திருமணத்துக்குப் பின்பும் தீராது நட்பு...!
Chennai
செவ்வாய்க்கிழமை,
மே 25,
10:13 AM IST
0
கருத்துக்கள்
மற்ற பார்வைகளை விட கவிதைப்பார்வை எப்போதுமே வித்தியாசமானது. அருமையானது. இந்த வகையில் நானும் கவிதைக்குள் என்னை இணைத்துக் கொண்டிருப்பதை பெருமையாகவே உணர்கிறேன்''என்கிறார், பார்வதி.
பெண் கவிஞர்கள் எப்போதாவதுதான் வெளிப்படுகிறார்கள். எம்.ஏ.ஆங்கில இலக்கியம் முடித்து எம்.பில்.லும் நிறைவு செய்த பார்வதி, இப்போது தமிழில் கவிஞராக தடம் பதித்திருக்கிறார். எண்ணங்களை கவிதைக் கோர்வையாக்கி இவர் படைத்த கவிதைகள் `இப்படிக்கு நானும் நட்பும்', `இது வேறு மழைக்காலம்' என்ற தலைப்புகளில் புத்தகவடிவிலும் வெளியாகி இலக்கிய ரசிகர்களை ஈர்த்திருக்கிறது.
"நான் கவிஞர்ஆவதற்கு பள்ளிநாட்களில் எனக்கு அமைந்த தமிழாசிரியர்கள் தான் முழுமுதற் காரணம். ஆசிரியர்கள் சொன்னபடி தமிழை அழகாக உச்சரிக்கும்போது அந்த வார்த்தைகளில் ஒருவித அழகுணர்ச்சி கூடித்தெரிந்தது. எனக்குள் கவிதை புறப்படத் தொடங்கியது 7-வதுபடித்த கால கட்டத்தில் தான். அந்த வகுப்பில் தமிழாசிரியையாக இருந்த சாவித்திரியம்மா என் கவியார்வத்துக்கு துணையாக இருந்தார். அப்போதே கவிதையில் என்னை கவிஞர் மு.மேத்தா கவர்ந்தார்.
கல்லூரி மாணவியாக எத்திராஜ் கல்லூரியில் அடியெடுத்து வைத்தபோது நட்பு வட்டத்தில் ஒரு கவிஞராகவே அறியப்பட்டேன். கல்லூரி ஆண்டுமலரில் என் கவிதைகள் இடம் பிடிக்கத் தொடங்கின. இந்த காலகட்டத்தில் கவிஞர்அறிவுமதி எழுதிய `நட்புக்காலம்' கவிதைத்தொகுப்பு என்னை ரொம்பவே கவர்ந்தது. ஆண்-பெண் நட்பைப் பற்றி அந்த கவிதைத் தொகுப்பில் அவர் சொல்லியிருந்த விதம் என்னைக் கவர, இதேமாதிரியான ஆண்-பெண் நட்பை ஒரு பெண் எழுதினால் நன்றாக இருக்குமே என்று தோன்றியது. அந்தப்பெண்ணாக நாமே ஏன் இருக்கக்கூடாது என்று ஒரு எண்ணம் எனக்குள் அலையடிக்க, நான் எழுதியது தான் `இப்படிக்கு நானும் நட்பும்' என்ற கவிதைத்தொகுப்பு.''
"ஒரு பெண், ஆண் நட்பு பற்றி எழுதும்போது அதுவே பிரச்சினையாகி விடாதா?''
"இது நம் சமூகப்பார்வை. அதேநேரம் தூய்மையான ஆண்-பெண் நட்பு இருக்கவே செய்கிறது. குடும்பத்தில் உள்ளவர்கள், நட்பு வட்டம் புரிந்து கொள்வதைப் பொறுத்து இந்த நட்பின் ஆயுள் நீடிப்பதோ, குறைவதோ நடக்கிறது.''
"அதற்கு கிடைத்த விமர்சனம் எப்படி இருந்தது?''
"எனக்கு நேர்மையான விமர்சனங்கள் பிடிக்கும். மற்றவர்களுக்காக நாம் ஒருபோதும் வாழக்கூடாது. நமக்கு சரியென்று படுவதை செய்வதில் தப்பொன்றும் இல்லை. ஆண்-பெண் நட்பு விஷயத்தில் ஒரு சிலருக்கு வேண்டுமானால் கசப்பான அனுபவங்கள் ஏற்பட்டிருக்கலாம். ஆனால் அந்த மாதிரியான அனுபவங்கள் தான் மற்றவர்களை சென்றடைகிறது. உயர்வான நட்பு எப்போதுமே பிரச்சினைமேடையை சென்றடைவதில்லை. ஆண் நண்பர்கள், பெண் தோழிகள் மாதிரி ஆண்-பெண் தோழமை என்பதும் உயர்வான விஷயமே''
"சுலபமாக சொல்லிவிட்டீர்கள். ஆனால் இப்படியான ஆண்-பெண் நட்பானது, நட்புக்குரிய பெண்ணின் திருமணத்துக்குப் பிறகு தொடரஇயலாத சூழல்தானே நம்மில் நீடிக்கிறது?
"இது நமக்குள் நாமாக எற்படுத்திக் கொண்ட தடை. உண்மை நட்புக்கு தடைகள் வந்தாலும் தடைகளை ஏற்படுத்தியவர்களே புரிந்து கொள்ளும் காலமும் வரும். அப்போது நட்பு இன்னும் இறுக்கம் கூட்டிக் கொள்ளும். அடுத்து நான் எழுதிய `இது வேறு மழை' கவிதைத்தொகுப்பு'' நான் பார்த்த, ரசித்த, கேட்ட அனுபவங்களின் படையல்.''
"பெண் கவிஞர் என்ற முறையில் திரையிலும் உங்களை வெளிப்படுத்தலாமே?''
"அதற்கான வாய்ப்பு விரைவில் கைகூடும் என்ற நம்பிக்கை இருக்கிறது. பொதிகை சேனலின் `நம் விருந்தினர்' நிகழ்ச்சிக்காக டைரக்டர் ஏ.ஆர்.முருகதாசை ஒருமுறை பேட்டி கண்டேன். அவர் ஒரு இயக்குனர் மட்டுமின்றி மிகச்சிறந்த எழுத்தாளரும் கூட என்பதை புரிந்து கொண்டேன்.''
"பிரபலங்கள் பாராட்டிய உங்கள் கவிதைகளைக் கூறுங்கள்?''
"பிறந்த நாளுக்கு வாழ்த்தாமல்
உழைக்கும்மகளிர்தினத்தன்று
பூங்கொத்தை நீட்டி
பளிச்சென்று சிரித்தாயே,
உனக்குத் தெரியுமா
அன்று நீ என்னை
அழ வைத்தாயென்று?
- இந்தக் கவிதை பலரின் பாராட்டைப் பெற்றது''
"நடிப்பில் ஆர்வம் உண்டா?''
"ஞானியின் பரிக்ஷா நாடக குழுவின் ஒரு குறும்படத்தில் நடித்த அனுபவம் இருக்கிறது. ஆனால் சினிமாவில் நடிக்கும் எண்ணமில்லை.''
"இன்றைய அவசர உலகின் வேகமான வாழ்க்கை முறை உங்களுக்குப் பிடித்திருக்கிறதா?''
"எதற்கு அவசரம், ஏன்அவசரம் என்று புரியாமல் அவரவர் ஓடிக்கொண்டிருப்பதை நானும் பார்க்கவே செய்கிறேன். உறவினர்களுக்கு அன்பைக் கொட்டி கடிதம் எழுதிய காலமெல்லாம்போய் அப்புறமாய் போனில்பேசினோம். இப்போது செல்போன் வந்தபிறகு வெறும் எஸ்.எம்.எஸ். வழியாக மட்டும் தகவல் அனுப்பி, உறவுகளைக்கூட மவுனச்செய்திகளுக்குள்அடக்கி விட்டோம். இதுபற்றிக்கூட எனது `இது வேறு மழை' கவிதைத் தொகுப்பில் கவிதையாக வடித்திருக்கிறேன்.
இப்போதெல்லாம்
குறுஞ்செய்தியில்
வாழ்த்தும் காதலும்
பிரிவும் மன்னிப்புமாய்
குறுகி விட்டது
வாழ்க்கை வட்டம்''
பார்வதியின் அப்பாவுக்கு மின்துறையில் பணி. அம்மா குடும்பத் தலைவி. உடன்பிறந்தவர்கள் ஒரு ஒரு அண்ணன். ஒரு தங்கை.
0
கருத்துக்கள்