பள்ளி மாணவிகளுக்கு கோடை விடுமுறை என்றால் அளவுக்கு மீறிய தூக்கம் வந்துவிடுகிறது. தூங்கியே பொழுதை தொலைத்துக் கொண்டிருப்பார்கள். எல்லா மாணவிகளையும் போல் சமீராவிற்கும் தூங்குவதற்குத்தான் அதிக ஆசை. அந்த நேரத்தில் எல்லா அம்மாக்களும் சொல்வர்களே அதுபோல் சமீராவின் அம்மாவும், `இப்படியே தூங்கி பொழுதை கழிக்காதே.. கோடை விடுமுறையில் நல்ல கலை ஏதாவது ஒன்றை கற்றுக்கொள். அது எதிர்காலத்திற்கு நன்றாக கைகொடுக்கும்' என்றார். அம்மாவின் தொந்தரவு தாங்க முடியாத சமீரா தையல், ஓவியம், பெயிண்டிங் போன்றவைகளை கற்றுக்கொள்ளச் சேர்ந்தார். அவைகள் அப்படியே மனதுக்கு பிடித்துப்போய், அவைகளிலே முழுமையாக ஈடுபட்டு தனது கற்பனை உலகை விரியச் செய்த இவர் தற்போது சினிமாக்களுக்கு காஸ்ட்ïம் டிசைனர் ஆகிவிட்டார்.
"என்னிடம் ஒரு சினிமாவின் கதையைச் சொல்லும்போதே, அந்த கதாபாத்திரங்களை பென்சிலால் மனதுக்குள் ஸ்கெட்ச் போடத் தொடங்கிவிடுவேன். பின்பு அப்படியே கலர் கொடுக்கும்போது வண்ண வண்ண உடைகள் என் மனதில் பூக்கத் தொடங்கிவிடும். ரசிகர்கள் சினிமா பார்த்துவிட்டு திரும்பும்போது அவர்கள் மனதில் இருந்து கதாபாத்திரங்கள் மறந்தாலும், படத்தில் இடம்பெற்ற உடைகள் மறக்கக்கூடாது''-என்கிறார், சமீரா.
கொச்சியைச் சேர்ந்த இவர், பள்ளிப் படிப்பை முடித்துவிட்டு அங்குள்ள நேஷனல் இன்ஸ்டிட்ïட் ஆப் பேஷன் டிசைன் நிறுவனத்தில் சேர்ந்தார். அங்கு படிப்பில் முதலிடத்தை பிடித்த இவர், முதலில் விளம்பர படங்களில் மாடல்களுக்கு உடைகள் வடிவமைக்கும் பணியைத் தொடங்கினார். பின்பு வீட்டின் அருகிலே ஆடை வடிவமைப்பு நிறுவனம் ஒன்றையும் தொடங்கினார். இவர் முதன் முதலில் `ஒயிட் எலிபென்ட்' என்ற இந்தி சினிமாவிற்கு ஆடை வடிவமைத்தார்.
"விளம்பரங்களுக்கு இரண்டு, மூன்று நாட்களில் உடைகளை தயார் செய்துவிடலாம். சினிமா என்றால் ஒரு மாதத்திற்கு முன்பே தயார் செய்ய வேண்டியதிருக்கும். சின்னச் சின்ன தவறுகள்கூட ஏற்படாத அளவிற்கு கவனத்துடன் உடைகளை வடிவமைக்க வேண்டும். தமிழகத்தில் ஏதாவது ஒரு மூலையில் படப்பிடிப்பு நடக்கும்.
நாம் உருவாக்கும் உடையில் ஏதாவது ஒரு தவறு நடந்திருந்தால், நம்மால் அந்த படப்பிடிப்பையே தள்ளிவை த்துவிடக்கூடிய சூழ்நிலை ஏற்பட்டுவிடும்''- என்று கூறும் இவர், ஒருதடவை பிரபல நடிகர் ஒருவருக்கு அரைக்கை சட்டை தைத்திருக்கிறார். ஆனால் அந்த நடிகர் அரைக்கை சட்டை அணிந்து நடிக்கவே மாட்டார் என்பது அதன் பின்புதான் சமீராவிற்கு தெரிந்திருக்கிறது.
இவர் தினமும் ஷாப்பிங் செய்யும் வழக்கம் கொண்டிருக்கிறார். தனது தொழிலுக்கு தேவையான உடைகளுக்காக தினமும் துணிகடைகளில் ஏறி இறங்குகிறார். பிடித்தமான உடைகள் கிடைத்துவிட்டால் உடனே அதை வாங்கிவிடுகிறார். தேவைப்படும்போது அவைகளை பயன்படுத்திக் கொள்கிறார். சில நடிகைகளின் உடை ரகசியங்களை இவர் வெளிப்படுத்துகிறார்.
"மீரா ஜாஸ்மின் ஜீன்ஸ் அணிந்துகொண்டு திரையில் தோன்றமாட்டார். உடல்வாகுக்கு அது ஏற்றதாக இல்லை என்று அவர் கருதுகிறார். தனது உடல்வாகுக்கு எந்த உடை பொருத்தமாக இருக்கும். எந்த உடை சரியாக இருக்காது என்பது அவருக்கு நன்றாகத் தெரியும். அதுபோல் நயன்தாராவும் உடைகள் விஷயத்தில் ரொம்ப கவனமாக இருப்பார்''- என்கிறார்.
சமீரா காதல் கலப்பு மணம் செய்தவர். கணவர் பெயர் சனீஷ்.