கலைஞர் கருணாநிதி கதை, வசனத்தில் பெண்மையின் பெருமை பேசும் படம்...
வன இலாகா அதிகாரி உதய்கிரண் புது ஊருக்கு மாற்றலாகி வருகிறார். அவர் அலுவலகத்தில் வேலை பார்க்கும் ஏழை பெண் மீரா ஜாஸ்மின். உயர்படிப்பு படிக்க விரும்புகிறார். அவருக்கு உதய்கிரண் உதவுகிறார். இருவருக்கும் காதல் மலர்கிறது.
அதே ஊரில் காட்டு மரங்களை வெட்டி கடத்துகிறார் ராதாரவி. போலீசும் அவருக்கு உதவுகிறது. மரம் வெட்டுவதை தடுக்கிறார் உதய்கிரண். இருவருக்கும் மோதல் ஏற்படுகிறது. உதய்கிரணின் நண்பன் ரிச்சர்ட் பெண் விடுதலை பற்றி மேடைகளில் பிரசங்கம் செய்து கோடீஸ்வர பெண் சுதர்சனாசென்னை ஏமாற்றி திருமணம் செய்கிறார். பிறகு வரதட்சணை கேட்டு சித்ரவதை செய்கிறார். இதை தட்டிக்கேட்கும் உதய்கிரண் மீதும் எரிச்சல்படுகிறார்.
ஒரு கட்டத்தில் சுதர்சனா சென் மர்மமாக சாகிறார். சந்தர்ப்ப சூழ்நிலைகள் உதய்கிரணை கொலையாளியாக்குகிறது. கைதாகிறார். அப்போது மீராஜாஸ்மின் ஐ.பி.எஸ். அதிகாரியாக பொறுப்பு ஏற்கிறார்.
உதய்கிரணை காப்பாற்ற அவர் தாய் ரோகிணி நீதிபதி பதவியை ராஜினாமா செய்து “வக்கீல் கோட்டு” அணிகிறார். கொலை வழக்கை விசாரிக்கும் பொறுப்பை மீரா ஜாஸ்மின் ஏற்கிறார். உண்மையான கொலையாளியை கண்டுபிடிப்பது விறுவிறுப்பான கிளைமாக்ஸ்...
கலைஞரின் கைவண்ணத்தில் படம் முழுக்க இலக்கிய மணம். அதை நவீன யுக்தியில் கமர்ஷியலாக தொகுத்து காட்சிகளோடு ஒன்ற செய்கிறார் இயக்குனர் பாலி ஸ்ரீரங்கம்.
நான் சட்டப்படி நடக்கும் பொதுத்துறை, அரசிடம் சம்பளம் வாங்கி விசுவாசத்தை வேறு ஒருவருக்கு காட்டுவதா, குடிகாரன் கொள்கை இல்லாதவன், கடல் ரொம்ப பெரிது, என் காதல் அதை விட பெரிது, மாடசாமியின் காலை ஒடித்தால் மடசாமி என்பது போன்ற பல முத்தாய்ப்பான வசனங்கள் ஈர்க்கின்றன.
சாமி நகைகளை திருடும் அர்ச்சகரை விமர்சிக்கும் பாங்கும் கோர்ட்டில் கொலை குற்றம் சாட்டப்பட்டவருக்கு எதிராக வாதாடும் வக்கீல் அவர் பக்கம் நியாயம் இருப்பதை உணர்ந்ததும் தனது வாதங்களை வாபஸ் பெற்று அவர் விடுதலைக்கு உதவுவதும் கணவன்மேல் ஆவேசப்படும் பெண்ணிடம் தமிழ் பண் பாட்டை மீறுதல் கூடாது என்று உபதேசிப்பதும் சிந்தனையை தூண்டும் அழுத்தமான அம்சங்கள்.
காட்டிலாகா அதிகாரியாக வரும் உதய்கிரண் கச்சிதம். மரக்கடத்தல் கும்பலிடம் காட்டும் ஆவேசம். மீரா ஜாஸ்மினுடனான காதலில் வெளிப்படுத்தும் மென்மை, தாயை இழந்து தவிக்கும் கதறல் மோசக்கார கும்பலை அடித்து நொறுக்கும் ஆவேசம். அத்தனையிலும் அசத்துகிறார்.
தமிழ் அறிஞன் போர்வையில் வரும் ரிச்சர்ட் கொடூர வில்லன். மேடைகளில் நேர்மையாக பேசும் அவரது இன்னொரு பக்கம் எதிர்பாராத அதிர்ச்சி.
போலீஸ் ஐ.பி.எஸ். அதிகாரியாகி உதய்கிரணை காப்பாற்ற போராடும் மீரா ஜாஸ்மின் பெண்களின் தன்னம்பிக்கை பாத்திரம். வீர மங்கை வேலு நாச்சியாராக நாடகத்தில் வீரம் காட்டுகிறார்.
எதிரெதிர் வக்கீல்களான ரோகிணி, ஜே.கே. ரித்தீஷின் கோர்ட் வாதங்கள் நிமிர வைக்கின்றன. ரம்பா சிறிது நேரம் வந்தாலும் திருப்பு முனை பாத்திரம். விவேக் காமெடி கலகலப்பு. ராதாரவி, தலைவாசல் விஜய், ஓ.ஏ.கே. சுந்தர் வில்லன்கள்.
லாரன்ஸ், லட்சுமிராய் ஒரு பாடலுக்கு அபாரமாக ஆடி விட்டு போகின்றனர். வாகை சந்திரசேகர், மாணிக்க விநாயகம், நிழல்கள் ரவி, மதன்பாப் ஆகியோரும் உள்ளனர்.
தேவா இசையில் பாடல்கள் இனிமை. குறிப்பாக கலைஞர் எழுதிய, “ஆகா வீணையில் எழுவது வேணுகானமா” பாடல் காதில்தேன் பெய்ய வைக்கிறது. விஜய்ராகவ் ஒளிப்பதிவில் வனத்தின் பசுமை. ஆறுமுகநேரி எஸ்.பி. முருகேசன் தயாரித்துள்ளார்.