வக்கீல் தொழில் பார்ப்பவர் தமிழரசன். பாதிக்கப்பட்ட மக்களுக்காக வாதாடி துணை நிற்கிறார். ஏழைகளுக்கு வட்டிக்கு கடன் கொடுத்து கசக்கி பிழிகிறது நிழல்கள் ரவி கும்பல். சட்டத்துக்கு புறம்பாக மணல் கடத்தலிலும் ஈடுபடுகிறார்கள். அவர் களை தட்டி கேட்கிறார் தமிழரசன்.
இதனால் ஆத்திரமாகும் நிழல்கள் ரவி ரவுடிகளை ஏவி தமிழரசன் குடும்பத்தை அழிக்கிறார். கொலைப்பழியை தமிழரசன் மீது சுமத்தி ஜெயிலுக்கும் அனுப்புகிறார்.
ஒரு கட்டத்தில் நிழல்கள் ரவியால் பாதிக்கப்பட்ட போலீஸ் அதிகாரி தமிழரசனுக்கு உதவுகிறார். கோர்ட்டுக்கு சென்று வரும் வழியில் தப்பிக்க வைக்கிறார். நிழல்கள் ரவியையும், அவரது கூட்டாளிகளையும் தமிழரசன் பழி வாங்குவது கிளைமாக்ஸ்.
தமிழரசன் நேர்மையான வக்கீல் கேரக்டரில் பளிச்சிடுகிறார். ஜெயிலில் இருந்து போலீஸ் அதிகாரியே அவரை அழைத்து வருவதும், எதிரியை தீர்த்துக்கட்டி விட்டு வா என்று அனுப்பி வைப்பதுமாக ஆரம்பமே எதிர்பார்ப்பை எகிற வைக்கிறது.
கோர்ட்டில் தன் கதையை சொல்வது போல் பிளாஷ்பேக் விரிகிறது.
தமிழரசனுக்கும், வில்லன் நிழல்கள் ரவிக்கும் மோதல் ஏற்பட்டதும் விறுவிறுப்பு தொற்றிக் கொள்கிறது. தாய், தந்தை, தங்கை என இடைச்செருகலாக வரும் குடும்ப செண்டிமென்ட் காட்சிகள் ஈர்க்கவில்லை.
தமிழரசன் குடும்பத்தை கொடூரமாக அழிப்பது பயங்கரம். கிளைமாக்ஸ் சண்டை மிரட்டல். சினியா காதலியாக வந்து பரிதாபமாக உயிரை விடுகிறார். ரகசியா குத்தாட்டம் ஆடுகிறார். ஓ.ஏ.கே.சுந்தர், சண்முகசுந்தரம், வடிவுக்கரசி, கவுதமி போன்றோரும் உள்ளனர்.
வக்கீல், ரவுடி மோதலை விறுவிறுப்பாக காட்சி படுத்தியுள்ளார் இயக்குனர் ஆர்.செந்தமிழரசு. கதை யோட்டம், வசனத்தை இன்னும் கூர்தீட்டி இருக்கலாம்.