போலீஸ் அதிகாரி கார்த்திக் தம்பி அருண் விஜய். தான் படித்த கல்லூரியில் நண்பர்களுடன் கேன்டீன் நடத்துகிறார்.
உள்ளூர் தாதா சந்திரசேகர். ரியல் எஸ்டேட் தொழிலில் அராஜகம் செய்து எதிராளிகளை தீர்த்து கட்டுகிறார். அவருக்கும் கார்த்திக்குக்கும் மோதல் வருகிறது. சந்திர சேகரை ஜெயிலுக்கு தள்ள காய் நகர்த்துகிறார். ஆனால் எதிரிகள் கார்த்திக்கை குத்திக் கொல்கின்றனர்.
கார்த்திக் உடலை யாருக்கும் தெரியாமல் எரிக்கும் அருண் விஜய், அவர் உயிரோடு இருப்பது போல் வெளி உலகை நம்ப வைத்து எதிரிகளை ஒவ்வொருத்தராய் தீர்த்து கட்டுகிறார். புதிய போலீஸ் அதிகாரியாக பதவி ஏற்கும் பிரபு விசாரணையை முடுக்கி விடுகிறார். சந்திரசேகரை அருண் விஜய் அழித்தாரா? என்பது ஆக்ஷன் கிளைமாக்ஸ்...
பாசக்கார தம்பியாகவும் பழிவாங்க வெறியுடன் திரிபவராகவும் வெளுத்து கட்டுகிறார் அருண் விஜய். ஆக்ஷனில் அவருக்கு மைல்கல் படம். சந்தானத்துக்கு ஓட்டல் வைத்து கொடுத்தும், தன்ஷிகாவிடம் போலீஸ் அதிகாரி தம்பி என்பதை மறைத்து காதல் கலாட்டாக்கள் செய்வதிலும் கலகலப்பூட்டுகிறார்.
குத்தி, தீக்குள் வீசப்படும் அண்ணனை அலறி துடித்து வெளியே தூக்கி வரும்போதும் அவர் இறந்ததும் உடல் மேல் விழுந்து கதறும்போதும் பாசத்தின் உச்சம் தொடுகிறார். அதன் பிறகு அதிரடி அவதாரம். கொலைகாரர்களை நொறுக்கி எடுப்பதில் ஆவேசம். கிளைமாக்ஸ் சண்டையில் பொறி.
நேர்மையான போலீஸ் அதிகாரி, அன்பான அண்ணனாக கார்த்திக் அழுத்தம் பதிக்கிறார். அடிதடியிலும் வேகம். பிரபு சிறிது நேரம் வந்தாலும் ஒளிர்கிறார். சந்திரசேகர் வில்லனத்தில் மிரட்டுகிறார். அருண் விஜய் நண்பனாக வரும் ஹேமந்த் சைக்கோ வில்லத்தனம் மிரட்டல். கார்த்திக்கை கொல்வதும் அருண் விஜய் காதலியை கடத்துவதும் எதிர்பாராத உதறல். தன்ஷிகா கவர்ச்சியில் தாராளம்.
விஜயகுமார், அனுஹாசன் கேரக்டர்களும் கச்சிதம். சந்தானம், கஞ்சா கருப்பு, ஷகிலா கூட்டணியின் காமெடி வயிற்றை புண்ணாக்குகிறது.
குடும்ப சென்டிமெண்ட், ஆக்ஷன் கதையை விறுவிறுப்பாக நகர்த்துகிறார் இயக்குனர் ஏ. வெங்கடேஷ். கிளைமாக்ஸ் சண்டையில் சீட் நுனிக்கு இழுக்க வைக்கிறார். உயர் போலீஸ் அதிகாரி பிரபு கொலை செய்ய தூண்டுவதிலும் லாஜிக் இல்லை. வெங்கடேசின் ஒளிப்பதிவும், மணிசர்மா பின்னணி இசையும் கை கொடுக்கின்றன.