காஷ்மீர் பெண்களின் `காவலர்'
Chennai
சனிக்கிழமை,
மே 22,
10:43 AM IST
0
கருத்துக்கள்
காஷ்மீர் பெண்களுக்கு முன்னுதாரணமாக திகழ்பவர் மெகபூபா. இவர் ஜம்மு காஷ்மீரின் முன்னாள் முதல் மந்திரி முப்தி முகமது சயீத்தின் மகள். கட்சித் தலைவர், எதிர்கட்சித் தலைவர், எம்.எல்.ஏ., என பல பதவிகளிலும் ஜொலித்துக் கொண்டிருக்கும் மெகபூபா, காஷ்மீர் பெண்களின் காவலர் என்றால் அது மிகையில்லை.
சில மாதங்களுக்கு முன்னர், `பாலியல் வழக்கில்' காஷ்மீர் சட்டசபையில் உமர் அப்துல்லாவுக்கு எதிராக சபாநாயகரின் மைக்கை பிடுங்கி, எறிந்து புயலைக் கிளப்பியவரை யாரும் மறந்திருக்க முடியாது. பாகிஸ்தான் அதிபர் ஆசிப் அலி சர்தாரி, `காஷ்மீர் தங்கை' என்று இவரை கூறினார் என்பது குறிப்பிடத்தக்கது.
``ஒரு அரசியல்வாதியாக பார்த்தால் என்னுடைய போராட்டம் சரியான பாதையில் போய்கொண்டிருக்கிறது என்றாலும் காஷ்மீரில் விரைவில் பூரண அமைதி நிலவ வேண்டும் என்பதே எங்களுடைய விருப்பம். அதற்காக பாடுபட்ட தலைவர்களின் வழியில் நாங்களும் போய் கொண்டிருக்கிறோம்'' என்கிறார், மெகபூபா.
* காஷ்மீர் பிரச்சினை தொடர்கதையாக தொடர்ந்து கொண்டிருக்கிறதே... இதற்கு முடிவே கிடையாதா? என்று கேட்டால்,
``இதைத் தான் எங்கள் மக்களும் கேட்டுக் கொண்டிருக்கிறார்கள். இந்த விஷயத்தில் மற்ற நாடுகள் தலையிட தேவையில்லை. இந்தியாவும், பாகிஸ்தானும் இணைந்து பேசி, காஷ்மீரை ஒருங்கிணைக்க வேண்டும் என்பதே எங்கள் விருப்பம்.''
* காஷ்மீர் பிரச்சினை தீர... உங்களுடைய ஆலோசனை என்ன?
``சுயாட்சி என்பதே இதற்கு நல்ல தீர்வு. இதைத் தான் எங்களுடைய மக்கள் ஜனநாயக கட்சி கூறி வருகிறது. முதலில் இருநாடுகளின் வசம் உள்ள காஷ்மீர் மீட்கப்பட்டு அனைத்து பகுதிகளும் ஒன்றாக இணைக்கப்பட வேண்டும். பின்னர் இருநாட்டு பிரதமர்களும் பேசி முடிவெடுத்து, காஷ்மீரின் முன்னேற்றத்திற்கு வழி வகுக்க வேண்டும்.''
* தற்போது பாகிஸ்தானில் உள்ள சூழலில், இது சாத்தியமா?
``பாகிஸ்தானில் சில நேரங்களில் இந்த மாதிரியான சூழல் ஏற்படும். ஆனாலும் அவர்கள் சரியாக செயல்படுவார்கள் என்ற நம்பிக்கை உள்ளது. முன்னாள் பிரதமர் வாஜ்பாய் இதற்கான முன்னோட்டமாக லாகூருக்கு சென்றார். ஆனாலும் சில விஷயங்களால் காஷ்மீர் பிரச்சினை தீர்க்கப்படாமலேயே உள்ளது. தற்போதும் இங்குள்ள அரசியல்வாதிகளால் இந்த பிரச்சினை ஊதி ஊதி பெரிதாக்கப்படுகிறது.''
* காஷ்மீர் பிரச்சினை நல்ல முடிவுக்கு வரும் என்ற நம்பிக்கை உள்ளதா?
``கண்டிப்பாக நல்ல தீர்வு கிடைக்கும். அதனால் தான் சுயாட்சியை நாங்கள் முன்னிறுத்தி செயல்பட்டு வருகிறோம். காஷ்மீரின் பாதுகாப்பு மற்றும் பொருளாதார முன்னேற்றத்தை கருத்தில் கொண்டு அரசு செயல்பட்டால் கண்டிப்பாக தீர்வு கிடைக்கும்.''
* காஷ்மீர் சட்டசபையில், நீங்கள் சபாநாயகரின் மைக்கை, பிடுங்கி பிரச்சினை பண்ணியதைப் பார்த்தால் அரசியல் முதிர்ச்சி தெரியவில்லையே..?
``அங்கு நடந்ததே வேறு. நான் மைக்கை பிடுங்கி சபாநாயகரை நோக்கி எறிந்ததாக கூறுவது தவறு. ஏற்கனவே சோபியன் கற்பழிப்பு தொடர்பான பிரச்சினையைப் பற்றி சட்டசபையில் பேச, முன்னரே சபாநாயகரிடம் அனுமதி வாங்கியிருந்தோம். ஆனால் சட்டசபையில் அதைப் பற்றி நான் பேசும்போது, உமர் அப்துல்லா குறுக்கிட, சபாநாயகர் ஒன்றும் சொல்லவில்லை. என்னை பேச விடாமல் தடுப்பதில் குறியாக இருந்தார் சபாநாயகர். அதனால் அவருக்கு அருகில் சென்று பேசினேன். அப்போது மைக் குறுக்கே இருந்ததால் அதை தள்ளிவிட்டேன். அவ்வளவுதான்...! ஆனால் பிரச்சினையை வேறு விதமாக திருப்பி விட்டார் உமர்!''
* காஷ்மீர் பண்டிட் பிரச்சினையை எப்படி எடுத்துக் கொள்கிறீர்கள்?
``காஷ்மீர் பண்டிட் அனைவருமே, தங்களுடைய பூஜை மற்றும் சமையல் அறைகளில் ரோஜாக்களை வைத்திருப்பார்கள். அதன் நறுமணம் மிகவும் அருமையாக இருக்கும். ரோஜாக்களைப் போலவே அவர்களையும் மதிக்கிறேன்.''
* முகத்தை மறைக்கும் துணி மற்றும் கோட் விசேஷமாக அணிந்துள்ளீர்களே?
``என்னுடைய வசதிக்காக இவற்றை அணிந்துள்ளேன். 96-ம் ஆண்டில் ஹஜ்ஜ×க்கு சென்றபோது என்னுடைய அம்மா, இந்த துணியை வாங்கிக் கொடுத்தார். அவருடைய நினைவாக இதை அணிகிறேன். பொது இடத்தில் இதை அணிந்து கொள்வது எனக்கு வசதியாக இருக்கிறது...!''
0
கருத்துக்கள்