ஆலிஸ் இன் ஒண்டர் லான்ட் என்ற ஹாலிவுட் படம் தமிழகமெங்கும் ஆங்கிலத்திலும் தமிழில் ராஜகுமாரி என்ற பெயரிலும் ரிலீசாகியுள்ளது.
அன்பும் எளிமையுமான ஆலிசுக்கு திருமண ஏற்பாடு நடக்கிறது. அப்போது திடீரென மரப் பொந்து ஒன்றுக்குள் அவள் தவறி விழ அதிசய உலகத்துக்குள் நுழைகிறாள். அங்கு அராஜக ஆட்சி நடத்தும் சிவப்பு ராணியை வென்று வெள்ளை ராணி ஆட்சியை ஏற்படுத்த வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்படுகிறது. இதை ஏற்று வெள்ளை ராணி படைகளுக்கு தலைமை தாங்குகிறாள். துணிச்சலாக போர் செய்து அராஜக ஆட்சியை வீழ்த்தி சிவப்பு ராணியை நாடு கடத்துகிறாள்.
ஆலிஸ் மரப் பொந்துக்குள் விழுந்து அதிசய உலகை நோக்கி பயணப் படுவது மிரட்சி. ஆலீசின் சிறு வயது நண்பர்களாக வரும் மேட் ஹெட்டர், வெள்ளை முயல், கம்பளிப்பூச்சி, பூனை உருளைக்கிழங்கு மனிதர்கள் கலகலப்பூட்டுகின்றனர்.
அவர்களுடன் ஆலிஸ் இணைந்து செய்யும் சாகசங்கள் சீட் நுனிக்கு இழுக்கின்றன. சிவப்பு ராணி, வெள்ளை ராணியின் படைகளுக்குள் நடக்கும் யுத்த காட்சிகள் பிரமாண்டம். 3டி முறையில் காட்சிகள் கைக்கு எட்டுவது போல் உள்ன. டிம்பர்டன் டைரக்டு செய்துள்ளார்.