கோர்ட்டில் டவாலி வேலை பார்ப்பவர் கரண். வழக்குகளில் இருந்து தப்பும் குற்றவாளிகளை தேடி பிடித்து போட்டுத்தள்ளுகிறார். அவரை பிடிக்க போலீஸ் வலை விரிக்கிறது.
காதலி ஹரிப்ரியாவுக்கு கரண் மேல் சந்தேகம் எழுகிறது. உண்மையை சொல்லும்படி நச்சரிக்கிறார். அவரை இழுத்து போய் ரகசிய அறையில் மனநிலை பாதித்து கிடக்கும் தந்தையை காண்பித்து இவர் யார் தெரியுமா? மாவட்ட நீதிபதி. என் தந்தை என்று ஆவேசமாக கத்த பிளாஷ் பேக்.
நீதிபதி தந்தை, மருத்துவம் படிக்கும் தங்கை, வக்கீலுக்கு படிக்கும் கரண் பாசமான தாயுடன் சந்தோஷமாக இருக்கிறது அந்த குடும்பம். கொலை வழக்கில் கோட்டா சீனிவாசராவுக்கு தண்டனை பெற்று கொடுக்க நீதிபதி தயாராகிறார். ஆவேசமாகும் கோட்டா அடியாட்களுடன் கரண் இல்லாதபோது வீட்டுக்குள் புகுந்து நீதிபதியின் எதிரில் மனைவி, மகளை உயிரோடு எரிக்கிறார். பிறகு மந்திரியாகிறார்.
கரண் டவாலியாகி குடும்பத்தை அழித்த கோட்டா சீனிவாசராவை பழிவாங்க துடிப்பது போல் பிளாஷ் பேக் முடிகிறது. கோட்டாவை தீர்த்து கட்டினாரா என்பது கிளைமாக்ஸ்.
கரணை முழு ஆக்ஷனுக்கு மாற்றியுள்ள படம். பாசத்திலும், வில்லன் கூட்டத்தை அழிப்பதிலும் அழுத்தம் பதிக்கிறார். மந்திரி கோட்டா சீனிவாசாராவை கொல்ல மறைந்திருந்து துப்பாக்கியால் குறிபார்க்கும் ஆரம்பமே பரபர... கரண் சுடுவதற்கு முன் இன்னொருவன் சுட்டு பாதுகாப்பு அதிகாரி சாவதும் பிடிக்காத அதிகாரியை கொல்ல தன்னால் ஏற்பாடு செய்யப்பட்டவன்தான் அவன் என்று மந்திரி பெருமையடிக்க இன்னொரு வன்கொலை செய்ய முயற்சிக்கிறான் என்று போலீஸ் மூலம் தெரிந்து பதறுவதும் விறுவிறுப் பானவை.
மாணவியை பலாத்காரம் செய்யும் தொழில் அதிபர் வக்கீல் வாதத்தால் விடுதலையாக அவரை கரண் கொல்வது திரில்... ஏழை பெண்ணிடம் மோசடி செய்யும் ரியல் எஸ்டேட் அதிபரை கொன்று போலீஸ் பிடியில் சிக்காமல் தப்புவது கைதட்டல். தாய்-தங்கை எரிந்து கிடப்பதை பார்த்து கதறும்போது பரிதாபப்பட வைக்கிறார்.
கரணை வக்கீல் என நினைத்து ஹரிப்பிரியா காதல் வயப்படும் சீன்கள் கலகலப்பானவை.
கோட்டா சீனிவாசராவ் வில்லத்தனத்தில் மிரட்டுகிறார். அவர் மகனாக வரும் சம்பத்ராஜ் கொடூர வக்கீல். இருவரும் கரணுடன் மோதும் கிளைமாக்ஸ் சண்டை உக்கிரம். வையாபுரி சிரிக்க வைக்கிறார். ராஜ்கபூர், தேவதர்ஷினி, ஆதித்யா ஆகியோரும் உள்ளனர்.
ஆக்ஷன் கதையை வித்தியாசமான களத்தில் விறுவிறுப்பாக நகர்த்துகிறார் இயக்குனர் கவின்பாலா. ஐந்து கொலைகள் செய்த கரணுக்கு நீதிபதி வெறும் ஐந்து வருட தண்டனை வழங்குவதில் லாஜிக் இல்லை.