Recommendations
Recent Activity
Stories Tag Cloud
Search Tag Cloud
No Data Available..
ஹேமமாலினி மகளின் புதிய வியாபாரம்
ராக்கெட்டை விட வேகமாக மேலே ஏறிக்கொண்டே இருக்கிறது மும்பை பகுதியில் வீடு மற்றும் கடைகளின் வாடகை! இதற்காகவே தனது வீட்டிலேயே பலதரப்பட்ட பொருட்கள் கிடைக்கும் வகையில் ஒரு ஸ்டோரை திறந்துள்ளார், ஹேமமாலினியின் இளைய மகள் அஹானா தியோல்.
 
சினிமா மீது ஆர்வம் இல்லாத இவர், ஆடை வடிவமைப்பு, நடனம் மற்றும் பிற கலைகள் மீது விருப்பம் கொண்டுள்ளார். தற்போது மும்பையில் ஜுகு பகுதியில் இருக்கும் தமது வீட்டின் ஒரு பகுதியிலேயே புதியதாக ஸ்டோர் ஒன்றை திறந்துள்ளார். இங்கு இளம் தலைமுறையினருக்கு தேவையான ஆடை, ஆபரணம் மற்றும் பிற பொருட்கள் கிடைக்கின்றன என்பதால் இங்கு இளம்பெண்களின் கூட்டம் அலைமோதுகிறது.
 
ஒரு கடையின் உரிமையாளர் என்ற சந்தோஷத்தில் இருக்கும் அஹானா, இது குறித்து கூறும்போது, ``என்னுடைய தோழிகளுடன் இணைந்து, ஒரு ஷோரூம் திறக்க வேண்டும் என்று நீண்ட நாட்களாக ஆலோசித்துக் கொண்டிருந்தேன். அதற்கான இடத்தை தேடிக் கொண்டிருக்கும்போது வாடகையைக் கேட்டால், அளவுக்கு மீறிய தொகையை கூறினார்கள். இதனால் அந்த திட்டம் தள்ளிப் போய்க் கொண்டே இருந்தது. அதனால் எங்கள் வீட்டின் ஒரு பகுதியில், என்னை போன்ற இளம் தலைமுறைக்குத் தேவையான பொருட்கள் கிடைக்கும் வகையில் ஒரு ஸ்டோரை திறந்துள்ளேன். இதனால் மாதாமாதம் பெரும் தலைவலியைக் கொடுக்கும் வாடகைப் பணம் மிச்சம் என்பதை நினைத்தால் மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது.
 
நான் வடிவமைத்த உடைகள், இளம் தலைமுறையினர் வடிவமைத்த ஓவியங்கள் மற்றும் வித்தியாசமான புகைப்படங்கள் ஆகியவை கிடைக்கும்.
 
அதுமட்டுமின்றி, வித்தியாசமான உணவு வகைகளும் சமைத்து சூடாக வழங்கப்படுகின்றன'' என்கிறார்.
 
அஹானா ஒரு தனியார் நிறுவனத்துடன் இணைந்து சமூக சேவையும் செய்து வருகிறார். மேலும் ஒவ்வொரு பண்டிகையின் போதும், அந்த விழாவுக்கான அனைத்து பொருட்களையும் தனது நிறுவனத்தில் விற்பனை செய்கிறார்.
 
குடும்பத்தாரின் ஆதரவு குறித்து கூறுகையில், ``அம்மாவும், அக்காவும் எனக்கு மிகவும் உதவியாக இருக்கிறார்கள். நான் வடிவமைத்த ஜாக்கெட்டைத் தான் அம்மா எப்போதும் அணிவார். அக்கா ஈஷாவும் பல படங்களில் என்னுடைய வடிவமைப்பு ஆடைகளை அணிந்து நடித்துள்ளார். உற்றார், உறவினர்களின் ஆலோசனை மற்றும் ஆதரவோடு இந்த ஸ்டோர் வெற்றிகரமாக போய்க் கொண்டிருக்கிறது'' என்று கூறும் அஹானாவுக்கு, அம்மா ஹேமமாலினியைப் போல் நடனத்தின் மீது தீராத ஆர்வம். அதனால் அனைத்து வகையான நடனங்களையும் கற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.