கஞ்சாகருப்பும், காவேரியும் பாசமான அண்ணன்-தங்கை. முறை மாப்பிள்ளை ரியாஸ்கான். எதிர்வீட்டில் வசிக்கும் ராம்ஜி-சங்கீதா தம்பதியுடன் காவேரி பிரியமாக பழகுகிறார். அதே ஊருக்கு கேரளாவில் மாய மந்திரங்கள் கற்ற ரியாஸ்கானின் நண்பன் வர திருப்பம்.
மாயாஜால வித்தைகளில் வியப்பாகிறார் ரியாஸ். கன்னிப்பெண் ஒருத்தியை பலி கொடுத்தால் இன்னும் சக்தி கிடைக்கும் கோடி கோடியாய் சம்பாதிக்கலாம் என மந்திரவாதி ஆசைகாட்டுகிறான். ரியாஸ்கான் முறைப்பெண் காவேரியை அழைத்து வந்து மந்திரிவாதியிடம் ஒப்படைக்கிறார். பூஜைகள் செய்து காவேரியை உயிரோடு எரிக்கிறார்கள். தங்கையை காப்பாற்ற ஓடி வரும் கஞ்சா கருப்பும் அதே தீயில் எரிந்து சாகிறார்.
காவேரி ஆவி சங்கீதா மகள் சிறுமி கீத்தீகா உடம்புக்குள் புகுகிறது. கஞ்சா கருப்பு ஆவி அவர் வாடகைக்கு ஓட்டிய காருக்குள் நுழைகிறது.
சிறுமியும், காரும் சேர்ந்து கொலை கும்பலை பழி தீர்ப்பது மீதி கதை...
கிணற்றுக்குள் வசிக்கும் அம்மனாக வரும் ரம்யா கிருஷ்ணன். அவரை கடவுள் என்றும் பராமல் இழித்து பேசி கண்களை இழக்கும் ஆங்கிலேய அதிகாரி நாசர். அவருக்கு சாரட் வண்டி ஓட்டுபவராக வரும் பக்தர் கஞ்சா கருப்பு தனது சந்ததியை காக்குமாறு அம்மனிடம் வேண்டுவது என இரு நூறு வருடங்களுக்கு முந்தைய சம்வங்களை அறிமுக காட்சிகளாக்கி இக்கால கட்டத்துடன் முடிச்சு போட்டுள்ளனர்.
காவேரியை பலியிட மர்ம பங்களாவுக்குள் ரியாஸ் அழைத்து செல்வது திக்... திக்... அண்ணன், தங்கை இருவரும் நெருப்பில் சாவது திகில்.
சிறுமி கீத்தீகா உடலிலும் பழைய காருக்குள்ளும் ஆவிகள் புகுந்ததும் காட்சிகள் றெக்கை கட்டுகின்றன. வில்லன்களை கார் விரட்டுவதும் அதே கார் ராட்சத எந்திர மனிதனாக மாறி கார்களை தூக்கி வில்லன்கள் மீது வீசுவதும் ஹாலிவுட் பயமுறுத்தல். வாயில் நெருப்பை கக்கி ஒருவனை சிறுமி எரித்து கொள்வது பயங்கரம்.
நள்ளிரவில் கதவை தட்டி இழவுக்கு போய்ட்டு வந்திருக்கேன் தலை முழகணும் தண்ணி கொடு என்று சங்கீதாவிடம் சிறுமி கோபமாக கேட்பதும் மறுநாள் காலை டி.வி.யில் ஒருத்தன் எரித்து கொல்லப்பட்ட செய்தி பார்த்து குடும்பமே உதறுவதும் அதிர்ச்சி.
வில்லன் கூட்டத்துக்கு உதவும் குள்ள மந்திரிவாதி தண்டபாணி வருகைக்கு பின் சீன்கள் இன்னும் வேகம் எடுக்கின்றன. கீத்தீகா உடலில் இருந்து காவேரி ஆவியை அவர் குடும்பத்தார் மூலமாகவே விரட்ட தண்டபாணி இன்னொரு கீத்தீகாவாக உருவெடுத்து தந்தை, தாத்தா முன்னிலையில் அசைவ ஓட்டலுக்கு சென்று மட்டன், சிக்கன் என வெட்டுவது... புத்தக பைக்குள் இருந்து பாட்டிலில் ரத்தத்தை எடுத்து குடிப்பது கலகலப்பு.
காவல் தெய்மாக வரும் ரம்யாகிருஷ்ணன், விழிகளை அகல விரித்து மிரள வைக்கிறார். கஞ்சா கருப்பு பாசக்கார அண்ணனாகவும் லிவிங்ஸ்டன் சிரிப்பு போலீசாகவும் அழுத்தம் பதிக்கின்றனர். கார் எந்திர மனிதனாக மாறி செய்யும் கிராபிக்ஸ் அட்டகாசங்கள் குழந்தைகளை குதிக்க வைக்கும் கிராபிக்ஸ் அட்டகாசங்கள்.
பேய் பிடித்த குழந்தைகளை வைத்து திண்டாடும் ராம்ஜி, சங்கீதா, டெல்லி கணேஷ் பாத்திரங்கள் முத்திரை. பழி வாங்கும் ஆவி கதையை ஹைடெக் தரத்தில் விறுவிறுப்பாக நகர்த்துகிறார் இயக்குனர் ராமநாரயாணன். தேவா இசையில் பாடல்கள் துள்ளாட்டம் போட வைக்கின்றன. கே.எஸ்.செல்வராஜ் ஒளிப்பதிவு பலம்.