குற்றப்பிரிவு
நேர்மையான போலீஸ் சூப்பிரண்டு ஸ்ரீகாந்த். அவருக்கு கீழ் அதிகாரி பிருத்விராஜ் இருவரும் நட்பாக பழகுகிறார்கள். சரணடைந்த தீவிரவாதி ஒருவனை பகடைகாயாய் வைத்து பெருந்தொழில் அதிபர்களை மிரட்டி கோடி கோடியாய் சம்பாதிக்கிறார் பிருத்விராஜ். எதிர்க்கும் போலீஸ் அதிகாரிகளையும் தீர்த்து கட்டுகிறார்.
 
தீவிரவாதிகளின் நடவடிக்கைகளை வேவு பார்க்கும் ஸ்ரீகாந்த்துக்கு அவர்களுக்கு பக்கபலமாக பிருத்விராஜ் இருப்பது தெரிந்து அதிர்கிறார். அவரை பிடிக்க வலை விரிக்கிறார். இருவருக்கும் மோதல் ஏற்படுகிறது.
 
பிருத்விராஜ் எப்படி வீழ்த்தப்படுகிறார் என்பது கிளைமாக்ஸ்...
 
போலீஸ்துறைக்குள் நல்ல அதிகாரிக்கும், கெட்ட அதிகாரிக்கும் நடக்கும் சண்டையை விறுவிறுவென காட்சிபடுத்தியுள்ளார் இயக்குனர் மன்மோகன். போலீஸ் சூப்பிரண்டாக கட்டுமஸ்தான உடற்கட்டில் மிடுக்கு காட்டுகிறார் ஸ்ரீகாந்த். போலீசாருக்கு காவல் துறையின் புனிதம் பற்றி அறிவுரை சொல்வதிலும் வில்லன்களை நொறுக்குவதிலும் கம்பீரமான பளிச்...
 
தீவிரவாதிகளை வைத்து பணம் சம்பாதிக்கும் போலீசாக வரும் பிருத்விராஜிடம் கொடூர வில்லத்தனம். தன்னை மோப்பம் பிடித்த டி.ஐ.ஜியை ஏமாற்றி அழைத்து போய் தீவிரவாதியுடன் சேர்ந்து சுட்டுக்கொல்வது திக்...
 
கல்லூரியில் படித்தபோது சண்டைபோட்டு பிரிந்த கமாலினி முகர்ஜியை ஆசிரியையாக பார்த்து பழைய காதலை ஸ்ரீகாந்த் புதுப்பிக்க முயல்வதில் ஜீவன்..
 
ஸ்ரீகாந்த் பெற்றோர் பொய்பழியால் உயிரை மாய்க்கும் பிளாஸ்பேக் அழுத்தம்...
 
ஸ்ரீகாந்த் மீதான சந்தேகம் விலகி அவருடன் சேரும் கமாலினி முகர்ஜி மர்ம ஆசாமியால் சுடப்படுவது பரிதாபம்...
 
அரசியல்வாதி சதியால் ஸ்ரீகாந்த் போலீஸ் அகாடமிக்கு மாற்றப்பட்டதும், கதை நகரத்துக்குள் நகர்கிறது. பிருத்விராஜூம் அங்கு மாற்றலாகி வர மீண்டும் சூடுபிடிக்கிறது. குழந்தைகளை கடத்தும் தீவிரவாத கும்பலை ஸ்ரீகாந்த் மீட்பது திரில்...
 
தீவிரவாத தலைவனை கொன்று அந்த பிணத்தை வைத்தே பிருத்விராஜை போலீஸ் பிடிக்குள் சிக்க வைக்கும் கிளைமாக்ஸ் சீன்கள் சீட் நுனிக்குள் இழுக்கிறது.
 
கமாலினி முகர்ஜி சிறிது நேரம் வந்தாலும் நெஞ்சில் நிற்கிறார். தண்டபானி, சஞ்சனாபிரம்மாஜி ஆகியோரும் உள்ளனர். திரைக்கதை ஒன்றச்செய்கிறது. போலீஸ் துறைக்குள்ளேயே பெருமளவு காட்சிகள் நகர்வது சலிப்பு... பிரபாகர் வசனத்தில் பொறி.பரணி கே.தரன் ஒளிப்பதிவும் விஷ்வா இசையும் வேகப்படுத்துகின்றன.
 
மதிப்பீடு செய்க