Recommendations
Recent Activity
Stories Tag Cloud
Search Tag Cloud
No Data Available..
மூக்குத்தி மின்னல்
பிரவளிகா என்ற பெயருக்கு நீர்வீழ்ச்சி என்று அர்த்தமாம். இவருடைய சிரிப்பும், அலைஅலையான கூந்தலும் அந்த அர்த்தம் சரிதான் என்கிறது.
 
பரதம், மேற்கத்திய நடனம், விளையாட்டு, மாடலிங், தொழில் சார்ந்த சிந்தனை, சமூக சேவை போன்றவைகளில் இவர் ஜொலிக்கிறார். பெங்களூரில் பிறந்து, வளர்ந்த இவரது தாய்மொழி தெலுங்கு. பெற்றோர்: சம்பத் குமார்- மல்லேஸ்வரி.
 
உங்களைப் போன்ற இளம்பெண்களிடம் இருக்கும் ஆற்றல் கண்டறியப்பட்டு, எங்கே, எப்படி அது வளப்படுத்தப்படுகிறது?
 
"நான் பத்தாம் வகுப்பு வரை பெங்களூரிலே படித்தேன். அடுத்து பள்ளி இறுதிக் கல்வியை சென்னையில் உள்ள ஒரு ரெசிடென்சி பள்ளியில் பயின்றேன். என் திறமையை மெருகேற்றிக்கொள்ள அது தான் சரியான களமாக அமைந்தது. அப்படிப்பட்ட பள்ளிகளில் சேர்ந்தால் வேறு எதைப் பற்றியும் சிந்திக்க முடியாது. படிக்க வேண்டும். விளையாட வேண்டும். தன் திறமைகளை மெருகேற்றிக்கொண்டிருக்க வேண்டும். அதைத் தவிர்த்து வேறு எதையும் அங்கே செய்ய முடிவதில்லை. முதலில் சிரமமாக இருந்தாலும் விரைவிலே அந்த வித்தியாசமான வாழ்க்கை முறையை நான் ரசிக்கத் தொடங்கினேன்.
 
அதிகாலை ஐந்தரை மணிக்கு விழித்து, ஒரு கப் பால் குடித்துவிட்டு உடற்பயிற்சி செய்ய வேண்டும். பின்பு காலை உணவு. அடுத்து படிப்பு. ஒன்பதரை மணிக்கு வகுப்பு. இரவு பத்து மணிக்கு தூங்கிவிட வேண்டும். இரண்டு வருடங்கள் இயந்திரம் போல் செயல்பட்டாலும், நல்ல உணவு கிடைத்தது. நீச்சல் போன்ற பயிற்சிகள் கிடைத்தன. விளையாட்டு மற்றும் கலைப் போட்டிகளில் கலந்துகொண்டு நிறைய பரிசுகள் பெற்றேன். உயரம் தாண்டுதலிலும் ஜொலித்தேன்''
 
ஆனாலும் சுதந்திரப் பிரியர்களுக்கு அது ஒரு அடைபட்ட கூண்டு போல் இருந்திருக்குமே?
 
"சுதந்திரத்தைவிட அந்த இரண்டு ஆண்டுகளில் கிடைத்த விஷயங்கள் அதிகம். செல்போன் வைத்திருக்கவே கூடாது. பண்டிகைக் காலங்களில் வீட்டிற்கு செல்ல அனுமதிப்பார்கள். உள்ளே வரும்போது உடல் முழுவதும் சோதனையிட்ட பின்பே உள்ளே அனுமதிப்பார்கள். தப்பு செய்தால் சஸ்பெண்ட் செய்து, ஹாஸ்டலிலே வைத்துவிடுவார்கள். தண்டனைக்காலம் முடிந்த பின்புதான் வகுப்புக்குள் அனுமதிப்பார்கள். ஆனாலும் எனக்குள் இருந்த திறமைகள் அங்குதான் வளர்க்கப்பட்டன''
 

பள்ளிக் காலத்திலே அங்குள்ள மாணவிகளுக்கு மேற்கத்திய நடனம் கற்றுக் கொடுக்கும் அளவுக்கு திறமையை வளர்த்துக்கொண்ட பிரவளிகா, அதிக மதிப்பெண் பெற்று தேறி சென்னை எம்.ஓ.பி.வைஷ்ணவா கல்லூரியில் பி.காம். படிக்க சேர்ந்திருக்கிறார்.
"அப்பா பெங்களூரில் தொழில் செய்து வருகிறார். அந்த தொழில்களை நிர்வகிக்க வேண்டும் என்ற ஆசை எனக்கு உண்டு. அதனால்தான் பி.காம். படிக்கச் சேர்ந்தேன். நாம் ஈடுபட்ட தொழிலில் சாதிக்க வேண்டும் என்றால் தோழமை உணர்வோடு சிரிக்கத் தெரிய வேண்டும். மற்றவர்களை உற்சாகப்படுத்தி வேலை வாங்கத் தெரியவேண்டும். அதை எல்லாம் நான் கல்லூரியில் கற்றுக்கொண்டேன்''
 
கல்லூரியில் கிடைத்த தொழில் அனுபவம் எப்படி இருந்தது?
"கல்லூரியில் சில மாணவிகள் சேர்ந்து துணி, வளையல், காதணி, கைவினைப் பொருட்களை வாங்கி மாணவிகளுக்கே விற்போம். அதன் மூலம் பணம் மட்டுமல்ல நிறைய அனுபவங்களும் கிடைத்தன. முதலில் முதலீட்டிற்கு பணம் சேர்ப்பது, சரியான கடையை தேர்ந்தெடுத்து பேரம் பேசி தரமான பொருட்களை வாங்குவது, அவைகளை நல்ல முறையில் விற்பது போன்ற வியாபார நுணுக்கங்களை நான் அப்போதே கற்றுவிட்டேன்''
அதிக சிக்கனவாதிகள் ஆண்களா, பெண்களா?
"பெண்கள்தான்! வீட்டில் எவ்வளவு பணம் கேட்டாலும் காரணம் கேட்காமல் எனக்கு தருவார்கள். அதை கண்டபடி செலவிடவும் நிறைய வழிகள் உள்ளன. ஆனால் நான் குறைந்த அளவே பணம் வாங்குவேன். அதையும் நல்ல வழியில் மட்டுமே சிக்கனமாக செலவிடுவேன். என்னை போலத்தான் இன்றைய இளம்பெண்களில் பலரும் சிக்கனத் திலகங்களாக இருக்கிறார்கள்.''
கல்லூரி படிப்பை தொடரும்போதே பிரவளிகா பரத நாட்டியத்தையும் கற்றுத் தேர்ந்து அரங்கேற்றம் செய்துவிட்டார். ஆனாலும் அதில் தொடர்ந்து பயிற்சி பெறுவதற்காக விடுதி ஒன்றில் தங்கியிருந்து தினமும் பரத நாட்டியத்தில் ஆழ்ந்து போகிறார். இவருடைய குரு: பார்வதி பாலசுப்பிரமணியன்.
பள்ளி, கல்லூரியில் ஒவ்வொரு அனுபவத்தை பெற்றிருக்கும் நீங்கள் தற்போது வசிக்கும் ஹாஸ்டலில் என்ன மாதிரியான அனுபவத்தை பெறுகிறீர்கள்?
"நாங்கள் மூன்று பெண்கள் ஒரே அறையில் தங்கியிருக்கிறோம். படிக்கிறவர்கள், வேலை பார்க்கிறவர்கள் என்று பலதரப்பட்டவர்கள் ஒன்றாக தங்கியிருக்கும்போது அவர்கள் மூலம் கிடைக்கும் அனுபவங்கள் ரொம்பவும் வித்தியாசமாகவும், வாழ்க்கைக்கு அத்தியாவசியமான தாகவும் இருக்கின்றன. பெண்கள் வாழ்க்கையை நன்றாக புரிந்துகொண்டால் மட்டுமே சாதிக்க முடியும்''
பல்வேறு அனுபவங்கள் கிடைத்திருக்கிறதே. காதல் அனுபவம்?
"அந்த அனுபவம் கிடைக்க வேண்டும் என்ற ஆசை எனக்கில்லை''
அடர்த்தியாக கூந்தல் வளர்த்திருக்கிறீர்களே, எப்படி பராமரிக்கிறீர்கள்?
"காற்றில் நிறைய மாசு இருப்பதால் கூந்தலில் நிறைய அழுக்கு சேர்ந்து விடுகிறது. அதனால் தினமும் கூந்தலை கழுவி சுத்தம் செய்வேன். நாட்டியப் பயிற்சி உடலுக்கும், மனதுக்கும் புத்துணர்ச்சி தருவதாலும், சத்துணவுகளை மட்டுமே உண்பதாலும் என் கூந்தல் அடர்த்தியாக வளர்ந்துகொண்டிருக்கிறது''

மூக்குத்தி மீது உங்களுக்கு ஆசை வர என்ன காரணம்?
 
"என் அம்மா மூக்குத்தி அணிந்திருக்கிறார். அந்த அழகு எனக்கு பிடித்திருப்பதால், 15 வயதிலே நான் மூக்குத்தி போட்டுக்கொண்டேன். இப்போது எனக்கான பேஷனாக இது மாறிவிட்டது. என்னைப் பார்த்து பல இளம்பெண்கள் மூக்குத்தி அணிந்திருக்கிறார்கள். பேஷனுக் காக ஒரு கால் விரலில் மெட்டி அணிந்திருந்தேன். திருமணத்திற்கு முன்பு அணியக்கூடாது என்று என் நடனக்குரு சொன்னதால் கழற்றிவிட்டேன்''
மாடலிங் பற்றி?
"முன்பு அதில் அளவு கடந்த ஆர்வம் இருந்தது. இப்போது நடனத்தில் மட்டுமே முழு கவனம் செலுத்துகிறேன். பெங்களூரில் நடனப் பள்ளி தொடங்கவும் திட்டமிட்டிருக்கிறேன்''
பிரவளிகா தமிழ், ஆங்கிலம், கன்னடம், இந்தி, தெலுங்கு ஆகிய ஐந்து மொழிகளில் புலமை பெற்றிருக்கிறார். கார் ஓட்டுவதிலும் கை தேர்ந்தவராக இருக்கிறார்.