடந்து வருகிறது. தீபாவளி பண்டிகைக்காக போனஸ் பெற்ற தொழிலாளர்கள் டாஸ்மாக் கடைகளை முற்றுகையிட்டு மது குடித்தனர்.
கடந்த 4,5-ந் தேதிகளில் டாஸ்மாக் கடைகள் அனைத்தும் மதுப் பிரியர்களின் கூட்டத்தால் நிரம்பி வழிந்தது. தீபாவளி பண்டிகைக்கு முதல் நாளான 4-ந் தேதி பிராந்தி உள்ளிட்ட மதுவகைகள் ரூ.3 கோடியே 97 லட்சத்து 79 ஆயிரத்து 70-க்கு விற்பனையாகி உள்ளது. தீபாவளியன்று மொத்தம் ரூ.4 கோடியே 16 லட்சத்து 73 ஆயிரத்து 830க்கு மதுவிற்பனை நடந்தது. 2 நாளில் மட்டும் திருப்பூர் மாவட்டத்தில் ரூ.8 கோடியே 14 லட்சத்து 52 ஆயிரத்துக்கு மதுவிற்பனை நடந்து உள்ளது.
இது கடந்த ஆண்டைக் காட்டிலும் ரூ.89 லட்சம் அதிகம் என்று திருப்பூர் டாஸ்மாக் மாவட்ட அதிகாரிகள் தெரிவித்தனர். இந்த நிலையில் திருப்பூர் மாவட்ட பகுதிகளில் உள்ள மதுக்கடைகளில் கடந்த நான்கு நாட்களாக போனஸ் என்ற பெயரில் கட்டாய வசூல் செய்யப்பட்டதாக குடிமகன்கள் புகார் தெரிவித்து உள்ளனர்.இது பற்றி திருப்பூர் பகுதியை சேர்ந்தவர்கள் கூறியதாவது:-
தீபாவளிக்கு இரண்டு நாட்கள் முன்னதாகவே டாஸ்மாக கடைகள் அனைத்திலும் போனஸ் என்ற பெயரில் பணம் கேட்டார்கள்.நாங்களும் கொடுத்தோம்.ஆனால் தொடர்ந்து நான்கு நாட்களாக போனஸ் வேண்டும் என்று டாஸ்மாக் கடை ஊழியர்கள் பணம் கேட்கிறார்கள்.ஒரு குவாட்டர் வாங்கினால் ரூ.10 ம், பீர் பாட்டிலுக்கு ரூ.15 ம் போனஸ் வேண்டும் என்று கேட்கிறார்கள்.போனஸ் கொடுக்காதவர்களிடம் மது வகைகளை விற்க மறுக்கிறார்கள்.
சரி வேறு கடைக்கு செல்லலாம் என்று பார்த்தால் அங்கும் இதே நிலைதான். போனஸ் என்று நாங்கள் விருப்பப்பட்டு ரூ.5 அல்லது ரூ.10 கொடுத்தால் வாங்க மறுத்ததோடு,சரக்கு விற்பனையும் செய்ய மறுக்கிறார்கள்.தீபாவளி பண்டிகை முடிந்த நிலையில் நேற்றும் இவ்வாறு கட்டாயப்படுத்தி பணம் கேட்டனர்.நாங்களும் வேறு வழியில்லாமல், 70 ரூபாய் மதுவுக்கு 90 ரூபாய் கொடுத்து வாங்கினோம்.இதனால் ரெகுலராக மதுக்குடிப்பவர்கள் அவதிக்குள்ளானோம்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
டாஸ்மாக் ஊழியர்களின் கட்டாய கெடுபிடி மூலம் ஒவ்வொரு டாஸ்மாக் கடைகளிலும் லட்சக்கணக்கில் பணம் வசூலிக்கப்பட்டதாக தெரியவந்துள்ளது.
இது பற்றி திருப்பூர் மாவட்ட டாஸ்மாக் இணை மேலாளர் மனோகரன் கூறும் போது:-
அரசு டாஸ்மாக் கடை ஊழியர்களுக்கு அவர்களது சம்பளத்தில் 20 சதவீதம் தீபாவளி போனஸ் வழங்கி உள்ளது.இந்த நிலையில் வாடிக்கையாளர்களிடம் பணம் வசூலிப்பது தொடர்பாக ஆய்வு செய்து உறுதிப்படுத்தப்பட்டால் தக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.