கற்றது களவு
ராமேஸ்வரம் கோவிலில் கிருஷ்ணா விஜயலட்சுமி ஜோடிக்கு திருட்டுத்தனமாக திருமணம் நடக்கிறது, அவர்களை டெல்லியில் இருந்து வரும் உளவுத்துறை அதிகாரிகள் குழு சுற்றி வளைக்கிறது. அங்கிருந்து தப்பி ஓடுகின்றனர். இருவரையும் உள்ளூர் போலீஸ் அதிகாரி சம்பத் மீட்டு ரகசிய இடத்தில் அடைத்து வைக்கிறார்.
 
டெல்லி அதிகாரிகள் துரத்த காரணம் என்ன என்று சம்பத் விசாரணை நடத்த பிளாஸ்பேக்...
 
சொந்தமாக பாங்கி நடத்தும் ஆவலில் புதிய மாணவர் திட்டமொன்றை உருவாக்குகிறார் கிருஷ்ணா. அதை வங்கி அதிபர் ஒருவர் ஏமாற்றி பறிக்கிறார். தன் னுடைய திட்டம் என பிரகடனப்படுத்தி அரசு மரியாதைகளை பெறுகிறார். அவரிடம் அழகியை காட்டி ஆபாச படம் எடுத்து மிரட்டி பணம் பறித்து பழி வாங்குகிறார் கிருஷ்ணா பிறகு அது தொடர்கிறது.
 
வீட்டை விட்டு ஓடி வந்த விஜயலட்சுமியுடன் சேர்ந்து தொழில் அதிபர்களை ஏமாற்றி பணம் பிடுங்குகிறார். அப்போது ஆட்சியை கவிழ்க்க திட்டமிடும் ஒரு அரசியல்வாதியின் சதி திட்டங்கள் வீடியோ ஆதாரமாக கிடைக்க அதை வைத்தும் பணம் பறிக்கின்றனர். அவர் இருவரையும் கொல்ல மத்திய போலீசை ஏவுகிறார்.
 
இருவரும் தப்பினார்களா? என்பது கிளை மாக்ஸ்....
 
கோவிலில் விஜயலட்சுமிக்கு தாலி கட்டியதும் எதிர்பாராமல் தாக்க வரும் கும்பலிடம் இருந்து சண்டையிட்டபடியே தப்பி ஓடும் கிருஷ்ணாவின் அறிமுகமே அமர்க்களம்.
 
மாணவர்களின் ஒரு ரூபாய் சேமிப்பு திட்டத்தை வங்கி அதிகாரி சந்தானபாரதி திருடிய பின் அவரை பழி வாங்க வகுக்கும் திட்டங்கள் விறுவிறுப்பு...
 
கண்ணாடி கற்களை விலை உயர்ந்த கற்கள் என ஏமாற்றி மாறு வேடத்தில் நகைக்கடைகாரரிடம் மோசடி செய்வது... பிரபல சினிமா ஸ்டூடியோவை தன்னுடையது என சொல்லி வெளி நாட்டுக்காரரிடம் பணம் பிடுங்குவது கலகலப்பான காமெடி.
 
விஜயலட்சுமியிடம் மெருகு. காதல், நடனம், சோகத்தில் கூடுதல் மார்க்.
 
வில்லனாக பார்த்த சம்பத் நேர்மையான போலீஸ் அதிகாரியாக வித்தியாச பரிமாணம் காட்டுகிறார். காதல் ஜோடியை காப்பாற்ற அவர் எடுக்கும் முயற்சிகள் அழுத்தமானவை.
 
தயாரிப்பாளராக வரும் கஞ்சா கருப்பு செய்யாத தப்புக்காக போலீசிடம் மாட்டி வாங்கி கட்டுவது சிரிப்பு. முமைத்கான் ஒரு பாட்டுக்கு கவர்ச்சி ஆட்டம் போடுகிறார். சின்னி ஜெயந்த், நெல்லை சிவா, சாமிநாதன் ஆகியோர் கலகலப்பூட்டுகின்றனர். மிரட்டல் வில்லத்தனத்தில் கல்யாண். கலகலப்பாகவும், விறுவிறுப்பாகவும் காட்சிகளை நகர்த்துகிறார், இயக்குனர் பாலாஜி தேவி பிரசாத், வில்லன்கள் துரத்தும் கிளைமாக்ஸ் ஆக்ஷனில் நிமிர வைக்கிறார். கதையில் இன்னும் அழுத்தம் சேர்த்து இருக்கலாம்.
 
பால்ஜே இசையில் பாடல்கள் இனிமை. நீரவ்ஷாவின் ஒளிப்பதிவில் பிரமாண்டம்.
மதிப்பீடு செய்க